Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

திருநெல்வேலி மாவட்ட இயற்கை சூழ்ந்த இடங்கள்


திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. .

இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.
திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.

அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.

"மாஞ்சோலை' நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க பகுதியாகக் காட்சி தருகிறது. எங்கு நோக்கினும் தேயிலைத் தோட்டங்கள், காலை முதலே தேயிலை பறிக்கத் தொடங்கிவிடும் தொழிலாளர்கள், எப்போதும் குளுமையான சூழல்.
வனப்புமிக்க இந்த இடம் சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்படும் பகுதி. .

காடுகளில் புலிகளும், யானைகளும், கரடிகளும், காட்டுப்பன்றிகளும் அவ்வப்போது வலம் வரும். "உடும்பு' என்ற ஓர் இனமும் இங்கு உண்டு. இராஜநாகம்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். .

இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமப் பகுதிகளிலிருந்து வேலைக்காக இங்கு வந்து குடியேறியவர்கள்தாம். இவர்கள் தங்கி வேலை செய்வதற்காகத் தேயிலைத் தோட்ட நிர்வாகமே வீடுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள இப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான விடுதி வசதிகள் எதுவும் இல்லாததால் காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பிவிட வேண்டியதுதான். .

இங்கு அவ்வப்போது மழை பெய்வதும், வெயில் அடிப்பதும், நல்ல காற்று வீசுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதுமே இதன் சிறப்பு.
சிறு அளவிலான உணவு விடுதிகள் உள்ளன. தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலையும், தேயிலைத் தோட்ட நிர்வாகமே நடத்தும் தொடக்கப் பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியும், அஞ்சலகமும் உள்ளன. .

வழக்கமாகச் சென்று வரும் பேருந்துகளில் சென்று வருவதற்கு அனுமதி தேவையில்லை. சொந்தக் காரிலோ, வாடகைக் காரிலோ செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்து ஒரு நாளைக்கு நான்கு முறையும், பாபநாசத்திலிருந்து 4 முறையும் இயக்கப்படுகின்றன. மாஞ்சோலையில் கிடைக்கும் தேயிலை சுவையாகவும், மணமாகவும் இருக்கிறது. தேயிலைத் தொழிற்சாலைகளில் அனுமதி பெற்றுத் தேயிலைப் பொட்டலங்களை விலைக்கு வாங்கலாம். .

அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள வாட்சிங் டவரில் ஏறி நின்று பார்த்தால் நாலாபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

மாஞ்சோலைக்கும் மேல் சுமார் 15 கி.மீ. சென்றால் ""ஊத்து'' என்ற பகுதியை அடையலாம்.
"ஆர்கேனிக் டீ' என்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படுபவை. விலை மிகுந்த தரமான இந்தத் தேயிலை இங்குள்ள "ஊத்து ஆர்கேனிக் டீ ஃபேக்டரி'யில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு வசிப்பவர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கல்லிடைக்
குறிச்சிக்குச் செல்ல வேண்டும்.

மாஞ்சோலையில் 50 ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பெரியவர் சுப்பையா நல்ல அனுபவம் வாய்ந்தவர். மனோதிடம் மிக்கவர். அவரிடம் மாஞ்சோலை அனுபவங்களைப் பற்றிக் கேட்டபோது:
""இங்கு புலி, கரடி, யானை, காட்டுப்பன்றி, உடும்பு போன்றவை அடிக்கடி வந்து போகும். வீட்டிற்கு அருகில் உள்ள மாடுகளையும், நாய்களையும், கோழிகளையும்கூட, எத்தனையோ தடவைகள் உணவுக்காகப் புலிகள் கொண்டு சென்றுள்ளன. ஆனால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் இதுவரை ஏற்படுத்தியதில்லை'' என்கிறார்.

மலைப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும். மாஞ்சோலைப் பகுதி முழுவதும் வனத்துறையைச் சார்ந்தது. இதில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிர்வாகமே அத்தனை தேயிலைத் தோட்டங்களையும நிர்வகித்து வருகின்றது. .

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம்கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழிலை உள்ளவாறு காணமுடிகிறது. .

(திரு இரா.இராஜாராம் அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை படித்ததிலிருந்தே இந்த இடங்களைப் பார்க்க ஆவல் பன்மடங்கு ஏறியுள்ளது. பொங்கலுக்கு போகலாம் ன்னு இருக்கேன். அதுக்குள்ள எல்லா விவரங்களையும் சேகரிக்கணும். .

கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்த இடங்களுக்கு முன்னாடியே போயிருப்பவர்கள் இந்த சுற்றுலா பற்றிய தகவல்கள் தந்தால் நல்லாருக்கும்)

No comments:

Post a Comment