Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 19, 2013

பிரசவத்தை எளிதாக்க

பிரசவத்தை எளிதாக்க கார் மெக்கானிக் கண்டுபிடித்த புது கருவி


 நியுஜெர்சி: அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.


அன்று இரவு தூக்கத்திலிருந்து திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார்.இதுகுறித்து டாக்டர் மரியோ கூறியதாவது:மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.  இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம்  சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு  ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.  இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment