Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 17, 2013

கட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி?


வீடு கட்டுவதற்கு ஆகும் செலவைக் கேட்டாலே பலருக்கும் தலை சுற்றி விடுகிறது. எகிறிக் கொண்டே இருக்கும் மனையின் விலையும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமும் வீடு வாங்குவோருக்கும் கட்டுபவர்களுக்கும் பெரும் சவாலாக இருந்துவருகிறது.
வீடு கட்டியவர்களும், வாங்கியவர்களும் சொல்லும் அனுபவப் பாடங்களைக் கேட்டால் பலருக்கு வீடு கட்டும் ஆசையே போய்விடும். வீடு கட்டுவதற்கு என்று ஒரு பட்ஜெட் போட்டால், அதையும் தாண்டி செலவு எங்கோ சென்று விடுவதுதான் தற்போதைய நிலை.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சரிவரத் திட்டமிடாததே. மனையின் விலை மற்றும் சந்தை மதிப்பைப் பொறுத்து மாறுபடும் என்பதால் நம் கையில் ஒன்றும் இல்லை. ஆனால் கட்டுமானத்தைப் பொறுத்தவரை நாம்தான் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கிறோம். கட்டுமானச் செலவுகளைக் கட்டுப்படுத்த எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்ற நமக்கு உரிமை இருக்கிறது. அந்த வழிமுறைகளையெல்லாம் பின்பற்றவும் செய்யலாம். கட்டுமானச் செலவைக் குறைக்க என்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதை முதலில் பார்ப்போம்.
கைகொடுக்கும் தொழில்நுட்பங்கள்
இன்றைய நவீனத் தொழில் நுட்ப உலகில் புதிய தொழில் நுட்பங்களைக் கட்டுமானத்தில் புகுத்துவதன் மூலம் செலவினங்களைக் குறைக்க முடியும். இதே போல வழக்கமாகக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் பொருட்களைத் தவிர்த்து மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் செலவினங்களைச் சற்றுக் குறைக்க முடியும். வராண்டா, மாடி கைப்பிடி சுவர், பாத்ரூம், வெண்டிலேட்டர் ஆகியவற்றில் கிரில்கள் அமைப்பதற்குப் பதிலாக வலுவான சிமெண்ட் கிராதிகள் அமைக்கலாம். கட்டுமானத்தில் அதிகச் செலவை ஏற்படுத்தும் செங்கல்லைக் குறைந்த அளவில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் இப்போது வந்துவிட்டன. புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 25 சதவீத அளவு செங்கற்களின் அளவைக் குறைத்துச் செலவைக் கட்டுப்படுத்தலாம். தரை அமைப்பதற்கு மார்பிள், கிரானைட் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு மாற்றாக லினோலியம், வினைல் ஆகியவற்றால் ஆன தரையை அமைக்கலாம் என்கிறார் திருச்சியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜகோபால்.
நாட்டு மரங்களில் கதவு
கதவு, ஜன்னல்களுக்குத் தேக்கு மரங்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாக நாட்டு மரங்களைப் பயன்படுத்தித் தேக்கு பாலீஷ் அடித்தால் அசல் தேக்கு மரம் போலவே காட்சியளிக்கும். இதேபோல வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டைப் பயன்படுத்தி உத்திரங்கள்(லிண்டெல்) அமைப்பதற்குப் பதிலாகச் செங்கற்களைச் செங்குத்தாக அடுக்கி அவற்றின் வெற்றிடத்தில் இரும்பு கம்பிகளை இணைப்பதன் மூலம் சிக்கனமாகவும் அதிகப் பாரம் தாங்கக் கூடிய உத்திரங்களையும் உருவாக்க முடியும்.
மாற்று செங்கற்கள் இருக்கே
இதே போல சாதாரண செங்கற்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் பிளை ஆஷ் செங்கற்களைப் பயன்படுத்தலாம். இந்தச் செங்கற்களைப் பூச்சு வேலையின்போது பயன்படுத்துவதன் மூலம் 10 சதவீத சிமெண்ட் மிச்சப்படுத்த முடியும். தற்போது சிமெண்ட் கலவை பயன்படுத்தாமல் சுவர்களை இணைக்கும் இன்டர்லாக்கிங் கற்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனால் கட்டுமானக் கூலி ஆட்களின் செலவை மிச்சப்படுத்தலாம்.
சிமென்ட் கலவைக்குப் பயன்படுத்தும் மணல் அவ்வப்போது விலை உயர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவது வழக்கமாகும். இதைத் தவிர்க்கச் செயற்கை மணல் என்று கூறப்படும் கல் குவாரிகளிலிருந்து பெறப்படும் மணல் துகள்களைப் பயன்படுத்திச் செலவைக் குறைக்கலாம். ஆற்று மணலுடன் மூன்றில் ஒரு பங்கு செயற்கை மணல் சேர்த்தால் கட்டுமானத்தின் தரம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது கட்டுமானப் பொறியாளர்களின் கருத்தாகும்.
பிளாஸ்டிக் தொட்டிகள் போதும்
சில கட்டுமானங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் மூலமும் செலவைக் குறைக்கலாம். தண்ணீர்த் தொட்டி, செப்டிக் டேங்க் ஆகியவற்றை செங்கற்கள் கொண்டு கட்டுமானத்தை மேற்கொள்வதைத் தவிர்த்து தற்போது சந்தைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கிப் பயன்படுத்தலாம். இப்படி ஒவ்வொன்றையும் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்டால் வீடு கட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் வீட்டைக் கட்டி முடித்து, மகிழ்ச்சியாகப் புதுமனை புகுவிழா நடத்திக் குடியேறிவிடலாம்.

No comments:

Post a Comment