Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 21, 2013

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும்: கருணாநிதி

குலசேகரப்பட்டினத்தில் 3-ஆம் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-


இஸ்ரோ தனது மூன்றாம் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆகஸ்ட் 19-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில் நெல்லை மகேந்திரகிரியில் வான்வெளி - திரவ எரிவாயு மையமும், தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ராக்கெட் ஏவுதளமும் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் ஏற்கெனவே உள்ளன.

3-வது ஏவுதளம் அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம் குலசேகரப்பட்டினம்தான் என்று இஸ்ரோவைச் சேர்ந்த நிபுணர்களும் வலியுறுத்தினர்.ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அறிவியல் அடிப்படையிலும், பூகோள ரீதியாகவும், பாதுகாப்புக் கோணத்திலும் மிகவும் பொருத்தமானது குலசேகரப்பட்டினம்தான்.

திரவ இயக்க உந்து மைய ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மோகனும், ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினமே ராக்கெட் ஏவுதளத்துக்குச் சிறந்த இடம். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவினால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை குறைவான பயண நேரத்தில் கடந்துவிட முடியும். பயண நேரம் குறைவதால், எரிபொருள் மீதமாகி செயற்கைக்கோளின் ஆயுள் இரண்டு ஆண்டுகள் வரை கூடுதலாகும். ரூ.110 கோடி வரை மீதப்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இஸ்ரோ நிபுணர்கள் முன்பு கூறியதுபோல குலசேகரப்பட்டினத்தை ஆய்வுக்கே எடுத்துக் கொள்ளாமல், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி விட்டனர்.

குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப் படுவதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன.இஸ்ரோவில் கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் செல்வாக்குதான் அதிகமாக இருப்பதுதான் அதற்குக் காரணம் என்கின்றனர்.

புதிய இடம் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பேராசிரியர் நாராயணா தலைமையிலான குழுவில் இடம்பெற்றவர்களில் 4 பேர் ஆந்திரம். 2 பேர் கேரளம். தமிழர் ஒருவர் மட்டும்தான். அதனால் ஆந்திரத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.புதிய இடத்துக்காக ஆந்திர முதல்வரைச் சந்தித்த குழுவினர், தமிழக முதல்வரைச் சந்திக்கக்கூட இல்லை.

ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்தால் நேரடியாக 4 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.அதிகபட்சம் ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடுகள் வரும்.

இது தொடர்பாக பிரதமருக்கு ஆகஸ்ட் மாதம் நான் (கருணாநிதி) கடிதம் எழுதிய பிறகாவது, அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தப் பிரச்னையில் அரசு முனைப்பு காட்டவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்

No comments:

Post a Comment