Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 18, 2013

வெற்றிக் கதை


"அப்பா இனி ஆட்டோ ஓட்ட வேண்டாம்!"
280 சதுர அடியே உள்ள அந்த வாடகை வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தங்களுக்கு மத்தியில் தேசிய செய்தி சேனல்களுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார் பிரேமா ஜெயகுமார். சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த பிரேமா, ஒரே நாளில் இந்தியப் பிரபல அந்தஸ்து எட்டியதற்குப் பின்னர் பல உறக்கம் தொலைத்த இரவுகளும் தளராத நம்பிக்கையும் இருக்கிறது! இந்தியா முழுக்க 48,320 மாணவர்கள் கலந்துகொண்ட சி.ஏ. தேர்வில் தேர்வானவர்கள் சதவிகிதம் 12.97 மட்டுமே. இதில் பிரேமா 800-க்கு 607 மதிப்பெண்கள் பெற்று (75.88%) முதல் இடம்.


 ''அண்ணா... நீங்க தமிழ்ல பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இங்கே ரெண்டு நாளா ஏகப்பட்ட போன் கால், பேட்டிகள்னு எப்பவும் இந்தி, இங்கிலீஷ்லயே பேசிட்டு இருக்கேன்!''- சந்தோஷமும் உற்சாகமுமாகப் பேசுகிறார் பிரேமா.

''என் சொந்த ஊரு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பக்கத்துல பெரியகொள்ளியூர். அப்பா ஊர்ல விவசாயம் பார்த்தார். ஆனா, வருமானம் இல்லாமக் கஷ்டப்பட்டதால, வேலை தேடி மும்பை வந்தாராம். அப்ப எனக்கு ரெண்டு வயசு. மும்பை வந்த பிறகுதான் தம்பி தன்ராஜ் பிறந்தான். அப்பாவும் அம்மாவும் ஆரம்பத்துல கூலி வேலைக்குத்தான் போயிட்டு இருந்தாங்க. அப்பா ஆட்டோ ஓட்ட ஆரம் பிச்ச பிறகு, அம்மா வேலைக் குப் போறதை நிப்பாட்டிட் டாங்க. இனி, கொஞ்ச நாள்ல அப்பா ஆட்டோ ஓட்டுறதை நிப்பாட்டிருவாரு. ஏன்னா, நான்தான் வேலைக்குப் போகப் போறேனே!''

''சி.ஏ. பரீட்சை ரொம்பக் கஷ்டமாச்சே... எப்படி அதில் முதல் இடம் ஜெயிச்சீங்க?''

''எனக்கும் தெரியலைண்ணா. ஸ்கூல்ல எப்பவும் நான்தான் ஃபர்ஸ்ட் மார்க். பி.காம். படிச்சப்ப, மும்பைப் பல்கலைக்கழகத்தில் நான்தான் இரண்டா வது மார்க். சி.ஏ. பரீட்சையில் பாஸ் ஆவேன்னு நினைச்சேன். ஆனா, முதல் இடம்... சத்தியமா ஆச்சர்யம்!

ப்ளஸ் டூ முடிக்கிற வரை எனக்கு 'சி.ஏ’-ன்னா என்னன்னுகூடத் தெரியாது. அப்போ எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள்தான் என்னை சி.ஏ. படிக்கச் சொன்னாங்க. என் மாமாவும் எனக்கு வழிகாட்டினார். படிப்புக்குனு சொல்லி நான் என்ன கேட்டாலும் அப்பா வாங்கிக் கொடுத்துருவார். அதே நேரம் பள்ளி, கல்லூரி படிப்புஎல்லாமே ஸ்காலர்ஷிப் மூலமா சமாளிச்சுட்டேன். ஆரம்பத்துல டியூஷனுக்குப் போயிட்டு இருந்தேன். ஆனா, என் தம்பி தன்ராஜும் சி.ஏ. சேர்ந்ததால், ரெண்டு பேரும் வீட்லயே சேர்ந்து படிக்க ஆரம்பிச்சோம். எனக்கு அவன் டீச்சர், அவனுக்கு நான் டீச்சர். காலைல ஏழு மணிக்குப் படிக்க ஆரம்பிச்சா, அப்பப்போ பிரேக் விட்டுவிட்டு ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும் படிச்சிட்டே இருப்போம். லீவு நாட்களில்கூட சினிமா, பார்க்னு போக முடியாம, படிச்சுட்டே இருந்தது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, இப்போ ரொம்ப ரொம்ப ஹேப்பிஅண்ணா!''
''எங்கே வேலைக்குச் சேர்றதுன்னு முடிவுபண்ணிட்டீங்களா?''

''இன்னும் இல்லை. போன், மெயில்னு ஏகப்பட்ட ஆஃபர்ஸ் வருது. ஆனா, அதையெல்லாம் பொறுமையா படிக்கக்கூட நேரம் இல்லை. எங்கே வேலைக்குப் போனாலும் எதிர்காலத்தில் என்னால முடிஞ்ச அளவு நிறைய அக்கவுன்டன்ட்களை உருவாக்குவேன். இப்போ உடனடி லட்சியம் அப்பா, அம்மாவுக்குன்னு ஒரு வீடு வாங்கணும்ணா!''

''தமிழ்நாட்டுக்கு வருவீங்களா?''

''ஆமா... சீக்கிரம் வரணும். கலைஞர் ஐயா, ஜெயலலிதாம்மா, ஜி.கே.வாசன் சார் எல்லாம் பாராட்டி பரிசளிச்சிருக்காங்க. சீக்கிரம் விழுப்புரத்துக்கு வந்து சொந்தக்காரங்களைப் பார்க்கணும்!''

''உங்ககிட்ட சி.ஏ. படிக்கிறவங்களுக்கு டிப்ஸ் கேட்காம இருக்க முடியாதே...''

''டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கு நான் வித்தியாசமா எதுவும் பண்ணலை. கொஞ்சம் பிளான் பண்ணிப் படிச்சேன். அவ்வளவுதான். எட்டுப் பாடங்களில் எதையெதை எப்போ படிச்சு முடிக்கணும்னு திட்டம் போட்டு, அதைச் சரியா நிறைவேத்தினேன். எது செஞ்சாலும் நம்ம நன்மைக்குத்தான் செய்றோம்னு எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டேன். இப்போ சந்தோஷமா இருக்கேன்!''

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

No comments:

Post a Comment