Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

ஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்?

ஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்? - நடுநிலை விஞ்ஞானிகள் அதிர்ச்சி

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான நியாயமான சாத்தியக்கூறுகள் மற்றும் அவை சார்ந்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் - சர்ச்சைகளுக்குத் தீர்வுகள் காணப்படாமலேயே ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அச்சாரமாக ரூ.363.5 கோடி மதிப்பில் ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் (Vehicle assembly building) அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அதிகாரிகள் அவசர கோலத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவில் நான்கு பேர் ஆந்திராவையும் இருவர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழர். இந்த பெரும்பான்மை ஆதரவால் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள்முட்டுக்கட்டை!
நாட்டில் இருக்கும் அனைத்து ஏவுதளங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்தும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் ஏற்கெனவே ‘தி இந்து’ நாளிதழ் விரிவானக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு தலைவர்களும் குலசேகரப்பட்டினத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகளை எழுப்பி வந்தனர்.
இஸ்ரோவின் தமிழக விஞ்ஞானிகளும் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி, எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். இதனால், மூன்றாவது ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பது குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் இஸ்ரோ பரிசீலித்து வந்தது.
ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆந்திர அதிகாரிகள் அவசர கோலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் கூடுதலாக ஒரு ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ரூ.363.5 கோடி ஒதுக்கீடு
அந்தத் தொழிற்கூடம் அமைப்பதற்கான மத்திய அரசிடம் அனுமதி கேட்கும்போது - அதற்கான ஒரு காரணமாக ‘மூன்றாவது ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைப்பதற்காக தற்போது ஏவுவாகன இணைப்பு தொழிற்கூடம் தேவை’ என்றும் ஆந்திர அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து மத்திய அரசும் இத்திட்டத்துக்காக 363.5 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதுதான் இஸ்ரோவின் தமிழக விஞ்ஞானி களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ திரவ இயக்கத் திட்ட மையத்தின் முன்னாள் தலைமைப் பொது மேலாளரும் மூத்த விஞ்ஞானியுமான சிவசுப்ரமணியன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “செயற்கைக் கோள் ராக்கெட்டுகளை ஏவும்போது ராக்கெட் ஏவுதளம் அருகிலேயே ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் இருக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு இடங்களில் இருந்துவரும் ராக்கெட்டின் பாகங்களையும் ஒருங்கிணைத்து ஏவுதளத்துக்கு கொண்டுச் செல்ல வசதியாக அமையும். அப்படியான ஒரு ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டாவின் ராக்கெட் ஏவுதளம் அருகிலேயே இருக்கிறது.
மற்றொரு தொழிற்கூடம்
தற்போது கூடுதலாக மற்றுமொரு ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. மத்திய அரசிடம் அதற்கான அனுமதி கோரிய அதிகாரிகள் அதற்காக மூன்று காரணங்களைத் தெரிவித்துள்ளனர். ஒன்று பி.எஸ்.எல்.வி. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் கூடுதலாக ஏவப்படுகிறது. அதற்காக இது தேவை. இரண்டு, ‘ஜி.எஸ்.எல்.வி - எம்.கே. - 3’ என்கிற அதிநவீன 640 டன் எடையுள்ள செயற்கைக்கோளை ஏவ வசதியாக அந்த ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் அமையும். மூன்றாவதாக, மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கவிருப்பதால் இந்தத் தொழிற்கூடம் தேவை என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால், அந்தத் தொழிற்கூடம் அமைக்கும் பணிகளையும் ஆந்திர அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
அவர்கள் சொல்லும் மூன்று காரணங்களுமே வலுவில்லாதவை; மூன்றாவது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டவை. ஏனெனில் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகளை ஏவ இப்போது இருக்கும் ராக்கெட் இணைப்பு தொழிற்கூடமே போதுமானது. ஏனெனில் தற்போது மாதம் ஒரு ராக்கெட் ஏவப்படுவது இல்லை. அடுத்து, ‘ஜி.எஸ்.எல்.வி - எம்.கே. - 3’ செயற்கைக்கோள் வடிவமைப்பு பணிகள் 2018-ம் ஆண்டுதான் முடிவடையும். அதன் கிரையோஜெனிக் என்ஜின் பணிகள் இன்னும் 20 சதவிகிதம்கூட நிறைவடையவில்லை. அதனால், அதனைக் காரணமாகக் கூறுவதும் சப்பைக்கட்டு. இந்த தொழிற்கூடம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டால், அதையே முக்கியமான காரணமாகக் கூறி மூன்றாவது ஏவுதளத்தையும் அங்கேயே அமைத்துவிடலாம் என்பதுதான் ஆந்திர அதிகாரிகளின் திட்டம். அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் அவசரகோலத்தில் ஏவுவாகன இணைப்பு தொழிற்கூடம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் மூன்றாவது ஏவுதளம் எங்கே அமைப்பது என்கிற பரிசீலனைகளும் சர்ச்சைகளும் ஓயாத நிலையில் ஒருதலைபட்சமாக தொழிற்கூடம் அமைப்பது தமிழகத்தை மட்டுமல்ல... நாட்டின் பாதுகாப்புக்கே உலை வைத்து இந்தியாவையே வஞ்சிக்கும் செயல்” என்றார்.

No comments:

Post a Comment