Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 19, 2013

வயிற்றுக்குச் சோறிடும் நுட்பம்


உலகில் ஆதி வேளாண்மை 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளது. ஒருவேளை மனித குலம் வேளாண்மையைக் கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால், நாம் உயிர் வாழ்வதற்கு இன்றைக்கும் விலங்குகளை துரத்திச் சென்று வேட்டையாட வேண்டியிருந்திருக்கும்.
ஆதி காலத்தில் மனிதன், உணவு சேகரிப்பவனாகத்தான் இருந்தான். அதில் பெண்களுடைய பங்கே அதிகம் இருந்தது. அதற்குக் காரணம், தன் சந்ததியைப் பெருக்கவும், அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கவும் வேண்டிய கடமை அவர்களுக்கு இருந்ததுதான்.
மனிதகுலம் வேட்டையாடக் கற்றுக்கொண்ட பிறகு, பெண்களே தொடக்கத்தில் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பிந்தைய காலத்தில்தான் ஆண்கள் வேட்டையில் முக்கியப் பங்கைப் பெற்றனர்.
உண்மையில் வேட்டையாடுதலும் உணவுச் சேகரித்தலும் காட்டிலிருந்த நடைமுறைகளை மீறாமல் இருந்ததால், அவை பெரிய பின்விளைவுகளை உருவாக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு வாழிடத்தில் கிடைத்த இயற்கைஆதாரங்களை நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை, மனிதகுலத்திடம் மரபுவழியாக தொடர்ந்து வந்தது.
அதேநேரம் அவற்றில் இருந்த கட்டுப்பாடு என்னவென்றால், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வேட்டையாடவோ, உணவுதேடவோ முடியவில்லை. அதனால் மனித குலம் தொடர்ந்து நகர்ந்துகொண்டேயும், சிறிய குழுவாகவும் வாழ வேண்டியிருந்தது.
உணவு சேகரிப்பு விவசாயமாகவும், வேட்டையாடுதல் விலங்கு வளர்ப்பாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்தன. காட்டில் தாவர உணவுப் பொருட்களை அவ்வளவு காலம் சேகரித்து வந்த பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். எனவே, ஆதி விவசாயிகள், பெண்களே. மனித சமூகத்தில் நீர்ப்பாசன வேளாண் முறை உருவாவதற்கு முன்பு வரை பெண்களே பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இருந்திருக்கிறார்கள்.
“வேளாண்மை கண்டுபிடிக்கப்பட்டது மனித சமூகத்தில் நிகழ்ந்த இரண்டாவது கட்ட புரட்சியாகக் கருதப்படுகிறது” என்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி. வேளாண்மை மூலம் இயற்கை ஆதாரத்தை திறன்மிக்க வகையில் மனிதகுலம் பயன்படுத்த ஆரம்பித்ததால்தான், தான் சார்ந்துள்ள சூழலியல் தொகுதியை (Ecosystem) தொடர்ச்சியாக அழிப்பதை நிறுத்த முடிந்தது. ஆனால், அது எல்லா நிலைகளிலும் நடக்கவில்லை.
வேளாண்மை தொடங்கிய காலத்திலும் மனிதகுலம் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியிருந்தது. அப்போது அதன் பெயர் காட்டெரிப்பு வேளாண்மை. குறிப்பிட்ட ஓரிடத்தில் காட்டை அழித்து, அங்கு வேளாண்மை செய்யப்படும். அந்த நிலத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தீர்ந்தவுடன், வேறொரு நிலப்பகுதியை தேடிச் செல்ல வேண்டும். இதுவே காட்டெரிப்பு வேளாண்மை.
தமிழகத்தில் இதுபோன்ற காட்டெரிப்பு வேளாண்மை, சங்ககாலத்துக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. காட்டை எரித்து உருவாக்கப்பட்ட நிலம், புனம் எனப்பட்டது. இருளர், குறும்பர், மலையாளிப் பழங்குடிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டெரிப்பு வேளாண்மையை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டம் மூலமே, அது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இன்றைய நவீன உணவுப்பொருள்களை மரபணுப் பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, அடிப்படைப் பயிர்களாகக் கருதப்படும் கோதுமை, பார்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவை தென்மேற்கு ஆசியாவில் 9,000-10,000 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
தமிழகத்தில் மரபாகப் பயிரிடப்பட்டு வரும் தினை, சாமை போன்ற சிறுதானியப் பயிர்கள் 7000-10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றன. நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை தென்னிந்தியா தொடங்கி மத்திய இந்தியா வரை புதிய கற்காலத்திலேயே (கி.மு. 4,500-2,000) இருந்துள்ளன. உலக வரலாற்றில் மனிதர்களின் வாழ்க்கை இப்படி இடம்பெயர்ந்துகொண்டே இருந்த நிலையில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ வழிவகுத்ததும் வேளாண்மைதான். மனித குலம் நதிக்கரைகளில் வேளாண்மை செய்யப் பழகிக் கொண்டது, நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. நதிக்கரை நாகரிகங்கள் உலகைத் திருப்பிப் போட்டன.
இப்படியாக வேளாண்மை என்பது தனித்த கண்டுபிடிப்பாக இல்லை. தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்ப கண்டறிதல்களுக்கு அது வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக பாசனமுறை வளர்ச்சி, பயிற்சிசுழற்சி முறை, பயிர் ஊட்டத்தை அதிகரிக்க உரமிடுதல் போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் செம்மைப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டன. மனிதகுலம் காட்டுத் தாவரங்களில் இருந்து விதைகளைச் சேகரித்து, அவற்றை பயிரிட்டு, வளர்த்து, அறுவடை செய்த ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கண்ட கண்டறிதல்கள் ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
வேளாண்மையில் தொடங்கி, இன்றைக்கு எத்தனையோ புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட பிறகும்கூட, மனிதகுலம் இயற்கை வளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டே இருப்பதுதான் இதில் மிகப் பெரிய முரண்பாடு.

No comments:

Post a Comment