Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை



(‘மக்கா படுகொலைகள் 1987: பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்’ நூலிலிருந்து...)

முஸ்லிம்கள் இன்று ஏறத்தாழ எல்லா முனைகளிலும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர் —இராணுவம், கலாச்சாரம் மற்றும் இடைப்பட்ட சகல முனைகளிலும் தாக்கப்படுகின்றனர். ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீன், செச்சன்யா போன்ற நாடுகளில் அந்நியப் படைகளால் அவர்கள் ஆயிரக்கணக்கில் பலிகொடுக்கப்படுவது மட்டுமின்றி, முஸ்லிம் நாடுகள் பலவற்றின் சொந்த இராணுவங்களே கூட முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றன —எடுத்துக் காட்டு: பாகிஸ்தான், எகிப்து, அல்ஜீரியா, துனீஷியா, மொராக்கோ. இந்த இராணுவத் தாக்குதல்கள் போதாதென்று மேற்குலகின் கலாச்சாரத் தாக்குதல்கள் வேறு. எனினும், சவூதிகள் புனித மக்கா-மதீனா நகரங்களில் —முஸ்லிம்கள் இவையிரண்டையும் சேர்த்து ஹரமைன் என்றழைக்கும் அந்நகரங்களில்— எடுக்கும் நடவடிக்கையோடு ஒப்பிடும்போது, மேற்கண்ட கொடூரமான யதார்த்தம் கூட முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது. பேராசையும் வஹாபிஸ ஆர்வ வெறியும் நச்சுக்கலவையாக சேர்ந்துகொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் அழிப்புக்கு வழிவகுத்துள்ளது. இவை, துவக்ககால இஸ்லாத்தின் செழிப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்னும் சில வருடங்களில் நிரந்தரமாகத் துடைத்தழித்துவிடும் எனத் தெரிகிறது.


இன்று மத்திய கிழக்கின் பெரும்பாலான எண்ணை உற்பத்தி நாடுகள் கட்டுமானப் பித்துப் பிடித்து, பாலைவனங்களை உருமாற்றி நியூயார்க், ஹியூஸ்டன், லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களின் நகல்களாக ஆக்கிக் கொண்டிருக்கிற அதேவேளை, சவூதிகள் உம்மத்தின் பௌதிகப் பாரம்பரியத்தை அழிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர். சவூதிகள் லாஸ் வேகாஸின் உருவமைப்பில் ரியாத் நகரைக் கட்டியெழுப்ப முனைந்திருந்தால், வெகுசில முஸ்லிம்களே அது குறித்துக் கவலை கொண்டிருப்பர். ஆனால், அவர்கள் மக்கா-மதீனா மீது கைவைக்கின்றனர், இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களைத் துடைத்தழித்து, கான்கிரீட்-கண்ணாடி டவர்களை அவற்றுக்குப் பதிலாக நிர்மாணிக்கின்றனர். அந்த டவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமைச் சூழ்ந்தமைந்திருப்பது மட்டுமின்றி, அதன் தோற்றத்தை குள்ளமாக்கி விடுகிறது, மற்றும், அதன் ஆன்மிகச் சூழலின் சுகந்தத்தைக் கெடுத்துவிடுகிறது.

வருடத்துக்கு வருடம் அதிகரித்துச் செல்லும் அளவுகடந்த விலைவாசியால், ஏற்கனவே பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முஸ்லிம்களின் ஏக்கத்துக்குரிய ஆன்மிகப் பயணமாய் அமைவதற்கு பதிலாக, ஹஜ் இன்று ஒரு பெரிய ஊழலாக மாற்றப்பட்டு, சவூதி அரச குடும்பமும் அவர்களின் கூட்டாளிகளும் ஹாஜிகளின் வாழ்நாள் சேமிப்புகளையே ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஹஜ்ஜில் பல தரங்கள், வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலுள்ள பயண முகவர்கள் இப்போது ஐந்து நட்சத்திர ஹஜ் சுற்றுலாத் திட்டங்களை வழங்குகின்றனர் —ஏதோ ஹஜ் என்பது டிஸ்னீலேண்டுக்குச் செல்லும் விடுமுறை காலச் சுற்றுலா போல! இஸ்லாத்தின் அடிப்படை வழிபாடுகளுள் ஒன்றான ஹஜ்ஜுக்கு நிகழ்ந்திருக்கும் இத்தகு திரிபு, ஹஜ்ஜின் உயிரோட்டத்துக்கே முரணானது; குர்ஆன், சுன்னாஹ் வலியுறுத்துவதன்படி ஹஜ் வெளிப்படுத்தவேண்டிய சமத்துவ, சகோதரத்துவக் கோட்பாட்டுக்கே முரணானது. ஆனால் சவூதுக் குடும்பத்துக்கோ, குர்ஆன், சுன்னாஹ் போதனைகள் குறித்தெல்லாம் அக்கறையில்லை. தாங்கள் ஏற்காத எந்தவொரு செயலையும் பித்அத் (நூதனம்) எனக் கடிந்துரைப்பதில் மட்டுமே துரிதம் காட்டுகின்றனர். மேற்கூறியது போன்று, இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மீறுவது மூலம் சவூதிகள் செய்துவரும் மகா பித்அத்துகளுக்கு போலியான வாதங்களை முன்வைத்து நியாயம் கற்பிக்க, கூலிப்பாட்டாள முகவர்களும் அரசவை உலமாவும் உள்ளனர். ஒரு வேளை, இன்று இறைத்தூதர் (ஸல்) எழுந்துவர நேர்ந்தால் அவரையும் கூட இந்த வஹாபிகள் குற்றம்சாட்டி, அவர் தீனில் (மார்க்கம்) நூதனங்களைப் புகுத்தியுள்ளார்; பித்அத்தில் ஈடுபட்டுள்ளார் எனப் பழிசுமத்தி இருப்பார்கள். (இத்தகு பாவத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக!)

சவூதிகள் இஸ்லாத்தினது வரலாற்றுத் தலங்களின் புனிதத்தை இழிவுபடுத்துவது குறித்தும், ஹஜ்ஜை வணிகமயமாக்குவது குறித்தும் இந்த அரசவை உலமாவுக்கு தவறேதும் தெரிவதில்லை போலும். எனினும் இவை, முஸ்லிமல்லாதவர் சிலர் உள்ளிட்ட ஏனையோரின் கவனத்திலிருந்து தப்பவில்லை. எடுத்துக்காட்டாக, ஸ்வைகா க்ரீகர் என்பவர் 2008 மார்ச் 26 அன்று நியூ ரிபப்ளிக் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையில், மக்காவுக்கு வரவிரும்பும் வருங்கால “சுற்றுலாப் பயணிகளை” கவர்ந்திழுக்கும் ஒரு விளம்பர டி.வி.டி.யின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பியுள்ளார். அந்த டி.வி.டி அப்ரஜ் அல்-பைத் டவருக்காகத் தயாரிக்கப்பட்டது. ஹரமின் நுழைவாயில்களுள் ஒன்று அமைந்திருக்கும் வீதியில் எதிர்பக்கமாக, 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்படவிருக்கும் புதிய ராட்சச விண் கோபுரக் கட்டிடவளாகம் அது. அந்த டவரில், கூரை முதல் தரை வரையிலான ஜன்னல்களைக் கொண்ட சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அழகான பெண்ணொருவள் அமர்ந்திருப்பதை அந்த டி.வி.டி. காட்டுகிறது. கீழே கஅபாவை வலம்வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களைப் பார்க்கும் வண்ணம் உள்ள ஜன்னல்கள் அவை. இறுகச் சுற்றிய முக்காடுக்குள் அவளது கண்கள் ‘இங்கே-வா’ சிமிட்டல் போட்டுக் கொண்டிருக்க, அவள் அரபிமொழியில் வருங்கால வாடிக்கையாளர்களை நோக்கி இவ்வாறு கேட்கிறாள்: “கஅபாவுக்கு முன்னால் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீங்கள் ஒவ்வொரு வருடமும் தங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா?” இத்தகு ஆபாச விளம்பரங்களைக் கொண்டு அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருமாறு ஹாஜிகளைக் கவர்ந்திழுப்பது அவசியம்தானா? அவர்கள் யாத்திரிகர்களாகத் தானே வருகின்றனர்; மான்டி கார்லோ அல்லது லாஸ் வேகாஸில் உள்ள சூதாட்ட விடுதிக்குச் சுற்றுலாப் பயணிகளாக வரவில்லையே!

இவ்வகை ஆபாசத்திற்கு அப்பால், இதைவிட மிக முக்கியமான விவகாரமொன்று இருக்கிறது. தகர்த்தழிக்கப்பட்ட அல்லது தகர்த்தழிப்பதற்காகக் காலம் குறிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் தலங்கள் தொடர்பான விவகாரம் அது. மதீனாவிலுள்ள இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலம் தொடர்பாக தீட்டியுள்ள தங்களது கொடிய திட்டங்களில் சவூதிகள் வெற்றி பெறுவார்களேயானால், மதீனாவின் பகீ அடக்கத்தலத்துக்கு (ஜன்னதுல் பகீ) அவர்கள் இழைத்த காட்டுமிராண்டித்தன அழிப்பு கூட சிறியதாகத் தோன்ற ஆரம்பித்துவிடும். முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ என்ற மதீனா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். ‘இறைத்தூதரது (ஸல்) அடக்கத்தலத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் குவிமாடம் பற்றி…’ எனும் தலைப்பிட்டிருந்த அக்கட்டுரைக்கு ஊக்குவிப்பு ஆசிரியர், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி. இதில், இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை நபிப்பள்ளியில் இருந்து வெளியே அகற்றவேண்டும் என்பதாக முக்பில் இப்னு ஹாதீ கோருகிறார். அந்த அடக்கத்தலம் அங்கிருப்பதும், அதன் மீதுள்ள குவிமாடமும் பெரும் நூதனங்கள் (பித் அத்துகள்); எனவே அவையிரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது இந்த ஆய்வுக் கட்டுரை பாராட்டுப் பெற்று பல்கலைக்கழக மதிப்பீட்டில் உயர் மதிப்பெண்களை வென்றது; மற்றும், இறைத்தூதர் (ஸல்) மீது அவர்களுக்கிருக்கும் முழு அவமரியாதையை ஊர்ஜிதம் செய்தது.

நேற்று முளைத்த இந்த சவூதி மாணவன் எப்படி, குவிமாடம் கட்டுவதை பித்அத் என்றும் இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை மஸ்ஜித் அந்-நபவீயிலிருந்து வெளியே அகற்றவேண்டும் என்றும் தீர்மானத்துக்கு வந்தான் என்பதை விமர்சன மீளாய்வு செய்வது அவசியம். முன்மாதிரியான நபித்தோழர்களை (ரழி) காட்டிலும் இந்த மாணவன் இஸ்லாம்பற்றி அதிகம் அறிந்துவிட்டானோ? நபித்தோழர்கள் (ரழி) எவரும் இதை ஆட்சேபிக்கவில்லை என்பது மட்டுமின்றி, இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தைத் தரிசிப்பதன் மூலம் அவருக்கு (ஸல்) பெரும் மரியாதை செலுத்தி வந்துள்ளனர். மேலும், இறைத்தூதரின் (ஸல்) மிகநெருங்கிய தோழர்கள் இருவரும் கூட அவரருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அபூபக்கர் மற்றும் உமரை (ரழி) காட்டிலும் இந்த முக்பில் இப்னு ஹாதீ அதிகம் அறிவு பெற்றுவிட்டாரோ? முஸ்லிம்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “சவூதிகள் தாங்கள் விரும்புவதையெல்லாம் இத்தலங்கள் மீது செயற்படுத்துவதற்கு என்ன உரிமை கொண்டுள்ளனர்?” சவூதிகள் ஒன்றும் ஹரமைனின் உடமைதாரர்கள் அல்லவே! அவர்கள் அரேபிய தீபகற்பத்தை அபகரித்துக்கொண்டு அதன் பெயரை சட்ட விரோதமாக, ‘சவூதி’ அரேபியா என்று மாற்றியவர்கள் தானே! இது ஒரு பித்அத் அல்லவா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதனை ‘அரேபிய தீபகற்பம்’ (ஜஸீரத்துல் அரபு) என்றே பெயரிட்டு அழைத்தார்கள். சவூதிகள் தங்களது திரிபு வடிவ இஸ்லாத்தை எல்லோர் மீதும் திணிப்பதற்கான ஆர்வவெறியில், இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை மொத்தமாக அழிக்கும் திட்டப் பணியில் இறங்கியுள்ளனர்.

மஸ்ஜித் அந்-நபவீயின் பச்சைநிறக் குவிமாடம், இறைத்தூதரின் (ஸல்) அடக்கத்தலத்தை அடையாளப்படுத்துவதாகவும் அதன் குறியீடாகவும் விளங்குகிறது. இப்போது அது பள்ளியின் விரிவாக்கத்தால், சூழப்பட்டு உள்ளது. ஆயினும், அது ஒரு தனித்துவ காட்சிக் குவிமையமாக விளங்குகிறது. சென்ற ஆண்டு மதீனா மாநகரத் திட்ட வாரியம், நபிப் பள்ளியின் பிரசித்திபெற்ற இந்த பச்சைநிறக் குவிமாடத்திற்கு நிறம் மாற்றி, வெள்ளிநிறப் பூச்சைப் பூசியது. ஒருவேளை, அதனைத் தகர்க்க வழிவகுப்பதுதான் இதன் நோக்கமோ! ஏனெனில், ‘மஸ்ஜித் அந்-நபவீயின் வெள்ளிநிறக் குவிமாடம் ஒன்று தகர்க்கப்பட்டது’ என்பதைக் கேள்விப்படவோ கவனிக்கவோ நேரும்போது, பெரும்பாலான முஸ்லிம்கள், அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பதை உணராமலே போய்விடக் கூடும். ஏற்கனவே, விரிவாக்கம்-புனரமைப்பு என்ற சாக்கில் வெள்ளிநிறக் குவிமாடங்கள் பல துடைத்தழிக்கப்பட்டுள்ளன. அக்கறை கொண்ட குடிமக்களின் தீவிரக் கண்டன ஆர்ப்பாட்டங்களால் நிர்பந்தத்துக்கு ஆளான வாரியம், அந்தக் குவிமாடத்தை அசல் நிறத்துக்கே மீட்டுள்ளது. எனினும் இதை வைத்து, வஹாபிகள் தங்கள் வழிமுறைகளின் பிழைகளை உணர்ந்துவிட்டனர் என்ற தவறான முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது.

ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல்) மற்றும் பித்அத் (தீனில் நூதனங்களை ஏற்படுத்துதல்) செயல்களிலிருந்து முஸ்லிம்களைக் ‘காப்பாற்ற வேண்டும்’ என்ற தங்களது ஆர்வமிகுதியில் இந்த வஹாபிகள் பல தசாப்தங்களாகவே வரலாற்றுத் தலங்கள் மற்றும் கட்டிடங்களைத் தகர்ப்பதில் ஈடுபட்டுவருகின்றனர். “கட்டிடங்களையும், வரலாற்றுத் தலங்களையும் உயர்த்திப் போற்றுவது அனுமதிக்கப்பட்டதல்ல” என்று ராஜ்யத்தின் தலைமை ஆலிமாக இருந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், தான் உயிரோடிருந்த காலத்தில் (1994-ல்) ஓர் விளம்பரம் மிகுந்த ஃபத்வாவில் பிரகடனம் செய்தார். அவர் தொடர்ந்தும் கூறினார்: “இத்தகு செயல் இணைவைப்பிற்கு வழிவகுக்கும்…எனவே, இத்தகு செயல்களை நிராகரிப்பதும் அவை குறித்துப் பிறரை எச்சரிப்பதும் அவசியம்.” எனினும், இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் வெறுமனே எச்சரிக்கைகளோடு திருப்திகொள்வதில்லை. இவர்கள், சவூதி இளவரசர்கள் கும்பலின் உதவியோடு, இஸ்லாத்தின் பாரம்பரியத்தைத் துடைத்தழிக்கும் திட்டமொன்றில் இறங்கியுள்ளனர். ’இத்தலங்களைத் தரிசித்ததன் மூலம் இதுவரை எத்தனை முஸ்லிம்கள் இணைவைப்பவர்களாகி இருக்கின்றனர்? அவ்வாறு தரிசிப்பதை விட்டு அந்த முஸ்லிம்களைத் தடுக்க இந்த வஹாபிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.

இஸ்லாமியப் பாரம்பரியங்கள் ஆராய்சசி நிறுவனத்தின் ஸ்தாபகர், முன்னாள் செயலாட்சி இயக்குனர், மற்றும் வரலாற்றாசிரியரான டாக்டர் இர்ஃபான் அல்-அலவீ, ஹரமைன் மற்றும் சுற்றுப்புறங்களின் அழிப்பு நடவடிக்கையை எதிர்த்து மிக வெளிப்படையாகக் குரல் கொடுப்பவர்களுள் ஒருவர். அவரது கூற்றுப்படி, சென்ற வருடம் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அமைச்சகம், பச்சை நிறக் குவிமாடத்தை இடிக்க வேண்டும் என்று கோரி மஸ்ஜித் அந்-நபவீயில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தது. ராஜ்யத்தின் தற்போதைய தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்கின் ஒப்புதல்பெற்ற அத்துண்டுப் பிரசுரம் ஆணவத்தோடு பின்வருமாறு பிரகடனம் செய்திருந்தது: “பச்சைநிறக் குவிமாடம் இடிக்கப்பட வேண்டும்; நபிப்பள்ளிவாசலில் உள்ள மூன்று அடக்கத்தலங்களும் (அதாவது இறைத்தூதர், அபூபக்கர் மற்றும் உமர் அடங்கியுள்ள இடங்கள்) தரைமட்டமாக்கப்பட வேண்டும்.” இத்தகு புனிதக்கேடான கூற்றுகளுக்கு அடித்தளம் போட்டுச் சென்றவர், இன்னொரு பிரதான சவூதி அறிஞரான காலஞ்சென்ற முஹம்மது இப்னு அல்-உஸைமீன். 35 வருடகாலம் மஸ்ஜித் அல்-ஹராமில் குத்பாக்கள் ஆற்றிவந்த அவர் “என்றாவது ஒருநாள் இறைத்தூதரின் (ஸல்) பச்சை நிறக் குவிமாடத்தை நம்மால் இடித்துத்தள்ள முடியும் என்று நாம் நம்புகிறோம்.” என்று கூறியதன் ஒலிப்பதிவை டாக்டர் அலவீ வழங்குகிறார்.

இதுவரை, 300 வரலாற்றுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன, அல்லது இடிப்பதற்குக் காலம் குறிக்கப்பட்டுள்ளன என்பதாக டாக்டர் அலவீ மதிப்பிடுகிறார். அவற்றுள் ஒன்று: ஒரு பொதுக் கழிப்பிட வசதிக்கு இடமேற்படுத்தித் தரும் பொருட்டு, உம்முல் முஃமினீன் கதீஜா அல்-குப்ராவுக்குச் (ரழி) சொந்தமாயிருந்த பழைய வீடொன்று சமீபத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மக்காவிலுள்ள இறைத்தூதரது (ஸல்) பிறந்த வீடு முதலில் ஒரு நூலகமாக மாற்றப்பட்டு, ‘மக்தபா மக்கா அல்-முகர்ரமா’ எனப் பெயரிடப்பட்டது. இப்போது அது வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுவருகிறது. நூலகங்கள் முக்கியமானவைதான். ஆனால், இந்தத் திட்டம், கற்றல் மீதான வஹாபிகளின் ஆர்வத்தால் எழவில்லை. மாறாக, இஸ்லாமியப் பாரம்பரியத்தின் சுவடுகளைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்ற அவர்களது தீர்மானத்தினாலேயே எழுந்துள்ளது. மக்காவில் எஞ்சியிருக்கும் வரலாற்றுத் தலங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றும், அவையும் கூட அநேகமாக அடுத்த ஹஜ் காலம் கழிந்தபின் வெகுநாட்களுக்குத் தப்பிப் பிழைக்காது என்றும் டாக்டர் அலவீ கூறுகிறார். “(மக்காவிலுள்ள) அல்லாஹ்வின் இல்லத்துக்கு எத்துணை அற்பமான கண்ணியம் அளிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டுகிறது.”

முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீகின் (ரழி) பெயர் கொண்ட தொன்மையான பள்ளிவாசல் நின்றிருந்த இடத்தில் இன்று ஏ.டி.எம். (பண உமிழ்வு எந்திரம்) ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உஹது, பத்ரு போர்க்களங்கள் இன்று வாகன நிறுத்தங்களாக மாறியிருக்கின்றன. அமீர் ஹம்ஸா உள்ளிட்ட உஹதின் உயிர்த் தியாகிகளது (ரழி) அடக்கத்தலங்கள் இதைக் காட்டிலும் மோசமான அவமதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அவ்விடம் குப்பைக் கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன; அந்த அடக்கத்தலங்கள் மீது அடையாளக் குறியீடுகள் எதுவும் இடப்படுவதை வஹாபிகள் திட்டவட்டமாகத் தடைசெய்து விட்டனர் —மீண்டும், இது ஷிர்குக்கு வழிவகுக்கும் என்ற போலியான சாக்குப்போக்கின் பேரில். மதீனாவின் மஸ்ஜித் அந்-நபவீயிலிருந்து நான்கு மைல்கள் தொலைவிலிருந்த, சைய்யித் இமாம் அல்-உரைதி இப்னு ஜாஃபர் அஸ்-ஸாதிக்கின் 1200 வருடப் பழமையான பள்ளிவாசலும் அடக்கத்தலமும் 2002 ஆகஸ்டு 13 அன்று டைனமைட் வைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இமாம் அல்-உரைதி, இறைத்தூதரின் (ஸல்) வழித்தோன்றல்கள் வரிசையில் ஒன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

வஹாபிகளின் இந்த ஆர்வவெறியும், ஆயிரக்கணக்கான சவூதி ‘ராஜகுடும்ப’ —சவூதி சாம்ராஜ்ய ஸ்தாபகர் அப்துல் அஸீஸ் இப்னு சவூதின்— புதல்வர்கள், புதல்விகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பேராசையும் தோளோடு தோளிணைந்து செயலாற்றுகின்றன. இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிப்பது, வசதியாக ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் இன்னபிற நவீன கட்டுமானங்களுக்கு வழியேற்படுத்தித் தருகிறது; வசதியாக, ஹாஜிகளுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்குகிறோம் என்பது சாக்காக அமைந்து விடுகிறது. இது ஒரு முழு மோசடியே அன்றி வேறல்ல: மிகப் பெரும்பாலான ஹாஜிகள் இத்தகு ஹோட்டல்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்தும் அளவுக்கு ஒருபோதும் வசதிபெற மாட்டார்கள்.

என்ன நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, சவூதி ராஜ்யத்தின் மிகப்பெரும் கடனளிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சவூதி பிரிட்டிஷ் வங்கியின் (SABB) பின்வரும் அறிக்கையைப் பாருங்கள். வருகிற நான்கு வருடங்களில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் மக்காவில் மட்டும் சுமார் 30 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவிருக்கின்றன என்று அது கணிக்கிறது. அதிகபட்சம் 130 விண்கோபுரங்கள் எழும்பும்; அதில் 6 பில்லியன் டாலர் அப்ரஜ் அல்-பைத் டவர்களும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த, ஏழு கோபுரக் கட்டிடங்களைக் கொண்ட அப்ரஜ் அல்-பைத் டவர் திட்டம் 2009-ல் நிறைவுசெய்யப்படும் போது, அது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களுள் ஒன்றாக இருக்கும். இதில், ஓர் 60 தளங்கள் மற்றும் 2000 அறைகளைக் கொண்ட ஹோட்டல்; 1500 நபர்கள் கூடும் அளவிலான ஒரு நிகழ்ச்சி மையம்; மற்றும், இரண்டு ஹெலிகாப்டர் தளங்கள் இருக்கும். மேலும், இதில் ஸ்டார் பக்ஸ், தி பாடி ஷாப், ஐ.ரா.வில் தளம்கொண்ட ஆடையகத் தொடர் கடையான டாப்ஷாப் (கேட்டி மோஸ் இங்கு ஒரு சிறப்பு உடை வடிவமைப்பாளர்), டிஃப்பனி அண்டு கோ உள்ளிட்ட 600 பிற விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு நான்கடுக்கு வணிக வளாகமும் இடம்பெற்றிருக்கும். பணக்கார ‘யாத்திரிகர்கள்’ இப்போதே ஷாப்பிங் செய்வதற்காக MAC அழகுபொருள் பேரங்காடி, வாவாவூம் வாசனைத் திரவியகம், கிளாயர்ஸ் ஆக்சஸரீஸ் ஆகியவை ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. எச்-எம் மற்றும் கார்டியர் தயாராகிக் கொண்டுள்ளன. “உயர் பிராண்டுகள் அனைத்தும் இங்கே படையெடுத்து வருகின்றன” என்பதாக SABB-யின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜான் எஸ். ஃபாகியானாகிஸ் பெருமையாகக் கூறுகிறார். அப்பட்டமான பொருளாதாயம், ஹஜ்ஜின் ஆன்மிக அம்சங்களுக்குப் பதிலாக புகுந்துகொண்டிருக்கிறது —எல்லாம் வளர்ச்சி என்கிற போர்வையில். மக்காவின் ஹில்டன் ஹோட்டலுக்கு இடம் விடுவதற்காக அபூபக்கரின் (ரழி) வீடு இடித்துத் தள்ளப்பட்டபோது, ஹில்டனின் செய்தித் தொடர்பாளர் இவோர் மெக்பர்னே துணிச்சலாக இவ்வாறு கூறினார்: “சவூதி அரேபியாவின் சமய சுற்றுலாப் பிரிவில் நுழைவதற்கு மாபெரும் வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் கண்டோம்.”

மக்காவுக்கு வருகைதரும் முஸ்லிம்களுள் பெரும்பாலானோர், ஜபல் அந்-நூரின் (ஒளிக் குன்று) உச்சிக்கு ஏறிச்சென்று ஹிறா குகை யைத் தரிசிக்க ஏங்குகின்றனர். இந்தக் குகையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாத வணக்கம் மற்றும் தியானத்திற்காக ஒதுங்குவார்கள். இந்தக் குகையில் இருந்தபோது தான் குர்ஆனின் முதல் வேதவெளிப்பாடுகள் அவருக்கு அருளப்பட்டன. இன்று, இந்த குகையை யாத்திரிகள் தரிசிப்பதிலிருந்து தடுப்பதற்காக வஹாபி ஆர்வவெறியர்கள் அந்தக் குன்றையே தகர்க்க விரும்புகின்றனர். குன்றின் அடிவாரத்தில் பின்வரும் ஃபத்வாவை வஹாபிகள் ஒட்டிவைத்துள்ளனர்: “இந்தக் குன்றில் ஏறவோ தொழவோ பாறைகளைத் தொடவோ மரங்களில் முடிச்சுகளிடவோ… கூடாதென முஹம்மது நபி (ஸல்) நமக்குத் தடைவிதித்துள்ளார்கள்.” முஸ்லிம்கள் அங்கு செல்வதை இறைத்தூதர் (ஸல்) தடைசெய்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதையேனும் இந்த வஹாபிகளால் தரவியலுமா? அல்லது, இந்த உளறல்கள் எல்லாம், அவர்கள் இஸ்லாத்தின் மீதும்; அல்லாஹ்வின் அன்புத் தூதர் (ஸல்) குறித்து முஸ்லிம்களுக்கு உள்ள பற்று மற்றும் காதல் மீதும் கொண்ட வெறுப்புணர்வின் அடிப்படையிலான வாசகங்களா?

இதற்கு முரணாக, முஸ்லிம்கள் நிராகரிப்பாளர்களை தங்களது அவ்லியாவாக (எஜமானர்கள் மற்றும் பாதுகாவலர்கள்) எடுத்துக் கொள்வதை குர்ஆனும் இறைத்தூதரும் (ஸல்) ஐயமின்றி முற்றாகத் தடைசெய்துள்ளனர். எனினும், சவூதுக் குடும்பம் இஸ்லாத்தின் மிகப்பெரும் எதிரிகளுக்கு அடிபணிந்து சேவையாற்றுவதைக் கண்டித்து இந்த வஹாபி உலமா ஒருபோதும் ஃபத்வா வெளியிட்டதில்லை. மிகச் சமீபத்தில் —கடந்த மே மாதத்தில்— அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவூதி ராஜ்ஜியத்துக்கு வந்திருந்தார். லட்சக்கணக்கான முஸ்லிம்களின் இரத்தத்தில் தனது கைகளை நனைத்தவர் இந்த புஷ் என்பது பற்றியெல்லாம் சவூதிகளுக்கு எந்தக் கவலையுமில்லை. எனினும், முஸ்லிம்கள் ஜபல் அந்-நூர் மீதேறி ஹிறா குகைக்குச் சென்று இறைவேத வெளிப்பாட்டின் வரலாற்றோடு தங்களை இணைத்துக் கொள்ள விரும்பினால் மட்டும் இந்த வஹாபிகளுக்குப் பைத்தியக் கோபம் வருகிறது. சுன்னாஹ் மீதான முஸ்லிம்களின் பக்தியைக் கண்டு மகா எரிச்சலுறும் இந்த வஹாபிகள், ஒரு குன்றையே தரைமட்டமாக்கிவிட விரும்புகின்றனர். இத்தகைய எண்ணங்களெல்லாம் சாத்தானிய உள்ளங்களிலிருந்தே உருவெடுக்க முடியும். அநேகமாக, இன்னும் சில வருடங்களில் ஓர் இளவரசருக்குச் சொந்தமான ஹோட்டலைக் கட்டுவதற்கோ, அல்லது, இன்னொரு வாகன நிறுத்தம் அமைப்பதற்கோ இந்தக் குன்று வெடிவைத்துத் தகர்க்கப்படலாம்.

ஒவ்வொரு நடவடிக்கையிலும் சவூதிகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை மீறிவருகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்ரஜ் அல்-பைத் டவர்களுக்கான 6 பில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதி, மன்னர் அப்துல் அஸீஸ் அறநிலையத்திலிருந்து (வக்ஃபு) வருகிறது. இதற்கு வசதியாக, அந்த டவர்களின் மேம்பாட்டாளர்கள் அதனை, “இஸ்லாமியச் சமூகத்தின் நலவாழ்வுக்கு இன்றியமையாத” நலன்களுக்காக உருவாக்கப்படுகிற ஒரு “மார்க்கச் சொத்து” எனச் சித்தரிக்கின்றனர். சவூதி ராஜகுடும்பத்தினர் வக்ஃபு நிதிகளிலிருந்து கூட திருடித் தங்கள் ஜேப்புகளை நிரப்பிவருகின்ற நிலையில், இந்த டவர்கள் எந்த மார்க்க நலனை வழங்கப்போகிறது? இஸ்லாமியச் சமூகத்தின் நலன்களுக்கு எவ்வாறு அது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது? அவர்கள் இவ்வாறு செய்வது மிகக்கொடிய நயவஞ்சகமும் குற்றமும் ஆகும். அதைவிட, பதிலீடு செய்யமுடியாத வரலாற்றுத் தலங்களை தாறுமாறாக அழித்துக் கொண்டிருக்கிறார்களே, அதுதான் மன்னிக்கமுடியாத ஒரு குற்றம்.

“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ...

No comments:

Post a Comment