Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

கோவை மாவட்டத்துக்கு வயது 208

நவம்பர் 24ம் தேதி கோவை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
கோவை மாவட்டத்துக்கு வயது 208

தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி கால்வைப்பதற்கு முன்பாக மைசூரை ஆண்ட திப்புவின் ஆட்சியின் கீழ் அன்றைய கோவை பகுதிகள் இருந்தன. சென்னை வழியாக வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் காலூன்ற தொடங்கினர். 1792ல் கோவை மற்றும் சேலத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

அப்போதைய கொங்கு மண்டல பகுதியில் நிலங்களை கம்பெனி அதிகாரத்திற்கு கொண்டு வந்து வகைப்படுத்தி நிலவரி நிர்ணயம் செய்தனர். அப்போது ஆட்சியாளர்களாக இருந்த தாமஸ் மன்ரோ ரயத்து வரி முறையை அறிமுகப்படுத்தினார். இந்த வரி தான் கம்பெனியின் கருவூலத்தை நிரப்பியது. தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் கம்பெனி கருவூலத்தை நிரப்புவதில் கோவையின் நில வரி வருவாய் முக்கிய பங்காற்றியது.

பின்னர் 1799ல் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கோவை பகுதிகள் ஆங்கிலேய மகாராணியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. கொங்கு நாட்டில் ஆட்சியை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்கள் அப்போதைய பரந்து விரிந்த கோவை பகுதியை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்தனர். முதலில் கோவை மாவட்டத்தின் தலைநகராக தாராபுரம் சிறிது காலமும், பவானி சிறிது காலமும் இருந்துள்ளது. கோவையை தலைநகராக கொண்டு 1804ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்னர் தான் வேகமான வளர்ச்சியும் தொடங்கியது. 208வது பிறந்த நாளில் கோவை மாவட்டம் இன்று அடியெடுத்து வைக்கிறது. ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் கோவை மாவட்டம் பல பிரிவுகளாக பிரிந்து சென்றது. 1868 வரை கோவை மாவட்டத்தின் ஆளுகையில் தான் நீலகிரி மாவட்டம் இருந்தது. அப்போது எச்.எஸ் கிரேம் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் நீலகிரியை தனி மாவட்டமாக ஏற்படுத்தினார்.

நீலகிரி பிரிந்த பின்னரும் அன்றைய கோவை மாவட்டத்தின் எல்லை தற்போது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லேஹாலம் வரையிலும், கிழக்கில் கரூர் வரையிலும் பரவியிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் மொழி வாரி மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டபோது கொல்லேஹால் பகுதி கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் 1979ல் ஈரோடு மாவட்டமும், 2009ல் திருப்பூர் மாவட்டமும் ஏற்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment