Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 12, 2013

கேட்ஜெட் உலகில் புதிய புரட்சி


கைப்பேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டாலோ, அல்லது அது இயங்காமல் போய்விட்டாலோ அடுத்த கணமே நமது வேலைகளில் பாதி முடங்கிவிடுகின்றன. கைப்பேசி தொலைந்துவிட்டாலோ அவ்வளவுதான், கை ஒடிந்தது போலாகி விடுகிறது. இதற்குக் காரணம் கைப்பேசியை தகவல்தொடர்புக்காக மட்டும் நாம் பயன்படுத்துவதில்லை, கைப்பேசி என்பது அலாவூதீன் அற்புத விளக்கு போல இன்றைக்கு மாறிவிட்டது.

ஏனென்றால், பாடலை ரசிக்க மியூசிக் பிளேயர், படம் எடுக்க கேமரா, மின்னஞ்சல் பார்க்க இணையம் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் கைப்பேசிகள் வருகின்றன. அது மட்டுமல்ல பேஜரில் அனுப்பக்கூடிய குறுந்தகவல்கள், கடிகார அலாரம், கால்குலேட்டர் போன்ற எளிய செயல்பாடுகளுக்கும் கைப்பேசிகளையே நாம் நம்பி இருக்கிறோம். கைப்பேசிகளுக்கு என லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், கைப்பேசிகள் குட்டி கணினியாகவே மாறி வருகின்றன.
குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுக்காக உருவாக்கப்படும் ஒரு கருவி, இப்படி வேறு பல மின்னணு கருவிகளின் வசதிகளுடன் இணைந்து வருவதுதான் ஒருங்கிணைந்த கருவி (converged device). தொழில்நுட்ப உலகில் இதுதான் அடுத்த பெரிய விஷயமாக இருக்கப் போகிறது. நாம் அனைவரும் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் ஒருங்கிணைந்த கருவி கைப்பேசி.
இவ்வளவு காலம் கைப்பேசிகளில் செய்து வந்த வேலைகளை இனிமேல் டிவியிலும் செய்ய முடியும். டிவியில் ஆன்லைன் கேம் விளையாடலாம், உங்கள் டிராப்பாக்ஸில் உள்ள கோப்புகளை எடுத்துப் பார்க்கலாம், மாற்றம் செய்யலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம்... அது மட்டுமில்லாமல் அதன் அடிப்படை அம்சங்களும்கூட ஹெச்.டி. தரம், 3 டி வீடியோக்களை பார்க்கக்கூடிய அளவுக்கு மேம்படப் போகின்றன. இவற்றுக்கு ஸ்மார்ட் டிவி என்ற பெயரும் வைக்கப்படலாம்.
இது எப்படி சாத்தியம்? ஆண்ட்ராய்டு என்ற ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இதற்கு காரணகர்த்தா. தொழில்நுட்ப உலகில் இந்த ஆண்ட்ராய்டு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்றைக்கு பலரது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிப்படை இந்த ஆண்ட்ராய்டுதான். இன்றைக்கு ஒவ்வொரு மின்னணு கருவியும், ஸ்மார்ட்போன்களைப் போலவே மாறும் கனவில் மிதந்து வருகின்றன.
இனிமேல் கேமராவில் இணையத்தைப் பார்க்கலாம், போட்டோக்களை ஷேர் பண்ணலாம், ஏன் விளையாடுவதற்கான வசதிகள்கூட இந்த ஆண்டு வந்துள்ளன. ஒரு கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் இனிமேல் டிவியில் செய்ய முடியும். டேப்ளட் கணினிகளை கைப்பேசியாகவும் பயன்படுத்த முடியும்.
புதிய வகை ஆண்ட்ராய்ட் கேமராக்கள், ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்க முயற்சித்து வருகின்றன. நிகான் எஸ் 800 சி, சாம்சங் கேலக்ஸி கேமராக்களைக்கொண்டு படத்தை எடுப்பது மட்டுமில்லாமல் படங்களை எடிட் பண்ணலாம், ஷேர் பண்ணலாம். இதில் சாம்சங் சிம் கார்டுடன் வருவதால், வைஃபை இணையத் தொடர்பும் தேவையில்லை.
ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம்தான் ஒருங்கிணைந்த கருவிகளின் புதிய படைக்கு மிகப் பெரிய பலமாகவும் பாலமாகவும் செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு கருவி திரையுடன் இருக்கிறதோ, அதில் எல்லாம் ஆண்ட்ராய்டை சேர்த்துவிட முடியும்.
விண்டோஸ் 8இன் வருகையும் இது போன்ற புதிய கலப்புச் சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளது. இனிமேல் லாப்டாப்பில் இருந்து தொலைபேச முடியும். ஏன் உங்கள் லாப்டாப்பே, ஒரு ஸ்மார்ட்போனாகவும் செயல்படும். விண்டோஸில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதால், ஒருங்கிணைந்த கருவிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக சந்தையில் வந்து விழும் மின்னணு கருவிகளை இயக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதே நுகர்வோருக்கு பெரும்பாடாக இருப்பதால், ஒருங்கிணைந்த கருவிகள் வேகமாகப் பிரபலமாகி வருகின்றன. மின்னணு கருவிகளின் மீது தீவிர காலத் கொண்ட ஒரு பயனர் ஸ்மார்ட்போன், டேப்ளட் கணினி, லேப்டாப் அல்லது அல்ட்ரா புக் ஆகியவற்றை வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார். எனவே, இதற்கான தேவை அதிகரித்து வருவதால், கருவிகளை சங்மிக்கச் செய்யும் இந்தப் போக்குக்கு நிறுவனங்கள் வேகமாக மாறி வருகின்றன.
ஒருங்கிணைந்த கருவிகள் குரல்வழி தகவல்தொடர்பு வசதிகளையும், தகவல் சார்ந்த செயல்பாடுகளையும் ஒன்றிணைக்கும் புள்ளியாக உள்ளன. இதன் மூலம் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அனைத்து வகைகளிலும் தகவல்தொடர்பை பெற முடிகிறது. எதிர்காலத்தில் கையில் வைத்திருக்கும் ஒரேயொரு கருவி மூலம் எல்லா நேரமும், எல்லா தகவல்தொழில்நுட்ப அம்சங்களையும் பயன்படுத்தக்கூடிய வசதிகளை பயனர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால் டேப்ளட் கணினி, நோட்புக் கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றின் நிபுணத்துவத்தை அதிகரிக்க நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
ஆனால், ஒருங்கிணைந்த கருவிகளின் முதல் அலையில் வந்துள்ள தயாரிப்புகள், தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடிகள் இருப்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளன. ஒருங்கிணைந்த கருவிகளில் அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்படுத்துவதற்கு நிறுவனங்கள் திணறி வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்டு கேமராக்களில் நிறைய ஒருங்கிணைந்த வசதிகள் இருக்கின்றன என்றாலும்கூட, அவை தேர்ந்த கேமராக்களாக இல்லை.
ஒருங்கிணைந்த கருவிகளின் மற்றொரு பின்னடைவு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாததுதான். சில கருவிகளில் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் தங்கள் சொந்த விவரங்களை அளித்தாக வேண்டும். சைபர் குற்றவாளிகள் இந்த கருவிகளை குறி வைத்துத் திருடி, தனிப்பட்ட தகவல்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
அதேபோல இணையத் தொடர்பு இருக்கும் என்பதால் கேமரா, டிவி போன்றவை வைரஸ் தொல்லையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு அண்டு. எனவே, ஒருங்கிணைந்த கருவிகளுக்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பும் அவசியம்.
ஒருங்கிணைந்த கருவிகளில் இப்படி களையப்பட வேண்டிய, மேம்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருந்தாலும், மின்னணு கருவிகளின் எதிர்காலம் ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைந்த அம்சத்தை சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஒரேயொரு செயல்பாட்டை மட்டும் செய்யும் கருவிகள், வேகமாக காலாவதி ஆகி வருகின்றன. எதிர்காலத்தில் ஹெட்போன், மவுஸ் போன்ற துணைக்கருவிகள் மட்டுமே தனிச் செயல்பாட்டுக்கு உரியவையாக இருக்கலாம். ஆனால், ஒருங்கிணைந்த கருவிகளின் தாக்கம் அவற்றையும் விட்டு வைக்குமா என்பது இப்போது தெரியவில்லை. காத்திருப்போம்.

No comments:

Post a Comment