Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

இதயத்திற்கு இதமான உணவு


Post
Image
உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் உள்ள இதய நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டு களாகத்தான் இளவயது உடையோர்கள் கூட இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சரியான உணவுப் பழக்கம் இருந்தால் இதய நலத்தை நாம் பேணி பாதுகாக்கலாம்.
இதயம் சுருங்கி விரிவதன் மூலமாக உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்கிறது. உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், செயல்படவும் தேவையான ஆக்சிஜனையும், சத்துக்களையும் ரத்தம்தான் எடுத்து செல்கிறது. உடலின் கழிவுப் பொருளான கார்பன் டை ஆக்சடை ரத்தத்தின் மூலமாக நுரையீரலுக்கு அனுப்பி வெளியேற்றுவதும் இதயம்தான்.
இதயம் சீராக இயங்கவில்லை எனில் ரத்த ஓட்டம் சரிவர நடக்காது. அதன் விளைவாக உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ரத்த ஓட்டத்துக்கான அமைப்பில் ஏதாவது ஓரு பிரச்னை ஏற்பட்டால் அதுவே இதயம் தொடர்பான நோயாக உருவெடுக்கிறது. இதயத்தில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு, இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் (ணீக்ஷீtமீக்ஷீவீமீs), குறுகுவதோ அல்லது அவற்றில் ஏதேனும் அடைப்பு ஏற்படுவதுதான் முக்கிய காரணமாக அமைகிறது.
அடைப்பு ஏற்படுவதற்கு கொலஸ்ட்ரல்தான் காரணம். இந்த ‘கொழுப்பை’ நாம்தான் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதில் கொழுப்புக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. ஆனால், இதயத்திற்கு கொழுப்பு வில்லன்தான். அதே நேரம் செறிவற்ற கொழுப்பு இதயத்திற்கு தோழன்.
நாம் உண்ணும் உணவு மூலம் நமக்கு கொழுப்பு சத்து கிடைக்கிறது. இது செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் என இரண்டு வகைப்படும். இறைச்சி, நெய், வெண்ணெய், பால் ஏடு ஆகியவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகம். முட்டையின் மஞ்சள் கருவிலும் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகம். இவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் ரத்தத்தில் அதிகரிக்கும்.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சோயா எண்ணெய், சூர்யகாந்தி எண்ணெய் ஆகிய எண்ணெய்களில் செறிவற்ற கொழுப்பு அமிலம் உள்ளது. சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒருவர், சமையல் எண்ணெயை ஒரு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொள்வதுதான் நல்லது.
செறிவுள்ள கொழுப்புக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு உணவு முறைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டால், இதயம் ‘டொப், டொப்’ என சீரற்று துடிக்காமல் ‘லப் டப், லப் டப்’ என சீராக துடிக்கும். அதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். இதயத்திற்கு இதம் தரும் உணவுகள் எவை என்பதை அறிந்து கொண்டு அதை உணவில் சேர்த்து வந்தாலே போதும்.
காய்கறிகள், பழங்கள்
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் விட்டமின் ‘சி’ மற்றும் ‘கரோட்டெனய்டு’ (Carotenoid) சத்து உள்ளது. இவற்றில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. தினமும் ஒரு கப் ‘வெஜிடபிள் சாலட்’ அல்லது ‘ஃபுரூட் சாலட்’ உண்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் என எந்த பழமாக இருந்தாலும் சாப்பிடலாம்.
முழு தானியங்கள்
முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பட்டாணி, அவரை போன்றவை இதய நலத்திற்கு ஏற்றது. சோயாபீனை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு சோயாபீன் பெரிதும் உதவுகிறது. சோயாபீன் விதைகளை பத்து நாளைக்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனளிக்கும்.
மீன் மற்றும் மீன் எண்ணெய்
மீன் மற்றும் மீன் எண்ணெய்களில் காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலம் (செறிவற்ற கொழுப்பு) இதய நோய்களில் இருந்து காப்பாற்றும் தன்மை கொண்டது. கடல் மீன்களில் உள்ள செலினியம் என்ற சத்து உடம்பில் உள்ள நச்சுப் பொருள்களுக்கு வில்லன். அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் இரண்டு முறையாவது மீனை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சைவ உணவுகளில் இந்த ஒமேகா கொழுப்பு அமிலம் உளுத்தம் பருப்பு, காராமணி மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றில் காணப்படுகிறது.
உப்பு
உப்பை அதிகம் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தமும் அதிகமாகிறது. சராசரியாக ஒருவர் ஒருநாளைக்கு 5 கிராம் அளவுக்கே உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக உப்பை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து இதயம் பாதிக்கப்படும்.
ஊறுகாய், அப்பளம், வத்தல், பேக்கரி அயிட்டங்கள், ‘டின்னுடு ஃபுட்’, சிப்ஸ் உள்ளிட்டவகைகளை அறவே தவிர்ப்பதற்கு இதயத்திற்கு நல்லது.
உணவுக் கட்டுப்பாடு இருந்து, இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை உண்டு வந்தால் இதயமும் சீராக இருக்கும். இல்லறமும் சிறக்கும்.

No comments:

Post a Comment