Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

உயரமான இடங்களில் உடல் எடை குறையும் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

லண்டன்: மனிதனின் உடல் எடை, பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதியில் இருக்கும் நபர், உயரமான இடத்திற்கு செல்லும் போது, அவரது உடல் எடை குறைவதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் உடல் எடைக்கும், புவி ஈர்ப்பு விசைக்கும் உண்டான தொடர்பு குறித்து, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமியின் வெவ்வேறு இடங்களில், புவி ஈர்ப்பு விசை மாறுபடுவதால், மனித உடல் எடையும் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுபடுவதாக, ஆஸ்திரேலியாவின், கர்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.


இது குறித்து, ஆய்வாளர் கிறிஸ்டியன் ஹர்ட் கூறியதாவது: பூமி சீரான கோள வடிவில் இல்லை. இதில், பல்வேறு உயர்ந்த குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், ஆழமான கடல்களும் உள்ளன. இந்த அனைத்து பகுதிகளிலும், புவி ஈர்ப்பு விசை, ஒரே சீரானதாக அமைவதில்லை. பூமியின் மைய நோக்கு விசையின் காரணமாகவே, இங்குள்ள பொருட்கள் அனைத்தும், சுற்றும் பூமியிலும் நிலையாக நிலைத்து நிற்கின்றன. எனினும், இந்த மைய நோக்கு விசை, பூமியின் மையப் பகுதியில் இருந்து செயல்படுவதால், உயரமான மலைக்குன்றுகளில் நிலவும் விசையிலும், ஆழமான பகுதிகளில் நிலவும் விசையிலும் மாறுபாடுகள் உள்ளன.
அவ்வகையில், பூமியின் ஒரு பகுதியிலிருந்து, உயரமான மலைப் பகுதிக்கு செல்லும் ஒருவருக்கு, உடல் எடை கணிசமான அளவு குறைகிறது. பூமியின், புவி ஈர்ப்பு விசை பற்றி துல்லியமாக கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் மூலம், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு, 250 மீட்டர் இடைவெளியிலும், ஒவ்வொரு, 5 வினாடிகளில், புவி ஈர்ப்பு விசையில் மாறுபாட்டை உணர முடிந்தது. அவ்வகையில், பூமியின் உயரமான பகுதிகளில், ஈர்ப்பு விசை குறைவாகவும், தாழ்வான பகுதிகளில், அதிகமாகவும் பதிவானது. தென் அமெரிக்காவின், பெரு நாட்டில் உள்ள, நிவேடோ ஹுயாஸ்கரன் மலைப்பகுதியில் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசையும், ஆர்க்டிக் கடல் பகுதியில் அதிக அளவிலான புவி ஈர்ப்பு விசையும் பதிவாகின. ஆர்க்டிக் கடல் பகுதியில் இருக்கும் நபரின் உடல் எடை, நிவேடோ மலைப்பகுதிக்கு செல்லும் போது, ஒரு சதவீதம் குறைகிறது. ஆர்க்டிக் கடல் பகுதியில், 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் நபர், நிவேடோ மலைப்பகுதியில், 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் போது, நிலப்பகுதியை அடைய, 16 மில்லி நொடிகள் தாமதமாகிறது. குதிக்கும் நபர், ஒரு சதவீத உடல் எடையை இழப்பதே இதற்கு காரணம். பூமியின் வெவ்வேறு இடங்களில் இவ்வகை எடை மாறுபாடு ஏற்படினும், மனிதனின், நிறையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. இவ்வாறு, கிறிஸ்டியன் ஹர்ட் கூறினார்.

No comments:

Post a Comment