Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 8, 2013

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.

இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் நம் முன்னோர்களின் தியாகத்தால் கிடைத்ததுதான். நாம் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சுதந்திரத்திற்க்காக போராடிய சில தலைவர்களைப் பற்றி படித்திருக்கிறோம்.ஆனால் நாம் பள்ளியில் படிக்காத, நமக்கு தெரியாத பலர், சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு, துன்பப்பட்டு, அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்துள்ளனர்.சுதந்திர போராளிகளை அன்று அடைத்து கொடுமைபடுத்திய இடம் அந்தமான் சிறை. இங்கு போராளிகள் நுகத்தடியில் மாட்டிற்கு பதிலாக விலங்கிடப்பட்டு, செக்கிழுக்க வேண்டும். காலை முதல் மாலை வரை செக்கிழுத்து அன்றைய கணக்குப்படி தினம் 25 பவுண்ட் எண்ணை எடுக்க வேண்டும்.ஓய்வு எடுக்காமல் செக்கு இழுத்தால்தான் இவ்வளவு எண்ணை எடுக்க முடியும். 25 பவுண்டிற்கு எண்ணை குறைந்தால் முதுகுத்தோல் கிழியும் அளவிற்கு கசையடி கிடைக்கும். சில சமயம் படுக்க விடாமல், உட்காரவிடாமல் கை கால்களை அகட்டி வைத்து இரும்பு சங்கிலி மாட்டப்படும்.

புதுச்சேரியில் அரவிந்தாஸ்ரமம் அமைத்த அரவிந்தரை நமக்கு தெரியும்.அவர் ஆஸ்ரமம் அமைத்து, ஆன்மிக வாழ்வில் ஈடுபடும் முன் வங்காளத்தில் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அப்போது அவர் பெயர் அரவிந்த கோஷ். இவர் தீவிரவாதத்தின் மூலமே சுதந்திரம் பெற முடியும் என நினைத்து போராடியவர்.
இவர் மட்டுமல்ல இவரது குடும்பமே, சுதந்திரத்திற்காக போராடிய குடும்பம்தான். அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக, வங்கத்தில் நடந்த அலிப்பூர் சதியில் பங்கு பெற்றதற்காக பாரிந்தரர், உல்லாஸ்கர், ஹேமசந்திர தாஸ் மூவருக்கும் கடும் தண்டனை விதிக்க பட்டது. மூவரும் கொடுஞ் செயல்களுக்கு பெயர் போன அந்தமான் சிறையில் அடைக்க பெற்றனர். அங்கு நடந்த சித்திரவதை தாங்காமல் உல்லாஸ்கருக்கு பைத்தியம் பிடித்து விட்டது இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கீழ்பாக்கம் மன நல மருத்த்துவ மனையில் சேர்க்கபட்டார்

ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதற்காக பஞ்சாபில் கர்தார்சிங் என்பவருக்கு தூக்கு தண்டனை வழங்க பட்டது. பொதுவாக தூக்கு தண்டனை விதிக்க பட்டவர்கள் துக்கிலிடுமுன் கவலைப்பட்டு உண்ணாமல் உறங்காமல் இருந்து மெலிந்து விடுவார்கள் .ஆனால் இவர் நாட்டிற்காக உயிர் விடுகிறேன் என்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 தான்.தூக்கிலிடப்ப்படும்வரை சிறையில் ஆடிப்பாடி சந்தோசமாக இருந்தார். இதனால் இவர் 16.9.1916 அன்று தூக்கிலடப்படும்போது இவர் எடை அப்போதைய கணக்குப்படி 12 பவுண்ட் கூடி இருந்தது. வாழ வேண்டிய இளம் வயதில் நாட்டுக்காக உயிர் விடுவதில் எத்தனை மகிழ்ச்சி பாருங்கள்.

சிட்டகாங் புரட்சியில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்க பட்டவர். சூர்யாசென். இவரை 12/04/1934ல் தூக்கிலிடும்போது வந்தேமாதரம் என முழக்கமிட்டார். வந்தே மாதரம் என சொல்லாதே என சிறை அதிகாரிகள் அவரை அடித்தனர். அவர் மறுத்து, மீண்டும் கோஷமிட ஆங்கிலேய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து அவரை அடித்து, அவர் மயங்க, மயங்கிய நிலையிலேயே தூக்கிலிட்டனர்,
30/10/1928 சைமன் கமிஷன் எதிர்த்து லாகூரில் லாலாலஜபதிராய். ஊர்வலம் நடத்தினார். சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி ஊர்வலத்தின் மீது, பயங்கர அடக்குமுறையை ஏவினான். லாலா லஜபதியை சுற்றி நின்று சாண்டர்ஸ் தலைமையில் ஆங்கிலேயர் தாக்கினர். இதனால் பலத்த காயமுற்ற லாலா 17/11/1928 ல் மரணமடைந்தார். இதற்கு பழி வாங்கும் விதமாக 17/12/1928,ல் சாண்டர்ஸ் பகத்சிங்கால் சுட்டு கொல்லப்பட்டான்.

சில வருடங்களுக்கு பின் பகத்சிங் கைது செய்யப்பட்டு, 23/03/1931 அன்று தூக்கிLIDAPATTARலிடபட்டார்.அவர் இறந்த உடல் கூட புரட்சியை தூண்டும் என எண்ணிய ஆங்கிலேயர்கள் அவர் உடல் பாதி எரிந்த நிலையிலேயே சட்லெஜ் நதியில் எறிந்து விட்டனர்.

வங்காளத்தில் வைஸ்ராய். ஹார்டிஞ்ச் பிரபு மீது குண்டு வீசியவன் தினநாத் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்ய முயன்றனர்.ஆனால் குறிப்பாக அவர் யார் எனத் தெரியவில்லை. ஆகவே தினநாத் என்ற பெயர் கொண்ட எல்லோரையுமே வங்காளத்தில் கைது செய்து அடித்து துன்புறுத்தி விசாரித்தனர். ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தினநாத் என இருப்பதாக அறிந்து அந்த குடிசையில் சென்று தேடியபோது, ஆண்களே இல்லை.அங்கு இருந்த பெண்ணிடம் தினநாத் எங்கே என கேட்டபோது இவன் தான் தினநாத் என தன் இடுப்பில் இருந்த ஒரு வயது பையனை காண்பித்தாள். போலிசார் அசடு வழிந்து திரும்பினர்.
இந்தியாவில் ஆன்மிக புரட்சி செய்தவர் சுவாமி விவேகானந்தர். இவரின் தம்பி பூபேந்திரநாத் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தவர். தமிழ் நாட்டில் சுதந்திர கனல் எழுப்பிய சுதேச மித்திரன்போல் வங்காளத்தில் விடுதலை முழக்கமிட்ட இதழ். “யுகாந்தர்” ஆகும். இதன் ஆசிரியர் குழுவில் ஒருவர்தான் விவேகானந்தரின் தம்பி. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுதியதற்காக பூபேந்திரநாத்திற்க்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது

தமிழ் நாட்டிலும் சுதந்திர போராட்டத்தில் சாதாரண மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெள்ளையனே வெளியேறு என மதுரை விளக்குதூண் அருகே முழக்கமிட்ட சொர்ணம்மாள், லக்ஷ்மி என்ற இரு பெண்களையும், போலீசார் மிருகத்தனமாக தாக்கி நிர்வாணமாக வீதியில் விட்டனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் இன்ஸ்பெக்டர் தீச்சட்டி கோவிந்தன் என்பவன். இதற்குபழி வாங்கும் விதமாக மதுரை தேசிய தீவிரவாதிகள் இந்த இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஆசிட் வீசி அவன் முகத்தை உருக்குலைய செய்தனர்.

சுதந்திர போராட்டத்தில் திருவாடனை பகுதி மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் பெற்ற துன்பமும் அதிகம். இப்பகுதியில் சுதந்திர போராட்டதிற்கு தலைமை வகித்தவர்கள் செல்லத்துரை, முனியப்பன், சிவஞானம் என்ற மூவர். இவர்கள் தலைமையில் திரண்ட மக்கள் கூட்டம், திருவாடனை சிறையை உடைத்து, சின்ன அண்ணாமலை போன்ற வீரர்களை விடுவித்தனர். அதன்பின் இப் போராட்ட கூட்டம் தேவக்கோட்டையை நோக்கி சென்றது. அங்கு ஆங்கில அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அடித்து நொறுக்க பட்டன. செய்தி கேட்டு, வால்ட் என்பவன் தலைமையில் வந்த போலிஸ், மக்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டது. அன்று அங்கு 50 பேர் இறந்தனர், 100 பேர் படுகாயமுற்றனர். நம்மால் மறக்கப்பட்ட தென்னாட்டு ஜாலியன்வாலாபாக் இது. ஆங்கிலேயர் சிவஞானத்தையும், முனியப்பனையும் சுட்டு கொன்றனர். செல்லத்துரை மட்டும் தப்பி ஓடி தலைமறைவானார். விடுமா ஆங்கிலேய அரசு. அவர் வீட்டை அடித்து நொறுக்கியது. அவருக்கு சொந்தமான நிலங்களில் பயிர்களை, மரங்களை அழித்தது. செல்லத்துரையின் தம்பியை பிடித்து, அவர் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஊர்வலம் விட்டது. ஒரு சவர தொழிலாளியை அழைத்து அவருக்கு மொட்டை போட சொன்னது. மறுத்த அவரை தாக்கியது ஆங்கில அதிகாரவர்க்கம், அப்போதும் மறுத்த அந்த தொழிலாளி, அதே சவர கத்தியால் தன் கழுத்தை அறுத்து கொண்டார்.

இப்பகுதியில் ஒரு தேச பக்தரை தேடி அவர் வீட்டுக்கு போலிஸ் சென்றது. அவர் தலை மறைவாகி விட்டதால், அவர் மனைவி காளியம்மாளின் கையிலிருந்த குழந்தையை பிடுங்கி வீசினான், விசாரிக்க சென்ற “லவட்” என்ற ஆங்கிலேயன். சத்தம் கேட்டு மக்கள் அங்கு வந்தனர். அதில் ஒருவனை அழைத்து அந்த பெண்ணின் சேலையை உருவ சொன்னான்.அவன் மறுத்தான்.அவனுக்கு அடி கொடுத்தவுடன், அவன் தாங்க முடியாமல் அப பெண்ணின் சேலையை உருவினான். அடுத்து சேலையை உருவினவனையே அப் பெண்ணை கட்டி பிடிக்க சொன்னான் லவட். ஐயா அவள் என் தங்கை முறை என மறுத்தான்.மீண்டும் அவனுக்கு லத்தி அடி. அவன் அடி தாங்காமல் அதையும் செய்தான். அது மட்டுமல்ல அந்த பெண்ணையும் பருவம் அடையும் வயதில் இருந்த அவள் மகளையும் காவல் நிலையம் அழைத்து சென்று பல நாள் வைத்திருந்து கெடுத்தான். அந்த லவட் என்ற அயோக்கியன்.

ராமசாமி என்பவர் இப்பகுதி சுதந்திர போராட்ட வீரர். அவரை கைது செய்த அரசு, அதோடு விட்டு விடாமல், கமலாம்பாள், முனியம்மாள் என்ற அவரின் இரு மனைவிகளையும் காவல் நிலையம் அழைத்து வந்தது. இளையவள் கையில் ஒரு விளக்குமாறு கொடுத்து, அதை சாணி கரைத்த தண்ணீரில் முக்கி, மூத்த மனைவியை அடிக்க சொன்னார்கள்.அவள் மறுக்க அவள் சேலையை உருவ போலிஸ் முற்பட்டது. அதைக்கண்ட மூத்தவள் தன்னை அடிக்குமாறு இளையவளை கேட்டு கொண்டாள். இளையவளும், சாணி கரைத்த விளக்குமாற்றால் மூத்தவளை அடித்தாள். சற்று நேரம் கழித்து, மூத்தவளிடம் அதேபோல் இளையவளை அடிக்க சொன்னார்கள். இருவரும் மாறி மாறி அடிப்பதைக் கண்டு சிரித்தனர், கண்ணியமற்ற ஆங்கிலேய அதிகாரிகள். அதன் பின் சில பெண்களை அடித்து அழைத்து வந்து, அவர்களை வெற்றிலை போட சொல்லி அதன் சாற்றை இருவர் மேலும் துப்ப சொன்னார்கள். பின் இருவரையும் அதே கோலத்தில் வீட்டிக்கு போகச் சொல்லி விரட்டினர்.

இன்னொரு சுதந்திர போராட்ட வீரரின் குடும்ப பெண்களான சிட்டு, மீனா என்ற இருவரையும் காவல் துறையினர் ஊர் பொது இடத்திற்கு அழைத்து வந்தனர். ஊர் மக்களையும் மிரட்டி அழைத்து வந்து, அவர்கள் மத்தியில் இரு பெண்களையும் நிற்க வைத்தனர். கூட்டத்தில் ஒருவனை அடித்து அப் பெண்களின் சேலையை உருவச் செய்து, கட்டி அணைக்க வைத்தனர். அந்த மனிதனை அந்த பெண்களின் முதுகில் ஏறச் செய்து ஊரை சுற்ற செய்தனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியர்ர் என்பவர் ஆங்கிலேய அரசு பணியில் மாதம் அப்போது 1000 ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். தூத்துக்குடியில் வ.உ.சி கப்பல் கம்பெனி ஆரம்பித்த உடன் நாட்டு பற்றால் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து கப்பல் கம்பெனியில் மாதம் 100 சம்பளத்திற்கு மேலாளராக பணியாற்றினார்.

1927ல் பெல்காமில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது சோமையாஜுலு என்ற மதுரை தேச பக்தர் சுதந்திர பிரசாரம் செய்து கொண்டு மதுரையிலிருந்து , பெல்காமிற்கு 700 கி.மீ. தூரம் நடந்தே சென்று மாநாட்டில் பங்கு பெற்றார். மாநாடு முடிந்தபின் அதே தூரம் சுதந்திர பிரசாரம் செய்து கொண்டே பெல்காமிலிருந்து நடந்தே மதுரை வந்தார்.

பாகிஸ்தானின், வடமேற்கு எல்லை மாகாணத்தை சேர்ந்த ஜமீந்தார் ஒருவரின் மகன் எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் காபர்கான். எல்லா வசதிகளோடும் வாழ வாய்ப்பு இருந்தும் , அவற்றை மறுத்து, தன்னைத்தானே எளிமையாக்கி கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவரை தலைவராக தேர்ந்தெடுக்க 1934 ல் சிலர் ஈடுபட்டபோது தொண்டனாகவே இருக்க விரும்புவதாக கூறி வந்த பதவியை மறுத்தார். தான் வாழ்ந்த வட மேற்கு மாகாணத்தை பாகிஸ்தானோடு சேர்க்க கூடாது , இந்தியாவோடுதான் சேர்க்க வேண்டும் என சொல்லியதால், பாகிஸ்தான் அரசால் 13 ஆண்டுகள் சிறையில் அடைக்க பெற்றார். சுதந்திரத்திற்குபின் இவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க பட்டது. இதற்காக இந்திய அரசு விமானத்தில் இவரை வரவழைத்தது. இவரை விமான நிலையத்திற்கு வரவேற்க போனவர்களுக்கு அதிர்ச்சி. ஏன் எனில் இவர் தன்னோடு கொண்டு வந்தது ஒரு மாற்று உடை மட்டுமே அவ்வளவு எளிமை. இப்போது இதை யாரிடம் தேடுவது.

ஆஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலத்தை, காவல் நிலைய மேஜையில் கையை விரித்து வைத்து கயிறால் கட்டி, இந்த கைதானே ஆங்கிலேயரை விரட்டுவோம் என தாளில் எழுதி ரத்த கையெழுத்து போட்டது எனக் கூறி, விடாமல் தொடர்ந்து லத்தியால் அடித்ததனர்.. அவர் கை எலும்புகள் அனைத்தும் நொறுங்கி கை முடமாகி விட்டது.
திருச்செந்தூர்-குலசேகரபட்டிணம் பகுதியில் மேகநாதன் என்பவர் தலைமையில் சுத்ந்திர போராட்டம் தீவிரமாக நடந்தது. பெற்றோர் தங்களது ஒரே பையனுக்கு பெண் பார்க்க முயலும் போது சுதந்திரம் வரும் வரை திருமணமே செய்ய மாட்டேன் என மேகநாதன் மறுத்து விட்டார்.சுதந்திரம் வந்தபோது, திருமண வயது கடந்து விட்டதால் திருமணமே செய்யவில்லை.
சுதந்திரத்திற்காக முகம் தெரியாத, முகவரி இல்லாத, பலர் உயிர் துறந்து உள்ளனர். பலர் சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளனர் .பலர் சொத்து, சுகம் பதவிகளை இழந்துள்ளனர்.வாழ வேண்டிய வயதில் இளைஞர்கள் பலர் உயிரை இழந்துள்ளனர். பலர் தங்கள் இளம் வயதை சிறையில் கழித்து உள்ளனர்.தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர்.பெண்கள் தங்கள் கணவர்களை இளம் வயதில் இழந்துள்ளனர்.. ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பை இழந்துள்ளனர், அவமானபடுத்த பட்டுள்ளனர்.

இளைஞர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை./
தொகுப்பு.குலசை.Aஆ.கந்தசாமி


No comments:

Post a Comment