Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 8, 2013

புக்கெட் ஹாலிடே


புக்கெட் தீவை ஓர் உல்லாசபுரி என்றே கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன் சுனாமியினால் ஏற்பட்ட அழிவினைச் சீர்படுத்திய பின் புதுப்பொலிவுடன் விளங்கும் புக்கெட் தீவைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்தத் தீவையா சுனாமி உருக்குலைத்தது என்று வியக்கும் வண்ணம் அழகின் சிகரமாக விளங்குகிறது புக்கெட்.
நீலவண்ணக் கடலுக்கு வெள்ளிக் கிரீடம் வைத்ததுபோல் வெள்ளை நிற கடற்கரை மணலில் கால் பதித்து நடப்பதே ஒரு சுகம்; பட்டு விரித்தாற்போன்று அப்படியொரு மென்மை.

யானைகளின் நிறைந்த எண்ணிக்கையைப் பயன்படுத்தி இங்கு ஒரு மாபெரும் வேடிக்கை காட்சி தினமும் மாலையில் நடைபெறுகிறது. புக்கெட்டுக்கு வருவோர் தவறாமல் காண வேண்டிய ஷோ இது.
ஃபான்டாசீ எனும் இக்காட்சி மிகச் சிறந்த ஒலி அமைப்பு - கொண்டு 3000 பேருக்கும் மேல் அமரக்கூடிய ஒரு பரந்த கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. அக்கலைக் கூடத்தின் நுழைவாயிலே கண்களையும் மனதையும் கவர்வதாக உள்ளது. சுக்தாய் காலத்திய அரண்மனையானது. யானைச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு பழைமையும் புதுமையும் மிளிர அமைந்திருக்கிறது. சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் கலைநயத்துடன் வடிவமைத்திருக்கிறார்கள். இக்கூடத்துக்கு வாங்கப்படும் டிக்கெட்டிலேயே மிகப் பெரிய உணவுக் கூடத்தில் பஃபே முறையிலான இரவு விருந்தும் தரப்படுகிறது. கிழக்காசிய நாடுகளில் எல்லாவித சிறப்பு உணவுகளும் பஃபே மேசையை அலங்கரிக்கின்றன. அமர்க்களமாக அறுசுவை உணவு உண்ட பின்னர் கருத்துக்கு விருந்தளிக்கும் காட்சி கூடத்துக்குச் சென்றோம்.
தாய்லாந்து கலாசாரம், தந்திரக் காட்சிகள், நாற்பரிமணாமக் காட்சிகள். மேடையிலேயே நடைபெறும் தீயெறிக் காட்சிகள் யானைகளின் அணிவகுப்பு மற்றும் யானைகளின் சாகசங்கள், யானையுடன் எருமை, ஆடுகள் போன்ற விலங்குகளும் ஒரே மேடையில் காட்சி அமைப்பின் படி சாகசங்களை நிகழ்த்துவதென்பது பிரமிப்பூட்டும் அம்சமாகும்.


"கமலா' எனும் நங்கையின் காதல் கதை, இத்தீவின் முக்கியமான காவியமாகும். அக்கøயினை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகம் அசத்துகிறது. எல்லா பருவத்தினரும் ரசிக்கக்கூடிய நம்ப முடியாத அம்சங்கள் கொண்ட இந்நிகழ்ச்சி பயணத்தின் ஹை-லைட்!
முக்கியமாக கண்டுகளிக்க வேண்டிய குட்டித் தீவுகள் பல உண்டு. ஜேம்ஸ் பாண்ட் ஜலண்ட், பீ.பீ. ஜலண்ட், மங்கி பே, லீம் தாங்க் பீச், கமலா பீச், ரவாய் பீச், கோரல் ஜலண்ட், ராக்கா பீச் என பீச்களின் வரிசைகள் எங்கள் மனக்கண்களில் அணிவகுத்து நின்றன. கோரன் வியூவ் பாயிண்ட். மூன்று தீவுகள் கடானாய், காட்டா, காரன் கடற்கரைகளை ஒரே சமயத்தில் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
முதலில் பீ.பீ.பீச்சை நோக்கி புறப்பட்டது எங்கள் விசைப்படகு. படகிலிருந்து எட்டி நீர்ப்பரப்பைப் பார்த்தால் எத்தனை இயற்கை அற்புதங்கள்? பலவண்ண மணற்பரப்பின் மேல் ஓடும் தெளிந்த நீர். அதில்நிறைந்துள்ள மீனினங்களுக்கு நாம் உணவு அளித்தால் அதனை உட்கொள்ள நீரின் மேற்பரப்புக்குக் கூட்டமாக வரும் வண்ண மீன்கள் இவை யாவும் காணக் காண தெவிட்டாது.
பீ.பீ. ஜலந்து செல்லும் வழியில் மங்கி ஜலண்ட் (குரங்குகள் தீவு) என்ற இடத்தில் இறங்கினோம். அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்து மகிழ்ந்தனர் எங்கள் குழுவில் உள்ள குழந்தைகள்.
இங்குள்ள குகையில் உள்ள படுத்த நலையிலான (ரிக்லைனிங்க் புத்தர்) புத்தரைத் தரிசித்து விட்டு பீ.பீ. ஐலண்ட் நோக்கிப் பயணித்தோம். பீ.பீ. ஜலண்டில் உள்ள கோ பீ.பீ.டான் என்னுமிடத்தில் மதிய உணவருந்தினோம். இங்குள்ள உணவகங்களில் கடல் உணவுகள் பிரத்யேக உணவாக இருந்தபோதிலும் மிகச் சுவையான மலேசிய சைவ உணவு வகைகளும் கிடைக்கின்றன என்பது வரவேற்கத்தக்கதாகும். நம்மூர் சுண்டைக்காய் கூட்டு முதல் மோர்க்குழம்பு போன்ற அசல் தென்னிந்திய உணவுகளும் கிடைக்கின்றன.
தாய்லாந்து உணவில் ஒரு சிறப்பு மெனு. பைனாப்பிள் ரைஸ் எனப்படும் அன்னாசி சோறு. பைனாபிள் கலந்து சமைக்கப்பட்ட சாதத்தை அன்னாசிப்பழ கூட்டுக்குள் வைத்து தரப்படும் இவ்வுணவு கண்களுக்கும் நாவுக்கும் நல்ல விருந்து.
புத்தர் கோவில்கள்: புக்கெட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை புத்த மதத்தினர் என்பதால் புத்தர் கோயில்கள் அதிகமாக காணப்படுகின்றன. சைதங்க், காட்டா என்ற இடங்களுக்கு நடுவே அமைந்துள்ள பெரிய புத்தர் கோயில் பிரசித்தமானது. 45 அடி உயரமுள்ள இச்சிலை வெகு தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் மலை உச்சியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

எப்படிச் செல்லலாம்?
சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து விமான வசதி உண்டு. விமான டிக்கெட் எடுக்கும்போதே டிராவல்ஸ் மற்றும் தீவுகளுக்குச் செல்ல படகுகளுக்கும் முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.
தங்கும் இடம்:
பட்ஜெட் ஹோட்டல்கள், ஸ்டார் ஹோட்டல்கள், ரிஸார்ட்கள் உள்ளன. சீ வியூவ் ஹோட்டல்கள் ஏராளம் உண்டு. எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க குறைந்த பட்சம் நான்கு நாட்கள் தேவை.
ஷாப்பிங்:
கடல் சிப்பிகள், கொட்டாங்கச்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், செராமிக் பொம்மைகள், தாய்ப் பட்டுப் புடவைகள்.
எப்போது செல்லலாம்?
நவம்பர் முதல் ஏப்ரல் வரை சீசன் காலம். செப்டம்பர், அக்டோபர் அதிக மழைக்காலம்.

கலாவதி ரெங்கசாமி, திருச்சி

No comments:

Post a Comment