இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.