இந்தியாவில் மதச்சார்பின்மை என்ற அரசியல் சமூகப் பார்வை மிக ஆழமாக வேர்விட்டிருக்கும் மாநிலமாகத் தமிழகம் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கியமான மாநிலக் கட்சிகளில் எவையும், த.மு.மு.க. நீங்கலாக, மதச்சார்புடைய கட்சிகள் இல்லை. இந்நிலை திராவிட இயக்கத்தின், குறிப்பாகப் பெரியாரின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
மோடிக்கு எதிர்நிலை
இந்திய அரசியலில் ஒப்பீட்டளவில் ஆதிக்கச் சாதியினரின் அரசியல் ஆதிக்கம் குறைவாகக் காணப்படும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. மண்டல் ஆணையத்துக்குப் பின்னர் இந்திய அரசியலில் ஓரளவுக்கு ஏற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அரசியல் அதிகாரம், தமிழகத்தில் அதற்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது. அத்தோடு, இந்தி ஆதிக்கம், இந்துத்துவம், அதி வலுவான மத்திய அரசு, கார்ப்பரேட் ஆதிக்கம் போன்றவற்றைக் கொள்கை அளவில் எதிர்ப்பவை தமிழக அரசியல் கட்சிகள். மேற்படி எதிர்நிலைகளை மோடியைப் போலப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்திய அரசியலில் அதிகம் இல்லை.