ப த்தாம் வகுப்பு படித்து விட்டாலே மடிப்பு கலையாத சட்டை, பேன்ட் போட்டு... காலரை தூக்கி விட்டுக் கொண்டு ‘கலெக்டர் வேலை பார்க்கறதுக்காகத்தான் நான் பொறந்திருக் கேன்’ என்று ‘வெள்ளைச் சட்டை' வேலைக்காக அலைகிற காலமிது. ஆனால், கம்ப்யூட்டர் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு, குடும்பத்தோடு நாடு திரும்பி, பேருந்து போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்தில் நாலுமுழ வேட்டியோடு விவசாயம் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா?
பெயரில் ஆத்தூர் இடம்பெற்றிருந்தாலும் அந்த ஊரிலேயே கிடைக்காத 'ஆத்தூர் கிச்சடி சம்பாவை' பொத்தி பாதுகாக்கிறார் பாலாஜி சங்கர் என்று கடந்த இதழில் படித்திருப்பீர்கள். 'அட' போட வைக்கும் அவரின் கதையை அடுத்த இதழில் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த பாலாஜி சங்கர்தான் ஆச்சர்யத்துக்குரிய மனிதர்.