Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

சுய தொழில்கள்-22.2 கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு

கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு


சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும், வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.

சந்தை வாய்ப்பு!

எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய,பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள்,ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.

தயாரிக்கும் முறை!

உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரன், மொந்தன் வாழைக்காய்களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்கு முன் காய்களை நன்கு கழுவி தோலை நீக்கி, இதற்கென பிரத்யேகமாக இருக்கும் இயந்திரத்தைக் கொண்டு தகுந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்கவேண்டும். தரமான எண்ணெய்யில் பக்குவமாக பொறித்தால் சிப்ஸ் ரெடி. தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.

தரக்கட்டுப்பாடு!

எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும்,சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இத்தொழிலைத் தொடங்க சுமார் 250 சதுர அடி இடம் வேண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டடம் கட்டவும், 75-80 சதுர அடியில் குடோன் மற்றும் பேக்கிங் அறைக்கு என ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்டமிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தது.

இயந்திரம்!
300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50டன் சிப்ஸ் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா,கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது.

அத்தியாவசிய தேவைகள்! தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

மூலப்பொருட்கள்!

உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் ஊட்டியில் கொள்முதல் செய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி,கேரளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலபமாக கிடைப்பதுதான். நமது ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகிதமும், நேந்திரன் சிப்ஸில் 20சதவிகிதமும் கழிவு ஏற்படலாம்.

வேலையாட்கள்!
சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1

செயல்பாட்டு மூலதனம்!

முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத்தித் திறனுக்கு செயல்பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

சிறிய அளவிலும், கொஞ்சம் பெரிய அளவிலும் இத்தொழிலைச் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக இறங்கலாம். தரம்,சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிப்ஸ் தயாரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.
நன்றி: நாணய விகடன்

முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை
''எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலாம். குறைந்த அளவிலான உற்பத்தி எனில் இயந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத்தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழிலில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவையாக இருக்கும். பாம் ஆயிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
எல்லா காலங்களிலும் உருளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந்திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவது நேந்திரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவையான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிகளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும் கிடைக்கும்.''
கிழங்கு சிப்ஸ் தரும் கலக்கல் லாபம்! -

தொழில்


Image

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். தரமான, சுவையான மரவள்ளி சிப்ஸை தயாரித்து வழங்கினால் நன்றாக சம்பாதிக்க லாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மரவள்ளி சிப்ஸ் விற்பனையாளர் மஞ்சுளா. அவர் கூறியதாவது: வீட்டிலேயே வடகம், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்று வந்தேன். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.

வேறு தொழில் செய்ய நினைத்தபோது, முதலீடு அதிகம் தேவைப்பட்டது. குறைந்த முதலீட்டில் எளிதாக தொழில் செய்ய முயற்சித்தபோது, மளிகை கடைகளிலும், வீடுகளிலும் சிப்ஸ் வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். சிப்ஸ் தயாரிப்பது தொடர்பான தொழில் முறைகளை கற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயாரிக்க தொடங்கினேன்.

ஒரு சிப்ஸ் மாஸ்டர், மரவள்ளியை உரிக்க 2 தொழிலாளர்கள் இருந்தால் போதும். கடைகளுக்கு சப்ளை செய்ய தகுதிக்கு ஏற்ப ஒரு மொபட் அல்லது ஆட்டோ தேவைப்படும். ஒரு டன் சிப்ஸ் தயாரிக்க 3 நாள் ஆகும். மாதம் ஒன்றுக்கு 5 டன் வரை தயாரிக்க முடியும். நான் சிப்ஸ் தயாரிப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளை கவனித்துக்கொள்கிறேன். எனது கணவர் கடைகளில் ஆர்டர் பிடிப்பது, சப்ளை செய்வது, கலெக்ஷன் மற்றும் மரவள்ளி கொள்முதல் போன்ற பணிகளை கவனித்துக் கொள்கிறார். இது ஒரு லாபகரமான தொழில்.

சந்தை வாய்ப்பு

100 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ என பேக்கிங் செய்யப்படும் சிப்ஸ் பாக்கெட்களை அருகில் உள்ள சிறிய மற்றும் பெரிய கடைகள், பேக்கரிகள், டாஸ்மாக் பார்கள் என உள்ளூரிலேயே எளிதில் விற்பனை செய்ய முடியும்.
டிப்ஸ்..

தயாரிக்கப்பட்ட தேதி யில் இருந்து 15 நாட்களுக்குள் சிப்ஸ் வகை களை சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் எதிர்பார்த்த சுவை இருக்காது. எனவே உடனுக்குடன் டெலிவரி செய்வது அவசியம். சிப்ஸை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் இருந்து பிரித்ததும் காற்றுபுகாத பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்தால் மொறுமொறுப்புடன் இருக்கும்.
செலவு


ஒரு டன் மரவள்ளி கிழங்கு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.7500க்கு விலைக்கு வாங்கப்படுகிறது. தோட்டத்தில் இருந்து கடைக்கு கொண்டு வர வண்டி வாடகை மற்றும் ஏற்று , இறக்கு கூலி என ரூ.1500, எரிபொருள் ரூ.3000, 15 கிலோ கொண்ட 2 டின் பாமாயில் ரூ.1800, 4 கிலோ மிளகாய் தூள் ரூ.500, 4 கிலோ உப்பு ரூ.20, கலர் பொடி ரூ.50, சிப்ஸ் மாஸ்டர் சம்பளம் ரூ.400, சிப்ஸ் சீவுவதற்கு கூலி (2 நபர்களுக்கு) ரூ.500, பேக்கிங் செய்ய பயன்படும் கேரி பேக் ரூ.100, விற்பனைக்கு கொண்டு செல்லும்போது வாடகை ரூ.750 என ஒரு டன் மரவள்ளி கிழங்கு தயாரிக்க ரூ.16,120 வரை செலவாகும். இது தவிர இடவாடகை, மின்கட்டணம் தனி.
வருமானம்


ஒரு டன் மரவள்ளி கிழங்கில் 380 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும். கிலோ கணக்கில் விற்றால் ஒரு கிலோ ரூ.60க்கு விற்க முடியும். இதன்மூலம் டன்னுக்கு ரூ.22,800 கிடைக்கும். 500 கிராம், 250 கிராம் என பாக்கெட் செய்து சில்லரையில் விற்கும்போது ரூ.2000 வரை கூடுதலாக லாபம் ஈட்ட முடியும். ரூ.16,120 செலவு போக மீதம் ரூ.6,680 வரை லாபம் ஈட்ட முடியும்.

தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வருவதற்கு பதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுக்கும் பட்சத்தில் மரவள்ளி கொள்முதல் விலையில் டன் ஒன்றுக்கு ரூ.300 வரை சேமிக்க முடியும். மரவள்ளி கிழங்கில் இருந்து உரிக்கப்படும் தோலை, மாட்டுதீவனம் தயாரிக்க கிலோ ரூ.2க்கு விலைக்கு வாங்கி கொள்கின்றனர். இதன் மூலம் ரூ.150 வரை கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

மரவள்ளி கிழங்கை தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வந்து நன்றாக கழுவி தோலை உரிக்க வேண்டும். பின்னர் சிப்ஸ் சீவும் கட்டையை கொண்டு தேவையான சைஸ்களில் சீவலாம். வட்டமாக வேண்டுமெனில் அதற்கென உள்ள கட்டையில் சீவவேண்டும். குச்சி சிப்ஸ் என்றால் அதற்கு தனி கட்டை உள்ளது. சீவிய கிழங்குகளை கொதி நிலையில் இருக்கும் எண்ணெயில் போட்டு 5 நிமிடங்களில் எடுத்து விடலாம். பேக்கிங் செய்வதற்கு முன்பாக சிறிதளவு மிளகாய் பொடி, உப்பு கலந்து சிப்ஸ் மீது லேசாக தூவ வேண்டும்.

எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பதால், பொடி நன்கு ஒட்டிக் கொள்ளும். பிறகு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். சுவை, தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு முறை தயாரிக்கும்போதும், அதை சுவைத்து பார்ப்பதும் முக்கியம்.

ரூ.10 ஆயிரம் போதும்

மரவள்ளி கிழங்கு, கேஸ் சிலிண்டர் (விறகு அடுப்பு என்றால் தென்னை மட்டைகள்), மிளகாய்த்தூள், உப்பு, பாமாயில், கலர்பொடி, வடைசட்டி, அரிகரண்டி, சாரணை, ஹீட்டர், கம்ப்யூட்டர் தராசு ஆகிய பொருட்கள் தேவை. மரவள்ளி கிழங்கு சீவும் கட்டை ரூ.750, எரிபொருள் ரூ.2000, வடைசட்டி ரூ.3000, அரிகரண்டி ரூ.500, சாரணை ரூ.400, ஹீட்டர் ரூ.300, கம்ப்யூட்டர் தராசு ரூ.3000 என மொத்தம் ரூ.10 ஆயிரம் முதலீடு போதும்.
தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து...
Engr.Sulthan

சுய தொழில்கள்-22.1 நேந்திரன் சிப்ஸ்..தயாரிப்பு

நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper







 

ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து சிப்ஸ் தயாரித்து விற்று நல்ல லாபம் அடைந்து வருகிறோம் என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம் நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு. மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது. பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து அறுவடை செய்தால், அதற்குண்டான விலை கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான் கிடைக்கிறது. வாங்குபவர் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது. போட்டி நிறைந்த வாழைத்தார் நேரடி விற்ப னையை தவிர்த்து, வாழைக் காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் பலன் உண்டு. இதனால் நேந்திரன் வாழைக்காயை சிப்ஸாக தயாரிக்க முடிவெடுத்தேன்.

3 ஏக்கர் நிலத்தில் விளையும் நேந்திரன் வாழைத்தார் மட்டும் சிப்ஸ் தயாரிப்புக்கு போதாது என்பதால், இயற்கை விவசாயம் மூலம் நேந்திரன் தயாரிக்கும் மற்ற விவசாயிகளையும் சேர்த்து கூட்டாக சிப்ஸ் தயாரிக்கிறேன். மாருதி ஆர்கானிக் பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தமிழ்நாடு இயற்கை விவசாய வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளோம். நிறுவனத்தில் மேலும் இப்பகுதியில் உள்ள இயற்கை நேந்திரன் வாழை விவசாயிகளையும் இணைத்து கூடுதலாக தயாரிக்க உள்ளோம். சிப்ஸ் தயாரிப்புக்கு இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தேங்காயில் இருந்து பிழியப்பட்ட எண்ணெயை பயன்படுத்துகிறோம். நேந்திரன் வாழைத்தாரை மதிப்பு கூட்டப்பட்ட சிப்ஸாக விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. வாழைத்தாராக விற்றபோது ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கப்படும் விளைபொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் நல்ல லாபம் பெறலாம்.

கட்டமைப்பு, முதலீடு: நான்கு தூண்கள் நட்டு ஷெட் அமைக்க வேண்டும் (செலவு-ரூ.10,000). அதில் மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு கட்ட வேண்டும். (ரூ. 3000) இரும்பிலான எண்ணெய் சட்டி 1 ( ரூ.1,750), கரண்டி, எண்ணெய் வடிகட்டி சட்டி 2, வாழைக்காய் சீவும் கருவி 2, உரித்த வாழைக்காய் அலச வாளி 2, பொரித்த சிப்ஸ் வைக்க பிளாஸ்டிக் கூடை 2 ஆகியவை வேண்டும் (ரூ.2,250.) எடை மெஷின் ரூ.3,500, சீலிங் மெஷின் ரூ.3000 என மொத்த முதலீடு ரூ.23,500.

கிடைக்கும் இடங்கள்: அடுப்பை கட்டிட தொழிலாளர்களே கட்டி கொடுப்பார்கள். அடுப்பு எரிக்க மரத்தூள், கடலை தோல், முந்திரி தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவை எளிதில் கிடைக்கிறது. நேந்திரன் வாழைக்காய்களை விவசாயம் செய்யாதவர்கள், அவற்றை சந்தை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் ஏலங்களில் கொள்முதல் செய்யலாம். இதர பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நாளைக்கு 50 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். அதற்கு 150 கிலோ நேந்திரன் வாழைக்காய் வேண்டும். கிலோ சராசரி விலை ரூ.16 வீதம் ரூ.2,400, தேங்காய் எண்ணெய் 1 டின் 17 கிலோ ரூ.2,380, எரிபொருள் கிலோவுக்கு ரூ.7 வீதம் ரூ.350, நேந்திரன் சிப்ஸ் பொரிக்கும் தொழிலாளர் கூலி 2 பேருக்கு மொத்தம் ரூ.600, பேக்கிங் செலவு ரூ.150 என மொத்தம் ரூ.5,880. (ஒரு கிலோ சிப்ஸ் சராசரி உற்பத்தி செலவு ரூ.118).

வருவாய் (ஒரு நாளைக்கு): நேந்திரன் சிப்ஸ் ஒரு கிலோ குறைந்தபட்சம் கிலோ ரூ.160, அதிகபட்சம் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாய் ரூ.8,000. குறைந்தபட்ச லாபம் ரூ.2,120, அதிகபட்ச வருவாய் ரூ.9,000. அதிகபட்ச லாபம் 3,120.

சந்தை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகளில் இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரிவுகள் தனியாக உள்ளன. அங்கு விற்பனை செய்யலாம். அதோடு வழக்கமான சிப்ஸ்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் விற்கலாம். தரமான நேந்திரன் சிப்ஸ், கடைகளில் சில்லரை விலையாக கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்கின்றனர். உற்பத்தி செய்பவர்களிடம் ரூ.160 முதல் ரூ.180க்கு கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. தரமான சிப்ஸ்களுக்கு வரவேற்பு உள்ளது. சிப்ஸ்கள் 2 மாதம் வரை கெடாது. ருசியும் பலருக்கு பிடிப்பதால் சந்தை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும்.

தயாரிப்பது எப்படி?

நேந்திரன் வாழைக்காய்கள் பச்சையாக இருக்க வேண்டும். சிறு கத்தியால் வாழைக்காயின் மேல் இருந்து கீழாக தோலில் கீற வேண்டும். கீறிய தோலுக்குள் உள்ளே கத்தியை நுழைத்து காய்க்கும், தோலுக்கும் இடையே நெம்ப வேண்டும். பின்னர் கை விரல்களால் நெம்பினால் தோலை முழுதாக உரித்து விடலாம். பின்னர் அதை நல்ல தண்ணீரில் அலசிய பின், காய்ந்த எண்ணெயில் நேரடியாக வட்டமாக சீவி போட வேண்டும். எண்ணெயில் விழும் நேந்திரன் துண்டுகள் பொரியும் போது சத்தம் வரும், அது லேசாக அடங்கும் போது ஒரு குழிக்கரண்டியில் உப்புத் தண்ணீரை அள்ளி எண்ணெயில் ஊற்ற வேண்டும். சட்டியில் சிப்ஸ் மீண்டும் சத்தத்துடன் பொரியும். சத்தம் அடங்கிய பின், சிப்ஸ்களை கரண்டியில் அள்ளி, தூக்கிப்போட்டு பிடித்தால் சலசலவென சத்தம் கேட் கும். அப்படி கேட்டால் நன் றாக வெந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை வடிகட்டி சட்டியில் போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அதை, 200, 250 கிராம் வீதம் எடை போட்டு பேக்கிங் செய்யலாம்.


மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... நேந்திரன் சிப்ஸ் தயாரிப்பில் கலக்கும் தம்பதி !



ஜி.பழனிச்சாமி

நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான்,
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி!

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்!

தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம்கிறதால, 24 வருஷமா வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு பகுதியா பிரிச்சு, சுழற்சி முறையில வெள்ளாமை பண்றேன். அதனால எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருஷத்துக்கு முன்ன நண்பர் ஒருத்தர் மூலமா பஞ்சகவ்யா பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போ, நல்ல பலன் கிடைச்சதால, இயற்கை வழி விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!

அந்த சமயத்துல கோயம்புத்தூர்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருஷத்துல அருமையான மாற்றம் தெரிஞ்சது.

மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில நோய்த் தாக்குதலே இல்லாம... காயெல்லாம் திரட்சியா காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போ... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கைக்கு மாறின பிறகு... பதினஞ்சு டன் மகசூல் கிடைச்சுது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமா கிடைக்கவே... சந்தோஷமா நகர ஆரம்பிச்சுது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!

என் தோட்டத்துல விளையற வாழையில குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனா, அவர் கூடுதலா கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால... உடனடியா, சிப்ஸ் தயாரிப்புல இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!

''ஆரம்பத்துல இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால, தேங்காய் எண்ணெயில இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளா பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம்.

நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில விளைஞ்சதால சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!

''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகள்ல ஆர்டரும் கொடுத்தாங்க.

அடுத்த வாரத்துல நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!

15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தார்ல இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு : கே.ஆர். சுந்தரம்,
செல்போன்: 96009-16166
thanks vikatan
Engr.Sulthan

சுய தொழில்கள்-21 பேரீச்சை வளர்ப்பு!

லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு!



பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம். உரிய முறையில் பேரிச்சையை சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம் ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம் சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது. அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.

நிச்சயம் இதில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில், இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கன்றுகளை பெற்றேன்.

முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28 மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில் இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.

ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம்.

இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால், இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.

முதலீடு

ஒரு பேரீச்சை கன்றின் விலை ரூ.3,500. ஒரு ஏக்கரில் 70 கன்றுகளுக்கான செலவு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம். சொட்டு நீர் பாசன குழாய்களுக்கான செலவு ரூ.30 ஆயிரம். ஆரம்ப கட்ட முதலீடு இவைதான். ஆண்டுக்கொருமுறை இயற்கை உரத்துக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம். தினசரி தண்ணீர் விட்டு, வண்டுகளை விரட்டவும், கனிகளை பறித்து பேக்கிங் செய்யவும் அதிகபட்சம் 2 பேர் போதும். கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் இருப்பதால், பறிக்க நிறைய பேர் தேவையில்லை. இவர்களுக்கு கூலி வருடத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

லாபம்!

பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்க துவங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சீசன். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை தள்ளும். ஒரு குலையில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ கிடைத்தாலும், ஏக்கருக்கு 4200 கிலோ கிடைக்கும். கிலோ 300 ரூபாய்க்கு விற்றால், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலியாட்கள் செலவு, பேக்கிங் செலவு போக வருடத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம். தென்னை மரத்தை விட அதிகமாக 75 வருடங்களுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆண்டுகள் ஆக ஆக பழங்களின் எடையும் அதிகரிக்கும். ஆர்டரின்பேரில் குஜராத்தில் இருந்து நாற்றுகளை வாங்கி கொடுத்து கமிஷன் பெற்றும் வருமானம் ஈட்டலாம்.

சந்தை வாய்ப்பு!

உலக பேரீச்சை உற்பத்தியில் 36 சதவீதம் இந்திய சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீச்சைக்கு சந்தை வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருக்கிறது. பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். ஒருமுறை இதன் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்குவார்கள். கால், அரை, ஒரு கிலோ பாக்கெட்களாக விற்கலாம். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம்.

பயிரிடும் முறை!

ஒரு ஏக்கரில் சுமார் 70 கன்றுகளை நடலாம். ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் குறைந்தது 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப் பம் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையில் ஆரம்பத்தில் தினசரி ஒரு மரத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். படிப்படியாக இதை அதிகரித்து, நன்கு வளர்ந்த மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல், வடிகால் அமைக்க வேண்டும்.

மருந்து கூடாது!

வண்டுகளால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தடுக்க எவ்வித மருந்தும் தெளிக்க கூடாது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் மருந்து தெளிக்க கூடாது. தோட்டத்துக்கு 2 ஆட்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு வண்டுகள்தான் வரும். இதை அப்போதே கண்டுபிடித்து கொன்று விடுவது முக்கியம். இல்லையென்றால் வண்டுகள் தொல்லை அதிகரித்து விடும். இயற்கை உரமே இட வேண்டும். பேரீச்சை பழுத்ததும் வவ்வால், பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க குலையை சுற்றி பாலிதீன் கவர்களால் மூட வேண்டும்.

பர்ரியின் சிறப்புகள்!

பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பர்ரி பேரீச்சை பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3வது நிலை. இது கலால் எனப்படுகிறது. இதை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தம். பெரிய காய்களுடன் கூடிய பேரீச்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரக பேரீச்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

பேரிட்சை வளர்ப்பு விபரங்கள்

இந்த இணைப்பில் உள்ள கட்டுரை பேரிட்சை வளர்ப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்,.
டேட்ஸ்-பேரிச்சை,
விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக “பர்ரி’ என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன.
அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும்.
புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார்.
திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர்.
வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

பட்டையைக் கிளப்பும் ‘பர்ரி’ பேரீச்சை…
ஏக்கருக்கு ரூ.10 லட்சம்…ஐந்து ஆண்டுகளில் வகையான வருமானம் ..!
பாசன வசதியிருந்தால்தான்…பழுதில்லாத பலன் !
‘தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் பேரீட்சைப் பயிர் வளருமா..?’ என்ற சந்தேகம் பல ஆண்டுகளாக விவசாயிகளிடம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக, நவம்பர் 25, 2007 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், பேரீட்சை சாகுபடியில் பெருத்த லாபமா..? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களையும் அதில் பதிவு செய்திருந்தோம்.
குலைகுலையாய் காய்த்து குலுங்கும் பேரீட்சை…
நிறைவாக… ‘இரண்டு, மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் பரவலாக பேரீட்சை சாகுபடிச் செய்யத் தொடங்கியுள்ளனர். ஐந்து ஆண்டுகள் போனால்தான் நிலைமையை கணிக்க முடியும். அதுவரை காத்திருப்பதுதான் உத்தமம்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், நம்மைத் தொடர்பு கொண்ட திண்டுக்கல், முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன், ”என்னுடைய தோட்டத்தில் நடவு செய்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மரங்களிலும் பேரீட்சை காய்த்து குலுங்குகிறது” என்ற தகவலைச் சொன்னார்.
‘எப்படி இருக்கிறது அவருடைய பேரீட்சை விவசாயம்?’ என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். காய்கள் குலை, குலையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன, அங்கிருந்த பேரீட்சை மரங்களில். அதையெல்லாம் சுட்டிக்காட்டியபடியே ஆரம்பித்த அன்பழகன், “அமெரிக்காவுல கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டிருந்த ஆள் நான். ‘சொந்த ஊருக்கு போய் விவசாயம் செய்யணும்’கிற எண்ணம் உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. வேலை விஷயமா அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போவேன். அவங்க செய்துகிட்டிருக்கற பேரீட்சை விவசாயத்தைப் பார்க்கும்போது, இதை நம்ம ஊருல செய்தா எப்படி இருக்கும்?னு யோசிப்பேன். கடைசியில அதை நிறைவேத்தறதுக்காகவே, வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கு வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த அன்பழகன், பேரீட்சைத் தோட்டத்தை உருவாக்கிய கதைக்குள் புகுந்தார்.
நாத்து 3,500!
”நம்ம ஊரு சூழ்நிலைக்கு ஏற்ற ரகம் என்ன..? அதோட நாற்று எங்க கிடைக்கும்னு பல இடங்கள்ல அலைஞ்சி, திரிஞ்சதுல… குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பேரீட்சை விஞ்ஞானி, நவீன்பாய் சௌதாகர் அறிமுகம் கிடைச்சுது. அவரோட ஆலோசனைப்படி ‘பர்ரி’ ரக பேரீட்சையை, குஜராத்துல இருந்து வாங்கிட்டு வந்து, 12 ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். இது திசு வளர்ப்பு நாத்துங்கிறதால, ஒரு நாத்தோட விலை 3,500 ரூபாய். மொத்தம் 700 நாத்துகளை, வாங்கிட்டு வந்து நடவு செஞ்சி மூணு வருஷம் ஆச்சு. 12 ஏக்கர்ல 616 மரம் இருக்கு. அதுல 500 மரம் பாளை போட்டு, இந்த வருஷம் காய்ச்சிருக்கு.
இந்த மூணு வருஷத்துல இதுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன். ஒவ்வொரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கவும் லட்சக்கணக்குல பணத்தை செலவு செஞ்சிருக்கேன். ஒரு விவசாயியா நான் கஷ்டப்பட்டு, காசு செலவு செஞ்சு தெரிஞ்சுகிட்ட எல்லா விஷயங்களையும், மத்த விவசாயிகளுக்கு இலவசமாவே சொல்லித் தர தயாரா இருக்கேன்” என்று ஆர்வத்தோடு சொன்னார்.
பதப்படுத்த வேண்டாம்..! அப்படியே சாப்பிடலாம்…!
அருகில் நின்றிருந்த தோட்ட மேலாளர் சரவணன், “வழக்கமா, மத்த பழங்கள் மாதிரி பேரீட்சம் பழத்தை மரத்திலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிட முடியாது. அதை உலர வைச்சு, பதப்படுத்தின பிறகுதான் சாப்பிட முடியும். ஆனா, இந்த பர்ரி வகை பேரீட்சையை மரத்திலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிடலாம். மத்த விளைபொருள்கள் மாதிரியே அறுவடை செஞ்சி அப்படியே விக்கலாம்” என்று சொல்லிவிட்டு, சாகுபடி முறைகளை ஒவ்வொன்றாக அடுக்கினார்… பள்ளிக்கூட பாடமாக!
நிச்சயம் தேவை நீர்…!
தமிழகத்தில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது பர்ரி ரக பேரீட்சை. மணல் கலந்த, ஆறடி ஆழத்துக்கு மண்கண்டம் உள்ள அனைத்து மண்ணிலும் இது நன்கு வளரும். வடிகால் வசதி மிக அவசியம். ‘பேரீட்சை, பாலைவனத்தில் வளரும் மரம்தானே… இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அது தவறு. பாலைவனத்திலும் தண்ணீர் தேங்கி இருக்கும் சோலைவனங்கள் இருக்கின்றன. அதாவது, குட்டை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். இவற்றின் கரைகளில்தான் பேரீட்சை விளையும். உப்பு தண்ணீரில்கூட நன்றாக வளரும். ஆனால், தண்ணீர் வசதி இல்லாத, மானாவாரி நிலங்களில் பேரீட்சையைக் கட்டாயம் பயிரிடக்கூடாது.
ஏக்கருக்கு 50 மரம்…!
இந்தப் பயிருக்கு அதிக நிழல் இருக்கக்கூடாது. இதன் மட்டைகள் கீழ் நோக்கி தொங்காமல் நேராக இருக்கும். அதனால் 27 அடி அல்லது 30 அடி இடைவெளியில்தான் நாற்றுகளை நடவேண்டும். இப்படி நடும்போது ஏக்கருக்கு அதிகபட்சம் 50 நாற்றுகள் தேவைப்படும். பர்ரி ரகத்தில் திசு வளர்ப்பு நாற்றுகளும் இருக்கின்றன. விதை மூலமாக உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளும் இருக்கின்றன. விதை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மரத்தில் கிடைக்கும் பழம், கொஞ்சம் துவர்ப்புத் தன்மையோடு இருப்பதால், அத்தகையப் பழங்களுக்கு குறைவான விலைதான் கிடைக்கும். அதோடு ஆண் மரம், பெண் மரங்களை நாற்றுப் பருவத்தில் கண்டுபிடிப்பதும் கஷ்டம். ஆனால், திசு வளர்ப்பு நாற்றுகளில் ஆண், பெண் நாற்று என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக தெரிந்துவிடும். அத்தோடு, இப்படி உருவாக்கப்படும் மரங்களில் கிடைக்கும் பழங்கள் சுவையாக இருப்பதால், அதிக விலையும் கிடைக்கும். பொதுவாக 100 பெண் மரங்களுக்கு, ஐந்து ஆண் மரங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ள வேண்டும்.
நாளன்றுக்கு 300 லிட்டர் நீர்!
நாற்றைத் தேர்வு செய்யும்போது, குறைந்தபட்சம் 5 இலைகள் உள்ள செழிப்பான நாற்றுகளாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். தென்னை போல மூன்றடிக்கு மூன்றடி குழி எடுத்து, குழிக்கு 10 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் போட்டு, நாற்றை நட்டு மேல்மண்ணைக் கொண்டு குழியை மூடவேண்டும். நடவு செய்த பின் இரண்டு மாதம் வரை நாற்றில் நேரடியாக வெயில் படாதவாறு, நிழல் வலை அல்லது பனை மட்டையை வைத்து நாற்றைச் சுற்றிக் கட்டிவிட வேண்டும்.
முதல் ஒரு வருடம் வரை தினமும் ஒரு செடிக்கு 25 லிட்டர் தண்ணீரும், 2-ம் வருடம் 50 லிட்டர் தண்ணீரும், 3-ம் வருடம் 100 லிட்டர் தண்ணீரும் கொடுக்க வேண்டும். 10 வயதுக்கு பிறகு, ஒரு மரத்துக்கு தினமும் 300 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். பேரீட்சையை பொறுத்தவரை சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது.
40 டிகிரியிலும் நன்றாக வளரும்…!
தண்ணீர் கொடுக்காவிட்டாலும் இந்த மரம் உயிரோடு இருக்கும். ஆனால், மகசூல் கிடைக்காது. இந்த ரக மரங்கள், அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் வரைக்கும் தாங்கும் திறன் உடையவை. குறிப்பாக, 34 முதல் 40 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடங்களில் அருமையாக வளரும். நடவு செய்த இரண்டரை ஆண்டுகளில் அல்லது மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில் பூ எடுக்கும். பேரீட்சையில் ஆண் மரம் ஜனவரி மாதம் தொடங்கி, பிப்ரவரி வரை பூக்கும். பெண் மரம் பிப்ரவரி இறுதியிலிருந்து ஏப்ரல் வரை பூக்கும். இந்தக் கால நிலை மாறுபாட்டால் இயற்கையாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். இது மகசூலை பாதிக்கும். அதனால், ஆண்பூக்கள் பூக்கும்போது, பாளை வெடித்தவுடன் பூவை வெட்டி, அதிலுள்ள மஞ்சள் நிற மகரந்தத் தூளை உதிர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது நமது அறை வெப்பநிலையில் நான்கு மாதம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ‘ஃப்ரீசரில்’ வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
பெண் மரங்களில் பாளை வெடித்ததிலிருந்து இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த நேரம். சேமித்து வைத்திருக்கும் ஆண் மகரந்தத் தூளை இந்த நேரத்தில் பெண் மரங்களின் பாளையில் சேர்க்க வேண்டும். அதாவது, ஒரு மடங்கு ஆண் மகரந்தத் தூள், 20 மடங்கு மைதா மாவு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். இதை நீளமான குழாய் பொருத்தப்பட்ட டப்பாவில் கொட்டி, பெண் பூவில் தெளித்துவிட வேண்டும் (பார்க்க, படம்). இப்படி மகரந்தச் சேர்க்கை செய்தால்தான் அனைத்து பூவும் பிஞ்சாக மாறும். இதன் குலை தென்னை மாதிரி கீழ் நோக்கி வராமல், மேல் நோக்கி போகும். அதனால், பூ எடுத்த ஒரு மாதத்தில் குலையை மட்டையோடு சேர்த்து வளைத்துக் கட்டி விடவேண்டும்.
மரத்துக்கு 100 கிலோ!
குலையின் நுனிப்பகுதியில் உள்ள கிளைகள் மிகவும் மெல்லியதாக இருக்கும். காய் பிடித்தவுடன் பாரம் தாங்காமல் அவை ஒடிந்து விழுந்து விடும். அதனால் முன்னெச்சரிக்கையாக நுனியில் 6 செ.மீ. தூரத்துக்கு வெட்டி விடவேண்டும். அதேபோல குலையில் உள்ள கிளைகள் அதிக நெருக்கத்துடன் இல்லாமல், பரவலாக இருப்பது போல் கலைத்து விட்டால்… காய்கள் பெருத்து, அதிக மகசூல் கிடைக்கும். போதுமான இடைவெளி இருந்தால் ஒவ்வொரு பழமும் 10 முதல் 15 கிராம் வரை எடை இருக்கும். சிறிய மரங்களில் ஒரு மரத்துக்கு அதிகபட்சமாக 10 பாளைகள் கிடைக்கும். காய்கள் ஓரளவு திரட்சியாக வந்தவுடன், பிளாஸ்டிக் பையைக் கொண்டு குலையை மூடி பாதுகாக்க வேண்டும். குலையிலுள்ள அனைத்து காய்களும் மஞ்சள் நிறத்துக்கு மாறி, ஓரிரு காய்கள் கனிந்த நிலைதான் அறுவடை நேரத்துக்கான அறிகுறி. பெரிய மரங்களில் அதிகபட்சம் 30 பாளைகள் வரை வெடிக்கும்.
பூ எடுத்ததிலிருந்து 5 முதல் 6 மாதத்தில் குலையை அறுவடை செய்யலாம். மூன்றாவது வருடத்தில் ஒரு மரத்தில் 25 முதல் 30 கிலோ மகசூல் கிடைக்கும். நான்காவது வருடத்தில் 50 முதல் 60 கிலோவும், ஐந்தாவது வருடத்தில் 80 முதல் 100 கிலோ வரையும் கிடைக்கும். அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு மரத்தின் வயது குறைந்தபட்சம் 65. அதன் 45-ம் வயதில் மகசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
முதல் வருடம் ஒவ்வொரு செடிக்கும் 50 கிராம் நைட்ரஜன், 50 கிராம் பாஸ்பரஸ், 50 கிராம் பொட்டாசியம் சத்துக்களை ஆறு மாதத்துக்கு ஒருமுறைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த அளவில் 100 கிராமை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். 10-ம் வருடம் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கிலோ அளவில் மேலே உள்ள சத்துக்களைக் கொடுக்க வேண்டும். அதேபோல முதல் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடிக்கு 5 கிலோ தொழுவுரமும், 3-ம் வருடம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செடிக்கு 10 கிலோ தொழுவுரமும் கொடுக்க வேண்டும். அறுவடை முடிந்த பிறகும் ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும்.
மரத்திலிருந்து பச்சை மட்டைகளை வெட்டக்கூடாது. கடைசி மட்டை நுனிப்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா காய்ந்து கொண்டே வரும். அப்படி காய்ந்த மட்டைகளை, மரத்தை ஒட்டி வெட்டாமல், ஒரு அடி தள்ளி வெட்டி எடுக்க வேண்டும். மரத்தில் கூர்மையான ஆணியைப் போன்ற முட்கள் அதிகமா இருக்கும். இதனால் பழங்கள் அதிகம் திருடு போகாது. பர்ரி ரகத்தில் அதன் ஆயுளில் 18-க்கும் மேற்பட்ட பக்கக் கன்றுகள் கிடைக்கும். இந்தக் கன்றுகள் முளைத்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனியே பிரித்து நடவு செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்!
தென்னைக்கு வரும் அனைத்து நோய்களும் பேரீட்சையையும் தாக்கும். காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன்வண்டு தாக்குதல் அதிகம் இருக்கும். காண்டாமிருக வண்டு தாக்கிய மரத்தில் குருத்து வெளியே தள்ளி இருக்கும். அந்த இடத்தில் கம்பியால் குத்தி வண்டை வெளியே எடுத்துப் போடவேண்டும். பின் உள்ளே மருந்தை வைத்து ஓட்டையை சிமெண்ட் வைத்து மூடவேண்டும்.
சிகப்பு கூன்வண்டு தாக்கிய மரத்தின் அருகில் போனாலே ஒருவித வாசனை வரும். அதை வைத்தே வண்டு உள்ளே இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். மரத்தின் அடியில் மட்டை வெளியே தள்ளி இருக்கும். அந்த மட்டையைக் கையால் இழுத்தாலே கையோடு வந்து விடும். உள்ளே போன வண்டு நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்து விடும். இதை வளர விட்டால் மரத்தைக் காப்பாற்ற முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டையை எடுத்துவிட்டு, வண்டு, புழு எல்லாவற்றையும் முடிந்த அளவு வெளியே எடுத்துவிட்டு ஊசி மூலம் மருந்தை உள்ளே செலுத்தலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை வேரில் மருந்தை செலுத்துவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம். இதையெல்லாம்விட மரத்தைச் சுற்றி வேப்பம் பிண்ணாக்கைப் போட்டு வைத்தும், ஆங்காங்கே கவர்ச்சிப் பொறிகளைத் தொங்க விட்டும் சிவப்பு கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
சாகுபடி பாடத்தை சரவணன் நடத்தி முடிக்க, மறுபடியும் நம்மிடம் பேசிய அன்பழகன், “பராமரிப்பு மட்டும் சரியா இருந்தா… ஒரு ஏக்கர்ல, அஞ்சாம் வருஷத்துல இருந்து நல்ல வருவாய் கிடைக்கும். எட்டு முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்கும் வருஷம்தோறும் வருமானம் பார்க்கலாம்.
பர்ரி பேரீட்சையைப் பொறுத்தவரை ஆரம்ப கட்ட செலவு ஏக்கருக்கு 3 முதல் 5 லட்சம் வரை ஆகும். ஆனா, மூணாவது வருஷத்துல முதல் அறுவடையிலயே இந்தப் பணத்தை எடுத்துடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செஞ்சிட்டு இருந்தாலே போதும். வேறெந்த வெள்ளாமையிலயும் இந்த வருமானத்தைப் பாக்க முடியாது. இந்த ரக நாத்து குஜராத்ல இருக்கற தனியார் ஆய்வுக் கூடங்கள்ல கிடைக்குது” என்றவர்,
”பேரீட்சையைப் பொறுத்தவரைக்கும் பெருசா ரசாயன உரமெல்லாம் தேவையில்ல. இருந்தாலும், முதல் தடவையா இதைப் பயிர் செஞ்சதால 75% இயற்கை, 25% செயற்கைனு கலந்துதான் செஞ்சிருக்கேன். இன்னும் ரெண்டு வருஷத்துல இதை முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையா மாத்திடுவேன்” என்று இயற்கை ஆராதனையோடு முடித்தார்.

கொட்டிக் கிடக்கும் விற்பனை வாய்ப்பு….!
உலக பேரீட்சை உற்பத்தியில் 36% இந்தியச் சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவிகித அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீட்சைக்கான சந்தை இங்கே பிரகாசமாக இருக்கிறது. பிஞ்சு முதல் சாப்பிடும் பழம் வரை ஆறு நிலைகளாக பேரீட்சை பிரிக்கப்படுகிறது. 5 வாரம் உள்ள பிஞ்சு… ஹபாபோக்; 6 முதல் 18 வார வயதுடைய
பச்சைக்காய்… கிம்ரி;
19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம்… கலால்; 24 முதல் 27 வாரத்தில் கனிந்த பழுப்பு நிற பழம்… ரூட்டாப்; 28-ம் வாரத்தில்… தாமர்; அதற்கு மேல் பதப்படுத்தப்பட்டு சந்தையில் கிடைப்பது சுரா… இப்படி ஆறு நிலைகளாகப் பிரித்து அழைக்கப்படுகிறது.
இதில் நாம் தற்போது பெருமளவில் பயன்படுத்துவது ரூட்டாப் நிலையில் உள்ள பழங்களைத்தான். ஆனால், மூன்றாவது நிலையான கலால் நிலையிலே மரத்திலிருந்து பறித்தவுடன் சாப்பிடலாம் என்பதுதான் பர்ரி ரகத்திலுள்ள தனிச் சிறப்பு. பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தமாம். பெரிய காய்களுடன் கூடிய பேரீட்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரகப் பேரீட்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இதை அறுவடை செய்து 10 நாள் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

பேரீட்சை நாற்று எங்கே கிடைக்கும்?
குஜராத் மாநிலத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேரீட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியச் சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய ரக பேரீட்சை ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான பேரீட்சைக் கன்றுகள் இங்கு கிடைக்கும்.
தொடர்புக்கு:
Date palm Research Station of Gujarat Agricultural University, Port road, Mundra-370422, Kachchh(Dist), Gujarat, Phone:02838-22185

இணையத்திலிருந்து
Engr.Sulthan

கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்

இதில் ஏராளமான் ஒமேகா-3- கொழுப்பு அமிலம் (Omega-3 fatty acids) உள்ளதால், இது மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது. இதனால் நினைவுத் திறன் அதிகரிக்கும். நினைவு மறதி நோய் (Dementia and Alzheimer 's disease) பாதிக்காது. இப்படி கடல் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு பலவகை பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறதாம். இதுலுள்ள DHA (Docosahexaenoic acid) என்ற வேதிப்பொருள் அவர்களின் அதிகமான் செயல்திறனையும் (hyperactivity), நடத்தை கோளாறுகளையும் (behavioural problems) சரிசெய்வதாகவும், மேலும் அவர்களின் கல்வி தொடர்பான திறமைகளை அதிகரிப்பதாகவும், கவன ஈர்ப்புத் திறன் கூடுவதாகவும் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கடல் உணவுப்பொருள்கள் இதயத்தின் நலத்துக்கும், அதனைப் பராமரிக்கவும் மிகவும் உதவுவதாக பல ஆதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவது பாதியாக குறைக்கப்படுகிறதாம். பாரம்பரியமாக மீனை தொடர்ந்து உண்ணும் இந்நூட் இன மக்கள் மற்றும் ஜப்பானியர்களுக்கு இதயப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு போன்றவை மிகக் குறைவாகவே வருகிறதாம். மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் மீன் சாப்பிடாதவர்களிடையே கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தியதில்தான் இந்த தகவல்கள் கிடைத்தன. மேலும் அமெரிக்க வாழ் செவிலிகளிடம் மீன் மற்றும் கடல் உணவு உண்ணுவது தொடர்பாக தகவல் சேகரித்ததில் அவர்களுக்கு இதயப் பிரச்சினை 50 % மும், சர்க்கரை நோயின் வாய்ப்பு 60 % குறைந்தது தெரிய வந்தது.
மாதம் மூன்று முறை மீன்/கடல் உணவு உண்டால் உங்களின் இதயத்திற்கு, சிக்கல் வராதாம். மாரடைப்பு, ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாமாம். மீன் இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டியாகி அடைப்பதை தவிர்க்கிறது. அதிக கொழுப்பு உள்ள உணவு மீனின் எண்ணெயிலுள்ள EPA , த(Eicosapentaenoic acid (EPA) and Docosahexaenoic acid (DHA) & இயற்கையான ஒமேகா-3 - கொழுப்பு அமிலம் போன்றவை தற்காப்பு சக்தியை அதிகரிக்கிறது.இவர்களுக்கு DHA என்பது பொதுவாக கருவில் வளரும் குழந்தையின் துவக்க காலத்தில் மூளை மற்றும் கண்ணின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது மூளை வளரும்போது தகவல்களுக்கு பதிலிறுக்க மூளையின் செல்களைத் தூண்டுகிறது. கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை பெற்ற தாய்க்கும் மிகவும் நெருங்கிய நன்மை செய்யும் நண்பன்.
தாய்ப்பாலில் DHA மற்றும் அரக்டானிக் அமிலம் (arachidonic acid) இருப்பதால், தாயப்பால் குடித்த குழந்தைகளின் கண்பார்வை நன்றாகவும், மூளைத்திறன் அதிகமாகவும் இருக்கிறது. DHA மகப்பேறு காலத்தில் உண்டாகும் மனவழுத்தத்தைக் குறைக்கிறது. பொதுவாக கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
சில நாடுகளில் இந்த DHA மற்றும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் குறைவால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு நிகரான வெளி உணவையோ/ மாற்றுப் பொருள்களையோ கொடுப்பது சிரமம். முதுமைக் காலத்தில் நமக்கு ஏற்படும் நினைவு மறதி நோய் மற்றும் மூளையின் செயல்பாட்டுத் திறன் (Dementia and Alzheimer's disease) பிரச்சினைகள் வரும் அளவை கடல் மீன்/உணவு பெருமளவு குறைக்கிறது. உடல் பருமன் வராமல் தடுக்கிறது.
கண்ணின் பல பிரச்சினைகளுக்கு கடல் மீன் உணவு நல்லது. புற்று நோய் வரும் அபாயத்தை தவிர்க்கிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோயும் இதனால் குறைகிறது. இரத்தக் குழாயினுள் இரத்தம் உறைதலை, இரத்தக் கட்டியைத் தவிர்க்கிறது. மூட்டு வலி மற்றும் கீல்வாத வலியைக் குறைக்கிறது. நுரையீரலைக் கண்காணித்து, பாதுகாத்து, சுவாசம் தொடர்பான சங்கடங்கள் வராமல் கவனித்துக் கொள்கிறது.
ஒமேகா-3 -கொழுப்புகள் (Omega-3 fats)நமது தோலை பளபளவென மினுக்கும் அழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது. முதுமைக் காலத்தில் கொலாஜென் (collagen) சிதைவால் ஏற்படும் தோல் சுருக்கத்தையும் குறைக்கிறதாம்.பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் சீரணப் பிரச்சினைகளைத் தவிர்க்கிறது. உடல் வளர்ச்சிக்கு பிரமாதாய் உதவுகிறது.
இத்தனை பயன்களும் குழம்பு மீனால்தான். வருக்கும் மீனில் கொஞ்சம் குறையும். வறுத்த மீனில் கொலஸ்டிரால் வரும்.
100 கிராம் கடல் மீனில் உள்ள சத்துக்கள் :
புரதம்.......................15 -20 %
ஒமேகா-3- கொழுப்பு அமிலம்
EPA -Eicosapentaenoic acid
DHA -Docosahexaenoic acid
வைட்டமின் A .......20௦-60மி.கி
வைட்டமின் D .......300 கி.கி
வைட்டமின் B
தையாமின்.(B 1.)........4 மி.கி
வைட்டமின்.௨..........3 மி.கி
நியாசின்....................40 மி.கி
பான்டோதனிக் அமிலம் ....10 மி.கி
B 6 ................................4.5 மி.கி
சோடியம்...................௭௨ மி.கி
பொட்டாசியம்.........278 மி.கி
கால்சியம்.................79மி.கி
மக்னீசியம்...............38 மி.கி
பாஸ்பரஸ்................190 மி.கி
இரும்பு
தாமிரம்
அயோடின்
செலினியம்
துத்த நாகம்

40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்

40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?
உடல் எடை அதிகரித்தல்
மன அழுத்தம்
சர்க்கரை நோய்
அதிக அளவில் கொழுப்பு சேருதல்
உயர் ரத்த அழுத்தம்
இதய நோய்
எலும்பு மூட்டு நோய்கள்
புற்று நோய்
வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :
மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்பு களில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பது ஏன்?
நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.
உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.
இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?
ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.
சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.
சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்?
பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய் வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.
உடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது. அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்?
சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.
உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்?
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை, பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி. அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான் அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்?
இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது.
முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?
40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.
வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும் சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளே என்பது உலகம் அறிந்த உண்மை.
(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)