லாபம் கொழிக்கும் கூடை பொம்மை தயாரிப்பு!
சந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெறுபவர் மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும். விலை குறைந்த, அதே நேரம் பாரம்பரியம், நவீனம் கலந்து சிறப்பாக வடிவமைக்கப்படும் கூடை பொம்மைகள், பரிசுப்பொருளாக வழங்க நல்ல தேர்வு. கூடை பொம்மைகள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மா. அவர் கூறியதாவது: 15 ஆண்டுகளுக்கு முன்பு கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. பரிசு பொருள் விற்கப்படும் பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்றேன். படிப்படியாக பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்தேன். திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்கானிக் காட்டன் பொம்மைகள் செய்து தர ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் எடுத்த நிறுவனங்கள் என்னிடம் பொம்மைகள் தயாரித்து வாங்கி ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் தொழில் பெருகியது. பொதுவாக பொம்மைகள் செய்வது கை தையல் மூலம் தான். உற்பத்தி அதிகம் செய்ய வேண்டி வந்ததால் பவர் தையல் மெஷின் மூலம் பெரிய பொம்மைகளை தைத்தும், மெஷினில் தைக்க முடியாத சிறிய பொம்மைகளை மட்டும் கை தையல் மூலமும் தயாரித்து வருகிறேன். 4 பேர் பணிபுரிகின்றனர். மாதம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மதிப்பிலான பொம்மைகள் உற்பத்தி செய்கிறேன். 25 சதவீத லாபம் உள்ளது.
ஒரே மாதிரியான பொம்மை தயாரிப்பதை விடுத்து புதுமையான வடிவத்தில் தயாரிக்க வேண்டும். பொம்மையை கூடையில் வைத்து கொடுத்தால் புதுமையாக இருக்கும். அதையும் பொக்கே போல் கொடுத்தால் நவீனமாக இருக்கும்.கைப்பிடி உள்ள கூடைக்குள் தலையை மட்டும் காட்டியவாறு இருக்கும் நாய்க்குட்டி பொம்மைகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. கூடை பொம்மைகளை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதுமைகள் புகுத்தலாம். ஒன்றில் இருந்து இன்னொன்றை உருவாக்கலாம். பரிசு பொருட்களை பொறுத்தவரை புதிதாக இருந்தால் வரவேற்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு பத்மா கூறினார்.
முதலீடு:வீட்டின் ஒரு அறை போதுமானது. சார்ட் பேப்பர், வெல்வெட் துணி வெட்ட ஒரு டேபிள் (ரூ.4 ஆயிரம்), மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (5 ஆயிரம்), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப் ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650. உற்பத்தி செலவு: ஃபர் கிளாத், அதன் திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.300 முதல் ரூ.350 வரை. செயற்கை பஞ்சு (பைபர் காட்டன்) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் ஃபர் கிளாத், ஒரு கிலோ செயற்கை பஞ்சு மூலம் 100 பொம்மைகள் செய்யலாம்.), கூடை விலை அதன் அளவுக்கேற்ப ஒன்று ரூ.5 முதல் ரூ.10 வரை. பொக்கே பேக்கிங் ஷீட் (சலபன் பேப்பர்) ஒன்று ரூ.3, ஒரு பொம்மைக்கான மூக்கு, கண் பட்டன்கள் ரூ.2. ரிப்பன் ரோல் ரூ.1. சிறிய கூடை பொம்மை செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய கூடை மற்றும் பொம்மையின் அளவுக்கேற்ப ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம். ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800.மாதம் 25 நாளில் ஆயிரம் சிறிய கூடை பொம்மை அல்லது 500 பெரிய கூடை பொம்மை உற்பத்திக்கு ரூ.20 ஆயிரம் தேவை.
வருவாய்: சிறிய கூடை பொம்மை ரூ.30, பெரியது ரூ.60க்கு விற்கலாம். மாத வருவாய் ரூ.30 ஆயிரம். செலவு ரூ.20 ஆயிரம். லாபம் ரூ.10 ஆயிரம். லாபம் உழைப்பு கூலியாக கிடைக்கிறது. சந்தை வாய்ப்பு: தற்போது சிறிய ஊர்களில் கூட பரிசு பொருட்கள் கடைகள் வந்து விட்டன. தயாரித்த பொம்மைகளை பேன்சி ஸ்டோர், கிப்ட் கடைகள் ஆகியவற்றுக்கு விற்கலாம். சிறிய கூடை பொம்மையை ரூ.30க்கு வாங்கும் கடைக்காரர்கள் ரூ.50க்கு குறையாமல் விற்கிறார்கள். நேரடியாக விற்றும் லாபம் சம்பாதிக்கலாம். கூடை பொம்மை பொக்கே பார்க்க ஆடம்பரமாக இருக்கும். ஆனால் விலை குறைவு என்பதால் நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இதனால் சந்தை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. கூடை பொம்மை மட்டுமல்லாமல் பல்வேறு ரகங்களில் பொம்மைகள் தயாரித்து விற்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பொம்மை தயாரிக்க பயிற்சி : கோவை வேளாண் பல்கலைக்கழகம், கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெண்களுக்கு மட்டும் பொம்மை தயாரிப்பு பயிற்சி கற்பிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பொம்மை தயாரிக்க பயிற்சி மையங்கள் பல உள்ளன.
தயாரிப்பது எப்படி? கூடை பொம்மை களை மார்பு வரை தயாரித்தால் போதுமானது. நாய், பூனை, கரடி, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம்.பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும். அது கை, உடல், முகம் ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும். வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள். தைக்காமல் விட்ட பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும். பொம்மைக்கு கண், மூக்கு பட்டன்களை பொருத்த வேண்டும். சில பொம்மைகளுக்கு கூடுதலாக காது, வாய் பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல் திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை தடவி ஒட்டி மூட வேண்டும். இப்போது பொம்மை தயார். பின்னர், ரெடிமேடாக வாங்கிய பிரம்பு கூடையின் கைப்பிடி, மேல், கீழ் புற விளிம்பு ஆகியவற்றில் சன்னமான கலர் ரிப்பன்களை சுற்ற வேண்டும். கூடை மேல் ஏற்கனவே தயாரான பொம்மைகளை வைத்தால் கூடை பொம்மை தயார். கிப்ட் பேக்கிங் ஷீட்டில் கூடை பொம்மையை வைத்து பூக்களை கொண்டு பொக்கே செய்வது போல் பேக்கிங் செய்ய வேண்டும். செலோ டேப் கொண்டு ஒட்டி, பேக்கிங் ஷீட்டில் ரிப்பன் கட்டினால் கூடை பொம்மை பொக்கே தயாராகி விடும்.
Engr.Sulthan
No comments:
Post a Comment