Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 3, 2013

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்



லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்:
'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும்
லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.
'ரமளானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத் (8103) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.' (அறிவிப்பவர்: அபூஸலமா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி).
மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி (ஸல்) அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும். அதை விட்டுவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூ று தடவை ஓதி தொழும் தொழுகை, என நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத வணக்கவழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
'அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!)என்று கற்றுக் கொடுத்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)
பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
'நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்)
'அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும்விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் (இஃதிகாஃப்) பள்ளியிலேயே தங்கி இறை நினைவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இவ்வாறு இருக்க, நம் மக்களில் பலர் அடையாளம் தெரியாத நபர் யாரோ சொன்ன 'அதிமேதாவித்தனமான' விளக்கத்தை வைத்துக்கொண்டு, ரமளானின் 27ஆம் இரவில் மட்டும் ஏனோதானோ என்று பள்ளிக்கு வருவதும், மற்றுமுள்ள நாட்களிலும் இறை மன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, வீட்டில் குறட்டை விடுவதும் சரியானதா?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் (பள்ளியில் இறை நினைவுடன் தங்கியிருத்தல்) இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அவசியமான காரியங்களுக்குக் கூட பள்ளியைவிட்டு வெளியேறக்கூடாது என்று காட்டப்படுவதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைநினைவுடன் பள்ளியில் தங்கியிருந்த முறையை பார்ப்போம்.
'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹுதொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடம் சென்றுவிடுவார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)
'நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் பித்ரு) பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃபை) விட்டு வெளியே வரமாட்டார்கள்'. (அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, ஹாகிம், அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.
'நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
'நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள்.' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
'நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்கு அவர்களும் எழுந்தார்கள்.' (அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இஃதிகாஃப் இருப்பவர் மிக முக்கியமான அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்டவையே என்பதை அறியலாம்.
பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்படாதவை.
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
'நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 187வது வசனத்தின் ஒரு பகுதி)
'இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியை தீண்டாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டேத் தவிர வெளியில் செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
மேற்குறிப்பிட்ட இறைமறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையில் இருந்தும் பள்ளியில் தங்கி இருக்கும்போது அனுமதிக்கப்படாதவை எவை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
லைலத்துல் கத்ர் இரவும், முஸ்லிம்களில் பெரும்பாலோரின் நடைமுறையும்
தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது போன்றவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தராத, நாமே உருவாக்கிக் கொண்ட நூதனங்கள் (பித்அத்) ஆகும். இதுபோன்ற நூதனங்களை தவிர்ப்போம்.
Engr.Sulthan

No comments:

Post a Comment