குன்னூர்: குன்னூரில் பூத்துள்ள அபூர்வ வகை குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. நீலகிரி குறிஞ்சி மலர்கள் 30 முதல் 60செ.மீ., உயரம் வரை வளர்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் முதல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. 17 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலர்களும் உள்ளன. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பூக்கும் ஊதா நிறம் மற்றும் வெள்ளை கலந்து இருக்கும் இந்த பூக்கள், 10 நாட்களில் வாடிவிடும்.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், 'ஸ்டெபிலான்தஸ் குந்தியானஸ்' வகை குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி தாவரவியல் பேராசிரியை ரோஸ்டி லீமா கூறுகையில், ''மழையின் தாக்கம் அதிகரித்து நைட்ரஜன் அதிகரிக்கும் போது, இந்த பூக்கள் அதிகளவில் பூக்கின்றன. குறிஞ்சி மலர் இருந்தால் தேனீக்கள், அங்கேயே கூடு கட்டி சேமிக்குமே தவிர, வேறு இடங்களுக்கு இடம்பெயராது. இந்த தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. உலகில் 300 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில், 'டீ ஆன்டர்ஸ்', 'பார்படஸ் மீஸ்', 'நீலகிரி ஸ்டெபிலான்தஸ்' உட்பட 40 வகைகள் உள்ளன.,' என்றார்.
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், ''குறிஞ்சி மலர்கள் பூக்கும் இடங்களில் வனவளம் அதிகரிக்கும். பருவ நிலை மாற்றம் காட்டுத்தீ, ஆக்கிரமிப்பு காரணமாக, தொடர்ந்து மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதால், நீலக்குறிஞ்சி அழிவை எதிர்நோக்கியுள்ளது. குறிஞ்சி பூக்கும் இடங்களில், அறிவிப்பு பலகை வைத்து, அங்கு ஆக்கிரமிப்புகள் செய்ய அனுமதிக்கக்கூடாது' என்றார்.
No comments:
Post a Comment