கிரானைட் கனிம வளக் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, ஒரு மாவட்ட ஆட்சியரின் பொறுப்பை மாநிலத்திற்கும் இந்த நாட்டிற்கும் உணர்த்தியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.
அரசியல் கட்சிகளின் `பவர்`, கனிமக் கொள்ளை தாதாக்களின் மிரட்டல் என எதற்கும் அஞ்சாமல் கனிம வளக் கொள்ளை சாம்ராஜ்ஜியத்தை மக்களின் முன் நிறுத்தியதால், அவரை கொண்டாடும் ஒரு கூட்டம் தானாகவே பெருகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாய குடும்பத்தில் 03.07.1962 -ல் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பையும் புதுக்கோட்டையில் பட்டப்படிப்பையும் முடித்த அவர், சென்னையின் லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலேயே சட்டப்படிப்பு படித்தார்.
பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சிப் பெற்ற அவர், தர்மபுரியில் பயிற்சி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, நீலகிரிமாவட்டம்,கூடலூரில் கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சிஉணவுபொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 23 ஆண்டுகளில் 24 முறை பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்..
கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்தபோது அவரது அறையில் “If you have power, use it for the poor” - "உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து"- என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.
காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்தபோது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு போட்டார்.
நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில், 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் எழுதப் பட்டு இருக்கும்.
கிரானைட் மற்றும் கனிம, மணற் கொள்ளைகள் பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார். நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும் 'தொடுவானம்' என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார்.
கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார். மதுரையில் ஆட்சியராக இருந்த போது இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
அதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார். கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆண்டு பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இப்படி நிறைய இருக்கிறது சகாயத்தின் சாதனைகள்...
இந்நிலையில்,மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றம் பரபரப்பாக பேசப் பட்டது.
சகாயம் கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்தபோது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாற்றப்பட்டார். கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், 'அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார். இதனாலேயே அமைச்சரின் கோபத்திற்கு ஆளாகி மாற்றப்பட்டதாக அப்போது தகவல் வெளியானது.
தற்போது இந்திய மருத்துவத் துறை இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில்,"சகாயம் ஐ.ஏ.எஸ். முதல்வராக நாங்கள் விரும்புகிறோம்" ( We want U Sahayam IAS as CM ) என்ற முகவரியோடு புரபைல் ஒன்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உலாவருகிறது.
"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற வாசகம் அலங்கரிக்க, ஆரம்பித்த 2 வது நாளான இன்று மாலை 5 மணி வரை 4,588 பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் லைக்குகளோடும், இந்த யோசனைக்கு ஏராளமான வரவேற்புகளுடனும் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்கிறது அந்த ஃபேஸ்புக் தளம்.
No comments:
Post a Comment