Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 10, 2015

களத்தில் முஸ்லிம்கள் காரணம் என்ன?



களத்தில் முஸ்லிம்கள் காரணம் என்ன?
நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்க காரணம் என்ன?

மழை நிவாரணப் பணிகளில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் தான் முன்னனியில் உள்ளனர். இதை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயம் வெளிப்படையாகக் கூறி பெருமிதப்படுகிறது.

இதற்கு என்ன காரணம்?

முன்னரே அறிவித்து விட்டு செய்யப்படும் உதவிகளுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் பேரவுகளின் போது உதவி செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.



பண்டிகையின் போதும் தலைவர்களின் பிறந்த நாளின் போதும் இன்ன பிற நிகழ்ச்சிகளின் போதும் பலரும் ஏழைகளுக்கு உதவுகிறார்கள். திட்டமிட்டு பல நாட்களாக நிதி திரட்டி அந்த நிதியைக் கணக்கிட்டு செலவிடுவார்கள்.

ஆனால் திடீரென ஏற்படும் பேரழிவுகளின் போது உடனடியாக களம் இறங்க வேண்டும். உடனடியாக உடலுழைப்பு செய்ய வேண்டும். நிதி திரளுமா இல்லையா என்பதைக் கவனிக்காமல் உடனே நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளின் முஸ்லிம்கள் மட்டுமே முன்னனியில் இருக்கிறார்கள். சுனாமியின் போதும், தானே புயலின் போதும் இப்போதைய பேரழிவின் போதும் முஸ்லிம்கள் மட்டுமே களத்தில் உள்ளனர் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் மத நம்பிக்கையாகும்.

அப்படியே உதவுவதாக இருந்தாலும் தங்களின் சாதி, மதம் பார்த்து உதவ வேண்டும் என்று தான் சிலர் களம் இறங்குவார்கள். சாதி மதம் மறந்து உதவுபவர்களாக இருக்க மாட்டார்கள்.

இந்தப் பேரழிவைப் பொருத்த வரை முஸ்லிம்களுக்கு அதிக பாதிப்பு இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மண்ணடி, திருவல்லிக்கேனி உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய சேதம் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிமல்லாத மக்கள் தான்.

இந்துக்கள் தானே பாதிக்கப்பட்டு உள்ளார்கள்? இவர்கள் தானே நமக்கு வீடு வாடகைக்குத் தர மறுத்தவர்கள்! இவர்கள் தானே நமது சொந்தப் பணத்தில் இடம் வாங்கி பள்ளிவாசல் கட்ட முணையும் போது அதைத் தடுத்து நிறுத்தியவர்கள்! இவர்கள் தானே முஸ்லிம்களை வேலைக்குச் சேர்க்க மாட்டோம் என்று சொன்னவர்கள்! ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தவர்கள்! இவர்கள் தானே சினிமாக்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாச் சித்தரித்த போது விசில் அடித்து ஆனந்தம் அடைந்தவர்கள்! இப்படித்தான் முஸ்லிம்களின் எண்ண ஓட்டம் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவன் யார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாதிப்பு மட்டுமே அவர்களுக்குத் தெரிந்தது.

இதற்குக் காரணம் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாம் மார்க்கமே.

இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்!

புனிதப்பள்ளியை விட்டு உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

- திருக்குர்ஆன் ஐந்தாவது அத்தியாயம். இரண்டாவது வசனம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர் ஆன் ஐந்தாம் அத்தியாயம் எட்டாவது வசனம்

"உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 24 வது அத்தியாயம். 22 வது வசனம்.

முஸ்லிம்கள் கடவுளின் வேதமாக நம்புகின்ற இந்த வேதவரிகள் தான் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அத்தனை அனீதிகளையும் மறக்கச் செய்தது. களத்தில் இறங்கி பணியாற்றச்செய்தது.

கடவுள் நம்பிக்கை கொண்ட பல்வேறு மதத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள் கடவுளின் அன்பைப் பெறுவதாக எண்ணிக் கொண்டு கோடிகோடியாக உண்டியலில் போய் கொட்டுகின்றனர். அதே நேரத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களைக் கவனிப்பாரற்று விட்டு விடுகின்றனர். தங்கள் அண்டை வீட்டிலும், தங்கள் தெருவிலும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் மக்கள் இருப்பதைக் கண்ணாரக் கண்ட பின்பும் அவர்களுக்கு உதவுவதில்லை. அதைவிட உண்டியலில் போடும் காணிக்கையே சிறந்த நல்லறம் என்று நினைக்கின்றனர்.

ஏழைகளுக்காக செலவிடுவதும் இறைவனுக்குச் செய்யும் வணக்கம் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான்' என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.


மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்' என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.

வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.

இதை யாருக்கு வழங்க வேண்டும்? பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய (முஸ்லிமல்லாத)வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:60

இந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.

செலவிட வேண்டிய எட்டு வழிகளில் முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிட்டு மதம் கடந்த மனித நேயத்தை இஸ்லாம் பேணுகிறது.

மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிறபடி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதோ திருக்குர்ஆனின் சில வசனங்களை வாசியுங்கள்! முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் ஏன் பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

திருக்குர்ஆன் 2:83

தாம் எதைச் செலவிட62 வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:215

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், இறைத்தூதர்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

திருக்குர்ஆன் 2:177

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 2:265

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:272

(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.

திருக்குர்ஆன் 2:280

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 4:36

நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!

திருக்குர்ஆன் 9:34

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:60

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்!

திருக்குர்ஆன் 17:26

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.

திருக்குர்ஆன் 57:18

திருக்குர்ஆனின் இந்த அறிவுரை பிஞ்சுப்பருவத்திலேயே முஸ்லிம்களுக்கு விதைக்கப்பட்டதால் தான் யாரும் அழைக்காமல் இதற்காக விழுப்புணர்வுப் பிரச்சாரம் செய்யாமல் தாமாக ஓடோடிச் செல்கின்றனர்.

இதற்காக இவர்கள் எதிர்பார்க்கும் பிரதிபலன் என்ன? அதையும் திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ''அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.) ''எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனவும் கூறுவார்கள்.)

திருக்குர்ஆன் 76:8,9,10

இந்த அறப்பணிகளுக்கு உதவினால் அல்லாஹ்விடம் அதற்கான கூலி கிடைக்கும் என்பது மட்டுமே அவர்களின் ஒரே இலக்கு.

உதவிக்கு வந்த முஸ்லிம்கள் இதற்காக மற்றவர்கள் பிரதியுதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். இதைச் சொல்லி உங்களிடம் ஓட்டுக் கேட்க மாட்டார்கள்.

சகஜ நிலை திரும்பியதும் வழக்கம் போல் பயங்கரவாதிகள் பட்டத்தைச் சுமத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதைத் தெரிந்து தான் உதவுகிறார்கள். சுனாமியின் போது அவர்கள் செய்த நிவாரணப் பணிகள் எப்படி ஒரு மாதத்தில் மறக்கப்பட்டு பயங்கரவாதிகள் பட்டத்தைச் சுமந்தார்களோ அதுதான் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கும் என்று அவர்கள் முன் அனுபவங்கள் மூலம் அறிந்து வைத்துள்ளார்கள்.

அரிதாக மிகச் சிலர் மட்டும் இதைத் தக்க முறையில் புரிந்து முஸ்லிம்களை நன்மக்களாக கருதுவார்கள்.

இந்தக் கட்டுரை தவ் ஹீத் ஜமாஅத் நிறுவனர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள விளக்ககுறிப்புகளைத் தழுவி எழுதப்பட்டது.

1 comment:

  1. Your Affiliate Money Making Machine is ready -

    And making money online using it is as simple as 1, 2, 3!

    Here is how it works...

    STEP 1. Input into the system what affiliate products you intend to promote
    STEP 2. Add some PUSH BUTTON traffic (this ONLY takes 2 minutes)
    STEP 3. Watch the affiliate products system grow your list and upsell your affiliate products all on it's own!

    Are you ready to make money ONLINE??

    The solution is right here

    ReplyDelete