கிளை நுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளர்க்கப்படுகின்றது.
இதன் இலை, பூ, காய், பழம், விதை, நெய், புண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவைகளுக்கு மருத்துவக் குணமுண்டு. இலுப்பைப் பூ நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியை உண்டாக்கும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். காமம் பெருக்கும். தும்மல் உண்டாக்கும், விதை நோய் நீக்கி உடலைத் தேற்றும்.
வேறு பெயர்கள்: இருப்பை, சூலிகம், மதுரகம், ஓமை.
ஆங்கிலத்தில்: Bassia longifolia
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக்கட்டி வரத் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இலுப்பைப் பூ 50 கிராமை அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலையில் மட்டும் தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வர மது மேகம் குணமாகும்.
* இலுப்பைப் பூவை 10 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, 200 மில்லி பாலில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும். காய்ச்சல் குறையும்.
* இலுப்பை மரப்பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடம்பில் தடவி வைத்து பின்னர் குளிக்க சொறி, சிரங்கு ஆறும்.
* இலுப்பை எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடு செய்து உடம்பில் தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* இலுப்பை புண்ணாக்கை 10 கிராம் எடுத்து 50 மில்லி நீரில் கரைத்து நஞ்சு உண்டவர்களுக்குக் குடிக்க கொடுக்க, வாந்தி உண்டாகி நஞ்சு வெளியேறும்.
* இலுப்பை புண்ணாக்கை அரைத்து குழப்பி அனலில் வைத்துக் கறியாகக் கிளறி இளம் சூட்டில் 5, 6 முறை கட்டி வர, விதை வீக்கம் குணமாகும்.
* காய்ந்த இலுப்பைப் பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட அந்த இடத்தில் வேர்வை தோன்றி வீக்கம் குறைந்து கொண்டே போகும்.
* இலுப்பைப் புண்ணாக்கை மண்ணில் புதைக்க வீட்டிலுள்ள புழு, பூச்சி, எலிகள் வீட்டை விட்டு அகலும். மேலும், இதைப் பொடி செய்து மூக்கிலிட, நீர்பாய்ந்து தும்மல் உண்டாகி சளியை வெளியேற்றும்.
No comments:
Post a Comment