Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 18, 2013

மூச்சு இருக்கும் வரை....



Siddha Medicine for breathing problems - Food Habits and Nutrition Guide in Tamil மூச்சு விடுவதை நாம் மிகவும் சுலபமானதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மூச்சு விடுவதை நாம் உணர்வதே இல்லை. பொதுவாக, அன்றாட வேலைகளில் மூழ்கியிருக்கும் போதும், தூங்கிக் கொண்டிருக்கும் போதும் மூச்சு விடுகிறோம் என்ற நினைப்பே நமக்கு இருப்பதில்லை.
மூச்சு விடுவது ஒரு இச்சை செயல் அல்ல. இருப்பினும் மூச்சு விடுவதை எப்போதும் நாம் உணராத ஒரு முயற்சியற்ற செயலாக ஆக்குவது நம்முடைய மூச்சு மண்டலத்தின் பிரத்தியேக அமைப்புதான்.
மூச்சு மண்டலத்தின் பிரதான உறுப்பான நுரையீரல்கள் மார்பறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றன. நுரையீரல்கள் பிரத்தியேக குழாய் மூலம் மூக்குத் துவாரம் வழியாக வெளியுலகிற்கு திறக்கின்றன.
மார்பறை அதன் பிரத்தியேக அமைப்பின் காரணமாக ஒரு காற்று புக முடியாத அறை போல செயல்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மார்பறையின் அடியில் அமைந்துள்ள உதரவிதானம்தான். இந்த உதரவிதானம் கீழ் நோக்கி தள்ளப்படும்போது (அல்லது இழுக்கப்படும் போது) மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து மூக்குத் துவாரம் வழியாக வெளிக்காற்று உள்ளிழுக்கப்படுகிறது.
உதரவிதானம் மேல்நோக்கி அழுத்தப்படும்போது மார்பறையின் கொள்ளளவு சுருங்கி நுரையீரல்களில் நிரம்பியிருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. மார்பறையின் இது போன்ற அமைப்பு காரணமாக மூச்சுக் காற்றை உள்ளிழுப்பதற்கு மட்டும்தான் நாம் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், மூச்சுக் காற்று வெளியேறுவதற்கு நமது முயற்சி தேவையில்லை.
இதனால்தான் மூச்சு விடுவது நமக்கு மிகவும் சுபலபமானதாகத் தோன்றுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் மூச்சு விடுவதை உணர்வதே இல்லை. ஆனால் ஏதாவது மூச்சு மண்டல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மூச்சு விடுவது எவ்வளவு கஷ்டமானதாக இருக்க முடியும் என்று.
சாதாரண தடுமம் கூட நம்மை 24 மணி நேரமும் மூச்சு விடுவதை உணரச் செய்து விடும். சில சமயங்களில் கெட்டியான சளியினால் மூக்கு நன்றாக அடைத்துக் கொண்டு, நாம் எவ்வளவு முயன்றாலும், மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாகி விடும்.
இந்த நிலையில், ஆஸ்துமா போன்ற கடுமையான மூச்சு மண்டல நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் கதி பற்றி சொல்லவே வேண்டாம். நோய் தாக்குதலின் போது, மூச்சு விடுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சியும், அந்த முயற்சியின் காரணமான சிரமத்தால் அவர்கள் துடிக்கும் துடிப்பும் மிகவும் பரிதாபமானதாக இருக்கும்.
பொதுவாக ஆஸ்துமா, மூச்சுக் குழாய் வீக்கம், நுரையீரல் நுண்ணறை வீக்கம் போன்ற மூச்சு மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், மாரடைப்பு நோயாளிகளும், விபத்து காரணமாக மார்பறையில் ஓட்டை ஏற்பட்டவர்கள் அல்லது வேறு மூச்சு மண்டல பாதிப்பு ஏற்பட்டவர்களும் மூச்சு விடுவது எவ்வளவு கஷ்டமானதாக இருக்க முடியும் என்பதை நன்கு அறிவர்.
இவர்களோடு, உரிய காலத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைகளும், நுரையீரல் கட்டி, நுரையீரல் புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், எயிட்ஸ் நோயாளிகளும் மூச்சு விடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி காரணமான சிரமத்தால் அவதிப்படுவதை நாம் காணலாம்.
ஆக்சிஜன் தேவை
நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. குளுக்கோஸ் பிரத்தியேக முறையில் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் செல்கள் அவற்றின் இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதுபோல, நமது உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கின்றது?
உடலின் இந்த ஆக்சிஜன் தேவைக்கு வெளிக்காற்றில் உள்ள ஆக்சிஜனைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். வெளிக்காற்று மூக்குத் துவாரங்களின் வழியாக புகுந்து மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களை அடைந்து அங்குள்ள எண்ணற்ற நுண்ணறைகளை நிரப்புகின்றது. அந்த நுண்ணறைகளின் சுவர்களில் இரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன.
அந்த இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் இரத்த சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் காற்றிலுள்ள ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறது. பின்னர், இந்த ஹீமோகுளோபின் இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் செல்கள் அனைத்துக்கும் தேவையான ஆக்சிஜனைக் கொண்டு கொடுக்கிறது.
இதுபோல, செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவது மட்டும் மூச்சு மண்டலத்தின் வேலை இல்லை.
அதோடு, வளர்சிதை மாற்றச் செயல்களின் போது ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மூச்சுக் காற்றின் வழியாக உடலுக்குள் புக முயலும் நோய்க் கிருமிகளை வடிகட்டித் தடுத்து நிறுத்துவது, நாம் பேசும்போது ஒலியை எழுப்புவதற்குத் தேவையான காற்றை வழங்குவது போன்ற வேலைகளையும் மூச்சு மண்டலம் கவனித்துக்கொள்கிறது.
நமது மூச்சு மண்டல உறுப்புகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக நீடிக்கக்கூடிய வகையில்தான் உருவாகியுள்ளன. இருப்பினும், பல்வேறு காரணிகளாலும், கோளாறுகளாலும் அவற்றின் செயல்பாடு பலவகைகளில் பாதிக்கப்படுகிறது. முக்கியமாக, காற்றில் உள்ள மாசுகளும், புகை பிடிப்பதும், நுரையீரலைக் கடுமையாக பாதிக்கின்றன. வேறு சில கோளாறுகளாலும் நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
நமது மூச்சு மண்டல உறுப்புகளை முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் இது போன்ற கோளாறுகள் அல்லது நோய்களில் சில தற்காலிகமானவை. அவை பெரிய அளவிலான கேடு அல்லது தொந்தரவு எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், மற்றவை உயிருக்கே இறுதிகட்டக் கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தானவை.
பொதுவாக, மூச்சு விடுவதை நாம் அதிக அளவில் உணரத் தொடங்கி விட்டாலே அல்லது மூச்சு விடுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதிருப்பது போலத் தோன்றினாலே நமது மூச்சு மண்டலம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
எப்போதாவது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அதற்கான காரணம் அதிகம் கவலைப்பட வேண்டியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீடித்த மூச்சுக் கோளாறுகளை நாம் அதுபோல அலட்சியப்படுத்த முடியாது. அதேபோல, காறி உமிழ்வதில் இரத்தம் காணப்பட்டாலோ அல்லது நீடித்த இருமல் இருந்தாலோ நாம் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நம்முடைய நுரையீரல்களை நாம் நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் அவை நம்முடைய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் கவனித்துக்கொள்ளும்.

No comments:

Post a Comment