மரங்கள் நகர்வதில்லை;
மரங்கள் பேசுவதில்லை;
மரங்கள் சிரிப்பதும் இல்லை,
அழுவதும் இல்லை- ஆனாலும்
மற்றவர்களுக்காக வாழும் குறிக்கோள்
மரங்களுக்கு உண்டு!
நமக்கு?
அழுவதும் இல்லை- ஆனாலும்
மற்றவர்களுக்காக வாழும் குறிக்கோள்
மரங்களுக்கு உண்டு!
நமக்கு?
முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வீடு உண்டு. ஜிலீரடிக்கும் விலை உயர்ந்த காரும் உண்டு. கணிப்பொறியின் முன்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து காலை முதல் மாலை வரை களைப்பின்றி வேலை செய்ய கார்ப்பரேட் அலுவலகம் உண்டு. கோட்-சூட், டை, பூட்ஸ் என்று ராஜ வாழ்க்கை உண்டு. மாதம் ஒன்றுக்கு ஊதியமாக 10 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் உண்டு. இப்படி ஏகப்பட்ட 'உண்டு'களுடன் நேற்று வரை அமெரிக்க நாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர்!
இன்று...? ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கை இல்லை. பெரும் வருமானமாக காசு இல்லை. சொகுசு கார் இல்லை. மனிதர்களின் நெருக்கம் இல்லை. மனதில் இறுக்கம் இல்லை. இப்படி ஏகப்பட்ட ‘இல்லை’களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது, ஓயாமல் அவருடன் இருப்பது.... வியர்வையில் நனைந்த வெள்ளை நிற அழுக்குப் பனியன், சாயம் போன பழைய லுங்கி மற்றும் ஆயிரக்கணக்கான மரங்கள்.
படாடோபமான அமெரிக்க வாழ்க்கையை அப்படியே மாற்றிக் கொண்டு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் மிக அருகில் பல ஏக்கர் நிலத்தில் மரங்களை வளர்ப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கிறார் 48 வயது நிரம்பிய 'ராம்கி' என்கிற ராமகிருஷ்ணன்.
புளியன்கோம்பை பகுதியில், ‘நிறைவு- இயற்கை வேளாண் வாழ்வியல் மையம்' என்கிற எழுத்து பளிச்சிட பல ஏக்கரில் வளர்ந்து கிடக்கிறது ராம்கியின் காடு. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தோம். மரங்கள் சூழ்ந்த பாதை... ஓயாது ஒலிக்கும் பறவைகளில் பாட்டு... இவற்றுக்கு நடுவே அவரின் அழகிய வீடு.
''உங்களைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்'' என்று வாய் நிறைய வரவேற்றார் ராம்கி. உடன், அவரின் அக்கா செல்வமணி. திரும்பினால்... இரண்டு மரங்களின் இடையே பொருத்தப்பட்டுள்ள அலுமினிய ஊஞ்சல். அதில், ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ராம்கியின் 79 வயது தாய் சாயம்மாள். அறிமுகப் படலம் முடிந்தது, ஓலைத் தொப்பி ஒன்றை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டவர், ''வாங்க போகலாம்'' என்றபடியே புறப்பட்டார்.
''இதுதான் வன்னிமரம். இதுதான் கருமருது. இது, ராஜஸ்தான் தேக்கு. இது, திருவோடு மரம்'' என்று ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டே வந்தவர், அப்படியே தன்னுடைய கதையையும் கலந்து சொல்லிக் கொண்டே வந்தார்.
''எனக்குப் பூர்வீகம் கோவை மாவட்டம், பல்லடம் பக்கத்தில் வடுகப்பாளையம். மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்ற நான், 85-ம் வருடம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. பயின்றேன். பின்னர், மின்னணு டிசைனிங் துறையில் மாதம் 10 ஆயிரம் டாலர் ஊதியத்துக்கு வேலையில் சேர்ந்தேன். 8 வருடங்கள் அங்கே இருந்துவிட்டு... ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்குச் சென்று பணியாற்றினேன். மொத்தம் 11 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கை. எல்லாவிதமான வசதிகளும் இருந்தும் எனக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. எனது எண்ண ஓட்டம் எல்லாம் தாய் மண்ணின் மீதுதான் படிந்திருந்தது. மனித பாசம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், கிடைத்தாலும் மரங்கள் மீதான பாசம்தான் எனக்கு மனநிறைவு தருவதாக உணர்ந்தேன். என்னுடைய மண வாழ்க்கை மனநிறைவுடன் அமையாததும் அதற்கு ஒரு காரணம். விருட்சங்கள்தான் இனி நம் வாரிசுகள் என்கிற முடிவுடன் எனது சேமிப்பை எடுத்துக்கொண்டு தாய்நாடு திரும்பினேன்'' என்று நிறுத்தியவர், மரம் வளர்ப்பில் தான் புகுந்த கதைய விவரிக்கத் தொடங்கினார்.
''மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது. அதற்கு நம்மால் ஆன உதவியைச் செய்யலாமே என்பது என் எண்ணம். 'இயற்கை வேளாண் வாழ்வியல் மையம்' என்கிற பெயரில் ‘உயிரின பன்மயம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன். சிறுசிறு பூச்சிகளில் இருந்து விலங்குகள் வரை அத்தனை உயிர்களும் வாழ் வதுதான் பூமி. அதைத்தான் உயிரின பன்மயம் என்பார்கள். ஆனால், மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக உயிரின பன்மயம் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன் பலனைத்தான் ‘குளோபல் வார்மிங்’ என்ற பெயரில் உலகம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், ஏற்கெனவே இருக்கும் உயிரின பன்மயத்தை காக்கவேண்டும். புதிதாகவும் உருவாக்கவேண்டும்.
அந்த முயற்சியின் ஒரு கட்டமாகத்தான் சத்தியமங்கலம் அருகில் உள்ள இந்த 33 ஏக்கர் நிலத்தை வங்கினேன். 10 குதிரை சக்தி கொண்ட பம்ப்செட் பொருத்திய 350 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து சொட்டுநீர் பாசனம். ஏற்கெனவே இருந்த காட்டு மரங்களுடன்... நான் உண்டு பண்ணிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 150 வகை மரங்கள், 5 வயது நிரம்பி இப்போது பூத்து குலுங்குகின்றன.
தாவரங்கள், பறவைகள், முயல், மான், புழு, பூச்சிகள் என்று எல்லாம் இங்கே வரத்துவங் கிவிட்டன. ஆக, 'உயிரின பன்மயம்' என்கிற எனது நோக்கம் மெள்ள மெள்ள நனவாக ஆரம்பித்து விட் டது. நேசித்தால் தான் அருமை தெரியும். அதைப் பாதுகாத்திடவும் செய்வோம். நான் மரங்கள், பறவைகள், புழு-பூச்சிகள் என்று மிகவும் நேசிக்கிறேன். அதனால் அதன் அருமை தெரிகிறது. பாதுகாத்தும் வருகிறேன்'' என்று சிலிர்த்துப் போய்ச் சொன்னார் ராம்கி.
''உயர்ந்து நிற்கப் போகும் இந்த மாடத்தின் மீது நின்று ஆயிரக்கணக்கான மரங்கள், அதனுள்ளே உறவாடும் பறவைகள், குளிர்ந்த சுத்தமான காற்று... இவைகளை யார் வேண்டுமானாலும் அனுபவித்துச் செல்லலாம். குறிப்பாக நாளைய தலைமுறையான குழந்தைகள் இவற்றையெல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.
கதை சொல்லி!
ராம்கியின் சகோதரி செல்வமணியும் சளைத்தவரல்ல.. ஒவ்வொரு மரங்களின் தாவரப்பெயர் முதற்கொண்டு, பறவைகளைப் பற்றியும் வரி விடாமல் தெரிந்து வைத்திருக்கிறார். மரங்களைப் பற்றிய வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகள் பலவும் கைவசம் வைத்துள்ளார் செல்வமணி.
|
எத்தனை எத்தனை!
ராம்கியின் காட்டில், நம்மில் பலர் அறிந்திருக்கும் மரங்களோடு... கேள்வியேப்பட்டிராத வகைகளும் இடம் பிடித்துள்ளன. அவற்றில் சில... அயல்வாகை, அயல்கொன்றை, அரப்பு, பன்னீர் அரளி, ஆச்சான், ஆத்தி, ஆயன், ஆனைக்குன்றுமணி, இச்சி, இலவன், இலுப்பை, ஈட்டி, எட்டி, ஏழிலைப்பாலை, கடுக்காய், கத்திசவுக்கு, கருக்குவாசல், கருவேல், வெள்வேல், குடைவேல், கருமருது, முள்முருங்கை, காயா, காட்டு ருத்ராட்சம், குமிழ், சந்தன வேங்கை, சர்க்கரைப்பழம், சரக்கொன்றை சவுண்டால், சொர்க்க மரம், திருவாத்தி, திருவோடு, தேவதாரு, நறுவிலி, நாய்வேலன், வெண்மருது, மனோரஞ்சிதம், வன்னி, விராலி, வில்வம், விளா என்று நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வகை மரங்கள் உள்ளன.
இவற்றையே சரணாலயமாக ஏற்று கிளி, சிட்டுக்குருவி, மயில், தேன்சிட்டு, தவிட்டுக்குருவி, ஆள்கட்டி, மைனா, இருவாச்சி, மலர்கொத்து, கானான்கோழி மற்றும் வண்ணத்துபூச்சிகள் என்று பல்வேறு உயிரினங்கள் அங்கே உலா வருகின்றன.
தனக்கு தேவையான மரக்கன்றுகளை திண்டுக்கல் 'பழனிமலை பாதுகாப்பு இயக்கம்' என்கிற தனியார் தொண்டு நிறுவனத்திடம் இருந்தும், கோவை வன மரபியல் கோட்டத்தின் மூலமும் பெற்றுக் கொள்கிறார். பஞ்சகவ்யா, அமிர்தகரைசல் உள்ளிட்ட இயற்கை உரங்களைத்தான் மரங்கள், செடிகளுக்கு கொடுத்து வருகிறார். 400 வகையான மரங்களை நடவேண்டும் என்ற கனவிலிருக்கும் ராம்கி, ''அசோகமரம், உவாமரம், இரண்டும் எங்கு தேடியும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை'' என்று வருத்தப்படுகிறார். தொலைபேசி: 04295-220429. அலைபேசி: 98423-99958.
|
No comments:
Post a Comment