மும்பை: மின்சாரம், தொலைபேசி, குடிநீர் கட்டணம், இன்சூரன்ஸ் உட்பட அனைத்து கட்டணத்தையும் ஒரே இடத்தில் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. இன்டர்நெட் பேங்கிங் போன்றவை மூலம் சாத்தியமாக்கும் இந்த வசதியை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இது இருக்கும். இருக்கும் இடத்தில் இருந்தே தொலைபேசி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளது. ஆனால் இந்த வசதி இன்டர்நெட் பேங்கிங், டெபிட்கார்டு போன்றவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. மற்றவர்கள் ஒவ்வொரு கட்டணம் செலுத்துவதற்கும் ஒரு இடத்துக்கு ஓடவேண்டியுள்ளது. இதை தவிர்க்க நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தொலைபேசி, மின்சாரம், குடிநீர் கட்டணங்கள், இன்சூரன்ஸ் பிரிமீயம் ஆகியவை ஒரே இடத்தில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். தற்போது சில இடங்களில் இத்தகைய வசதிகள் இருந்தாலும், அவை வாடிக்கையாளரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. எனவே, ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் மையம் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் ஜி.பத்மநாபன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அப்போது, நாட்டில் உள்ள முக்கியமான 20 நகரங்களில் 3,080 கோடி பில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ 6 லட்சத்து 22 ஆயிரத்து 300 கோடி செலுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
அதுவும், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரடியாக சென்று பணமாக அல்லது காசோலையாக செலுத்துவது அதிகமாக உள்ளது. பணம் செலுத்துவதற்கான மையங்கள் சில இருந்தாலும், வாடிக்கையாளர் தேவையை முழுமையாக அவை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே, பாரத் கட்டண வசூலிப்பு மையம் (பிபிபீஎஸ்) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த திட்டம், ஏஜென்டுகள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் மக்கள் பல்வேறு கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்த வழிசெய்வதோடு, பணம் செலுத்தியதையும் உடனடியாக உறுதி செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு புதிய முகவர்களை உருவாக்குவதோடு, ஏற்கெனவே இதுபோன்ற ஆன்லைன் கட்டண சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழு பரிந்துரை மற்றும் மக்களிடம் இருந்து வந்த வேண்டுகோள்களுக்கு ஏற்ப இந்த புதிய திட்டம் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=120442#sthash.0deqy38T.dpuf
No comments:
Post a Comment