ஏற்றுமதி தொழில் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே தமிழர்கள் கிரேக்கத்துக்கு சென்று வணிகம் செய்ததையும், வேறு பல நாட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றதையும் வைத்துப் பார்க்கும்போது, நமது ஏற்றுமதி தொழிலுக்கு இரண்டாயிரம் வயதுக்கு மேல் என்று சொல்லலாம்.
பல நூறு ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டின் உள்நாட்டு வணிகம் பண்டமாற்று முறையிலேயே அமைந்திருந்தது. நம் முன்னோர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு மாற்றாக தனக்குத் தேவையான வேறு ஒரு பொருளைப் பெற்றனர். அயல்நாட்டு வணிகத்துக்காக தங்க நாணயங்களைப் பயன்படுத்தினர். அப்போது தொடங்கிய இந்த வர்த்தகம், இன்றைக்கு ஏற்றுமதி, இறக்குமதி என இருபெரும் தொழிலாக மாறியிருக்கிறது. இந்தியாவில் ஏற்றுமதிக்கு பொன்னான பல வாய்ப்புகள் இருக்கிற மாதிரி, இறக்குமதிக்கும் உண்டு. என்றாலும், இந்தத் தொடரில் நாம் ஏற்றுமதி குறித்து மட்டுமே பார்க்கப் போகிறோம்.
இந்தத் தொடரில் தமிழகத்திலிருந்து எந்த பொருட்களை, எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம், ஏற்றுமதி தொழிலை சிறப்பாகச் செய்பவர்களின் அனுபவங்கள் என பல கோணங்களில் அலசப்போகிறோம்.
அதிகரிக்கும் ஏற்றுமதி!
நம் நாட்டில் அன்று முதல் இன்று வரை ஏற்றுமதி செய்ய ஏராளமான பொருட்கள் இருப்பதால், ஏற்றுமதி சார்ந்த தொழில் வாய்ப்புகளும் அதிகரித்தே வருகின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், இந்தியாவிலிருந்து சுமார் ரூ.1,60,066 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி இருக்கும் பொருட்களின் மதிப்பு 6.05% அதிகரித்து ரூ.11,45,605 கோடியாக உள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதியை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது மத்திய அரசு நிறுவனமான இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் (Federation of Indian Export Organisations, சுருக்கமாக FIEO). சென்னையில் உள்ள இதன் தென் மண்டல அலுவலகத்தின் இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணன், இந்தியாவில் ஏற்றுமதி தொழில் அடைந்துவரும் வளர்ச்சி பற்றி விளக்கிச் சொன்னார்.
“உலக அளவில் ஏற்றுமதி தொழில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் உலகப் பார்வை இந்தியாவின் மீது திசை திரும்பி உள்ளது. இந்த வளர்ச்சியானது ஏற்றுமதித் தொழில் செய்வோருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும். என்றாலும், போட்டியும் பலமாகவே இருக்கிறது. இந்தப் போட்டியைச் சமாளித்து நமக்கென ஓர் இடத்தைப் பெறுவது ஒரு பெரிய சவால்தான்” என்றவரிடம், இன்றைய நிலையில் எந்த மாதிரியான பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது, ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு என்ன என்று கேட்டோம்.
உயரும் தமிழக ஏற்றுமதி!
“இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா இதற்கு அடுத்து தமிழகம் இருக்கிறது. தற்போதைய நிலையில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 11.5%. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால் வரும் காலங் களில் ஏற்றுமதி வாய்ப்புத் தமிழகத்தில் சிறப்பாக இருக்கும். அதேபோல, உலகச் சந்தையில் இந்தியாவின் வருடாந்திர ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டில் 4 சதவிகிதமாக உயரலாம்.
பெருகும் ஏற்றுமதியாளர் எண்ணிக்கை!
இன்றைய நிலையில், இந்தியாவில் உள்ள மொத்த ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை 80,000-ஆக உள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.6 லட்சமாக அதிகரிக்கும். இந்தத் தொழில் வாய்ப்புகளை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தமிழகமும், இந்தியாவும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.
உணவுப் பொருட்களுக்கு அதிக மவுசு!
முக்கியமாக, மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், நம்மில் பலர் ஏற்றுமதிக்கு தகுதியான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் கவனக்குறைவாகச் செயல்பட்டு வருகிறோம். இதனால் இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் மீது வெளிநாட்டவர்கள் வைத்துள்ள மதிப்பு குறைகிறது.
உதாரணத்துக்கு, இந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்களுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அதை நாம் முறையாக விளைவிக்கிறோமா என்றால், இல்லை. இன்றைக்கு பல விவசாயிகள் செய்யும் தவறு, ரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிப்பதுதான். தவிர, அதை பேக்கிங் செய்யும்போது ஏற்படும் சேதத்தினால் லாபத்தை இழக்கின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க தமிழக வேளாண் துறையுடன் இணைந்து, விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
உதாரணத்துக்கு, இந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்களுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அதை நாம் முறையாக விளைவிக்கிறோமா என்றால், இல்லை. இன்றைக்கு பல விவசாயிகள் செய்யும் தவறு, ரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிப்பதுதான். தவிர, அதை பேக்கிங் செய்யும்போது ஏற்படும் சேதத்தினால் லாபத்தை இழக்கின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க தமிழக வேளாண் துறையுடன் இணைந்து, விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
மேடு இன் இந்தியா!
இந்தியா முழுக்க ஏற்றுமதியை நிலைநிறுத்த பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இதில் முக்கியமானது ‘மேடு இன் இந்தியா (Made in India)’ கண்காட்சி. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை இந்தக் கண்காட்சி மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சொல்கிறோம். சமீபத்தில் ரஷ்யாவில் இந்தக் கண்காட்சியை நடத்தினோம். வரும் மார்ச் மாதத்தில் கென்யாவில் நடத்த இருக்கிறோம்.
ஏற்றுமதியாளர்களின் கவனத்துக்கு!
முதன்முதலாக ஏற்றுமதித் தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து, அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்டபின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். தரமாக பொருளைத் தயாரித்தால் உங்களுக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் கிடைக்கும்’’ என்று சொல்லி முடித்தார் உன்னி கிருஷ்ணன்.
தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்.
(ஏற்றம் பெறுவோம்)
படம்: சோ.கேசவசுதன்.
படம்: சோ.கேசவசுதன்.
No comments:
Post a Comment