Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 14, 2015

`ரெடிமேட்' உணவுகள் சரியா... தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்...

ன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத் தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது 'ரெடி டு ஈட்’ உணவுகளின் வியாபாரம். 'பெரு நகரங்களில் 82% குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந் துள்ளன' என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம். பல மணி நேர சமையலறைச் சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய! அதைப் பற்றியதே இந்தக் கட்டுரை! 

உங்கள் உணவில் எத்தனை கெமிக்கல்கள்?!
''காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும்போதுகூட நார்மல் சருமத்துக்கானதா, வறண்ட சருமத்துக் கானதா, காலாவதி தேதி என்ன என்பதை எல்லாம் பார்த்து வாங்கும் நம் மக்கள், உண்ணும் உணவு விஷயத்தில் அந்த அக்கறையைக் காட்டாதது வேதனைக்குரிய விந்தை!'' என்று நொந்து போய் சொல்லும், சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, விரிவாகவே பேசினார்.
''சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையாக வந்திருக்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, அந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றதா போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வுகூட இங்கு பலருக்கும் இல்லை. 'ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால், சமையல் முடிந்தது' என்கிற எளிமையை மட்டுமே பார்த்து வாங்கிச் சாப்பிடும் அந்த உணவுகளில் பலவும்... 15 வயதில் கேன்சரையும், 25 வயதில் சர்க்கரை நோயையும் தரவல்லது என்பதை அறிவீர்களா?
காலையில் சமைக்கும் உணவு, இரவுக்குள் கெட்டுவிடும் என்பதே இயல்பு. கெடவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஓர் உணவுப் பொருளை, நாள் கணக்கில்... மாதக்கணக்கில் எல்லாம் கெடாமல் வைக்க வேண்டும் என்றால், அதில் எந்தளவுக்கு செயற்கைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்? அப்படிச் சேர்க்கப்படும் பதனப்பொருட்கள் (preservative) மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்தானே!
உணவுப்பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்து வதற்காகச் சேர்க்கப்படும் சல்ஃபைடு, ஆஸ்துமா மற்றும் மனநலன் சார்ந்தபிரச்னையை விளைவிக்கக்கூடும். ரெடிமேட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அந்த உணவின் சுவை குறைவது இயல்பு. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ரெடிமேட் உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையைத் தக்கவைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகச் சேர்க்கிறார்கள். ரெடிமேட் உணவுகளில் உள்ள அதிக கொழுப்பு, இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சரும நோய்கள், உடல் பருமன், நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளையும் தரவல்லது இந்த ரெடிமேட் உணவுகள். அசைவ உணவுகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் சோடியம்... அலர்ஜி, வாந்தியில் தொடங்கி, புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.  
வீட்டில் தயாராகும் உணவுகளைவிட, ரெடிமேட் உணவுகள் வழங்கும் ஊட்டச் சத்துகள் குறைவு. அவை கெட்டுப் போகாமல் இருக்க பல வேதியியல் முறைகளுக்கு உட்செலுத்தப்படும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துபோகும். எனவே, ஒருவர் தொடர்ந்து ரெடிமேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதோடு, அது அவரின் உடல் வளர்ச்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கரைக்கும்.
உணவு அரசியல்!
ரெடிமேட் உணவுகள், ஓர் உலக அரசியல் காரணி. சந்தையில் தங்களின் பொருளை நிலைநிறுத்த பெரும்பாலான நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை புறந்தள்ளுகின்றன. தேவை லாபம். அதைப் பெற, மணம், வண்ணம், கெட்டுப்போகாமல் நீடிக்கும் தன்மை என இவற்றுக்காக எதையும் சேர்க்கலாம் என்பது இவர்களின் கொள்கை. அவற்றை வாங்கிச் சாப்பிடும் நமக்கு என்ன நேரும் என்று கவலைப்பட, அவர்கள் நம் அம்மாவோ, பாட்டியோ இல்லையே!
2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 'பேக்' செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விற்பனை 30 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என்கிறது. இதில் உங்களுடைய பணமும் சேரத்தான் போகிறதா?!'' என்று கேட்டு முடித்தார், ஊட்டச்சத்து நிபுணர் பவானி.
கெமிக்கல் விருந்து!
மக்களிடையே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர், சென்னையைச் சேர்ந்த 'கான்சர்ட்' எனும் தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் சந்தானராஜன். அவர் பேசும்போது, ''ரெடிமேட் உணவுகளில் பல வகையான கெமிக்கல்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட வண்ணங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் கலவைகள் என பலவற்றையும் கேட்பாரற்றுக் கலந்து வருகின்றன பல நிறுவனங்கள். மேலும், பேக் செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல. அப்படியான பிளாஸ்டிக் மெட்டீரியலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை நாங்கள் 'கெமிக்கல் விருந்து’ என்று குறிப்பிடுவோம்.
சாதாரணமாகவே பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதில் மாதக்கணக்கில் உணவு பதப்படுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களும், விளைவிக்கும் கேடுகளும் நிறைய. எங்கள் 'கான்சர்ட்’ அமைப்பும், இன்னும் பல நுகர்வோர் அமைப்புகளும் 'உணவுப் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தகுதியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிரத்யேக முத்திரை ஒதுக்குங்கள்’ என்று பல முறை அரசிடம் வலியுறுத்தி ஓய்ந்துவிட்டோம்!
வண்ணமும், குறியீடும்!
பொதுவாக, உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய வண்ணங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இயற்கை வண்ணம் (natural),மற்றொன்று செயற்கை வண்ணம் (synthetic).கறிவேப்பிலையில் உள்ள பச்சை நிறம், கேரட்டில் உள்ள ஆரஞ்சு நிறம் போன்றவை இயற்கை வண்ணங்கள். செயற்கை நிறங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 நிறங்களைத் தவிர மற்ற நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக தடைசெய்யப்பட்டுள்ள வண்ணங்களை ரெடிமேட் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.
விளம்பரங்களை நம்ப வேண்டாம்!
விளம்பரங்களில், 'இதில் இந்தச் சத்து உள்ளது’, 'ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும்’, 'ரெண்டே நிமிஷத்தில் சமையல் ரெடி’ என்றெல்லாம் கூவுபவர்கள், தங்களுக்கு தரப்பட்ட தொகைக்காக கேமரா முன் பேசியவர்களே! எனவே, விளம்பர யுக்திகளுக்கும், விளம்பரங்களில் தோன்றுபவர்களின் வார்த்தைகளுக்கும் ஏமாறாதீர்கள்.
கொதிக்காத ரசம், முக்கால் பதம் வெந்த கத்திரிக்காய், மசித்த கருணைக்கிழங்கு என்று ஒவ்வொரு உணவையும் பதம் பார்த்துச் சமைத்தவர்கள் நம் பாட்டிகளும், அம்மாக்களும். சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு ரெடி டு ஈட்' உணவுகளை வாங்கிச் சாப்பிடும்போது, அதன் விலைக்கு தோல் அலர்ஜியில் இருந்து புற்றுநோய் வரை நமக்கு இலவசமாகத் தரப்படுகிறது என்பதை நொடிப்பொழுது மனதில் நிறுத்துங்கள்!''
அக்கறையுடன் அழுத்தமாகச் சொன்னார், சந்தானராஜன்!
சமைப்போம்!

''வேண்டவே வேண்டாம்!''
ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தன் பெயர் தவிர்த்துப் பேசினார்.
''நான் கண்கூடாகப் பார்க்கும் அனுபவத்தில், ரெடிமேட் உணவுகளை விஷம்னுதான் சொல்வேன். 99% ரெடிமேட் உணவு நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு. யார் குறைந்த விலைக்கு உணவைக் கொடுத்து, அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறாங்கனு அந்த நிறுவனங்களுக்கு இடையில நடக்குற போட்டியில, உணவுப் பொருள்ல கலக்கப்படும் கெமிக்கல்ஸ், அதோட தரம் பத்தி எல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல. ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள்ல வேலை செய்யும் பணியாட்களில் இருந்து, உரிமையாளர்கள் வரை அந்த உணவுகளை யாரும் சாப்பிட மாட்டாங்க. ஏன்னா, அந்தளவுக்கு அதில் அட்டூழியம் நடக்குது. மனசாட்சி உறுத்தலோடதான் இந்த வேலையைப் பார்க்குறேன். வேற வேலை தேடிட்டு இருக்கேன். முடிந்தவரை யாரும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடாதீங்க!'' என்றார் வருத்தத்தோடு.

கிராமங்களிலும் ரெடிமேட்!
இந்தியாவில் ரெடிமேட் உணவைப் பயன்படுத்து கிறவர்களில் 78% பேர் நகரங்களைச் சேர்ந்தவர்கள், 22% பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 21% பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38% பேர், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 28% பேர், மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 36% பேர் ரெடிமேட் உணவைப் பயன்படுத்துகிறார்கள்.  
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இது 40%  60% அதிகரிக்கும் என்பது கணிப்பு.

மிளகாய்த்தூளையும் விட்டுவைக்கவில்லை!
'கான்சர்ட்’ நிறுவனம், இந்திய நுகர்வோர் துறையின் அனுமதியின் பெயரில் மிளகாய்த்தூள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 'மிளகாய்த்தூள் விலையுயர்ந்த பொருளாக இருப்பதால், அதனுடன் மிளகாய் காம்பு, இதழ்கள் முதலியன சேர்க்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. இதனால் அதன் வண்ணம் குறையும் என்பதால், அதில் சூடான் வண்ணம் எனும் பெட்ரோலியப் பொருளுக்கு போடப்படும் வண்ணம் சேர்க்கப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும், மிளகாய்த்தூளில் இயற்கை வண்ணம் மற்றும் காரத்தன்மை நீடிக்க 2% தாவர எண்ணெய் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதிகமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்ப்பதுடன், அதனை லேபிளில் சரிவர தெரியப்படுத்துவது கிடையாது. இதுவும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் அபாயப் பொருளே!’ என்கிறது அந்த ஆய்வு.
மொத்த நுகர்வோரில், 75% பேர் நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு, அதிலுள்ள தகவல்களை கவனிக்காமல் வாங்குகிறார்கள். மீதமுள்ள 25% பேரில் 39% நுகர்வோர் பயன்பாட்டு நாளையும், 27% நுகர்வோர் தயாரிப்பு தேதியையும் பார்த்து வாங்குகிறார்கள்.

குழந்தைகளைக் கண்காணியுங்கள்!
'ரெடி டு ஈட்' உணவு சாப்பிட்ட நாளைத் தொடர்ந்த நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். கூடவே, தொடர்ந்து ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணியுங்கள். ஒன்று, அது அதிக துறுதுறு என்று மாறும். அல்லது மந்தமாக மாறும். குழந்தைகளின் இந்த நடவடிக்கை மாற்றங்களுக்கும், அவர்கள் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!

No comments:

Post a Comment