Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, January 12, 2015

பில்லிங் தொழில்நுட்பம்!


சிறிய அளவில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆனால், அதன் பலனாக அவர்களுக்கு கிடைப்பதென்னவோ ஒரு சில ஆயிரம் ரூபாய்தான். பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, பல ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், வருமானமும் செலவும் சரியானபடி கணக்கில் வராமல் போவதினால்தான். சரியான லாபம் கிடைக்காமல் தவிக்கும் இவர்களுடைய பிரச்னைக்குத் தீர்வு தேடி, சில கடைகாரர்களைச் சந்தித்தோம்.

முதலில், சென்னை திருவல்லிக்கேணியில் மளிகைக் கடை நடத்தும் கே.எஸ்.நாகராஜ் இப்படி சொன்னார்.
''நான் 1986ல் இருந்து கடை நடத்தி வருகிறேன். இந்த 28 வருடத்தில் என் நிலை அப்படியேதான் இருக்கிறது. கடையிலிருந்து வரும் வருமானத்தை வைத்தே என் குடும்பத்தை நடத்துகிறேன். ஒரு மாதத்துக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தினமும் வரவு செலவுகளைக் கணக்கிட நேரமில்லை.  நான் பில் எழுதுவது இல்லை. நான் ஒருவனே பொருட்களை எடுத்துக் கொடுத்து, பணம் பெற்று சில்லறைக் கொடுத்து, பில் எழுதித் தர வேண்டும் எனில், என் வியாபாரம் கெட்டுவிடும். இல்லையெனில், இதற்குத் தனியாகச் சம்பளத்துக்கு ஓர் ஆள் வைக்க வேண்டும். எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் அவருக்குவேறு சம்பளம் கொடுக்க வேண்டுமெனில், நான் எங்கே போவது...?'' என்று தன் பிரச்னையை விளக்கினார்...  
சிறிய அளவில் கடை நடத்துகிறவர்கள் பெரும்பாலும் தானே முதலாளி, தானே தொழிலாளி என்கிற மாதிரி இருப்பார்கள். அதிகபட்சம் ஒன்றிரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பார்கள். இந்த நிலையில் கடையின் கணக்குவழக்குகளை முழுமையாக எழுதி வைப்பது என்பது முடியாத வேலை. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடையில் உள்ள பொருட்களின் இருப்புகளை சரியாக கண்டறிந்து லாபத்தை அதிகரிக்க என்ன வழி என்று விசாரிக்க களமிறங்கினோம். பில்லிங் மென்பொருளை பயன்படுத்தும் சென்னை வியாபாரி பஷீரிடம் பேசினோம்.
'நான் இந்தக் கடையை 32 வருடமாக நடத்துகிறேன். என் கடையைச் சற்று அதிக முதல் போட்டு விரிவாக்கியபோது கணக்குகள் பிடிபடாமல் போனது. என் மூலதனங்கள் ஒரு குறிப்பிட்ட பொருட்களில் மட்டும் முடங்கியது. சிறிய கடையாக இருந்தபோது அனைத்தையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது. கடையை விஸ்தரித்தபோது அது என் கட்டுப்பாட்டில் இல்லாமல் திணறினேன்.
இந்தக் குழப்பங்களைச் சமாளிக்க ஐந்து வருடங்களுக்குமுன் பில்லிங் செய்வதற்காக மென்பொருளை வாங்கினேன். தொடக்கத்தில் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி பில் தருவதற்குக் கூடுதலாக ஒரு நபர் தேவைப்பட்டார். அவருக்கு சில ஆயிரம் ரூபாய் சம்பளமும் தரவேண்டியிருந்தது. இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பின் என் கடையின் புள்ளிவிவரங்கள் எனக்கு தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஒரு வருடத்துக்குள் பில்லிங் மெஷின் வாங்க செலவழித்த தொகை, அதைப் பயன்படுத்த நியமித்த ஆளுக்கான சம்பளம் என இரண்டையுமே எடுத்துவிட்டேன். இந்த பில்லிங் மெஷினால் என் லாபம் சில சதவிகிதம் அதிகரித்தது.
என் கடையில் எத்தனை பொருட் களை, எத்தனை பிராண்ட்களில், என்ன விலைக்கு வாங்குகிறேன், யாரிடமிருந்து வாங்குகிறேன், எந்தப் பொருட்கள் எல்லாம் காலாவதியாகப் போகிறது, என்னென்ன பொருட்கள் இல்லை, எந்தப் பொருட்கள் ஆர்டர் தரப்பட்டிருக்கிறது, எவையெல்லாம் வாங்கி இருக்கிறேன் என்ற விவரங்களை இந்த மென்பொருளில் பதிந்துவிடுவேன்.
முக்கியமாக, விற்பனை விவரங்கள் அனைத்தும் பில் தருவதன் மூலம் பதிவாகிவிடும். அதுமட்டு மின்றி, ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட தேதியிலிருந்து, குறிப்பிட்ட தேதி வரை எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது, குறிப்பிட்ட பொருள் ஒரு வருடத்தில் மொத்தமாக எத்தனை பொருட்கள் எத்தனை ரூபாய்க்கு விற்பனையானது, மொத்த வியாபாரம் மாதக் கணக்கில், வாரக் கணக்கில், நாள் கணக்கில், ஏன் மணி நேரக் கணக்கில்கூட துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். என் கடையின் பணப் புழக்கத்தின் சாட்சியமாக இந்த பில்லிங் மாறி இருக்கிறது. ஒவ்வொரு நாளின் வியாபார சுருக்கமும் இந்த மென்பொருளில் இருந்து கிடைக்கும்.
இதனால் என் கணக்குகள், சரக்குகள், பணப்புழக்கம் என்று அனைத்தும் சீராகத் தெளிவாக இருக்கிறது. கடனுக்குச் சில வாடிக்கையாளர்கள் வாங்கி இருந்தால்கூடச் சில நாட்களில் அவர்களிடம் அவர்கள் வாங்கிய பில்லை காட்டி (பில்லில் பெயரிட்டு தரும் வசதி இருப்பதால்) பணத்தை வசூல் செய்ய முடிகிறது'' என பில்லிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின் தனது கடையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சொன்னார் பஷீர்.
அது மட்டுமல்ல, மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் என்ன மாதிரியான பொருட்கள் வியாபாரம் அதிகமாகும், அடுத்த இரண்டு வாரங்களில் என்ன மாதிரியான பொருட்கள் வியாபாரமாகும், வருடம் முழுவதும் என்ன மாதிரியான பொருட்கள் தேவைப்படும், சீஸனுக்குத் தகுந்தாற்போல் என்ன தேவைப்படும், பண்டிகைக் காலங்களில் எந்தப் பொருட்கள் அவசியம் என்று அனைத்து விவரங்களையும் இந்த மென்பொருளை தொடர்ந்து இரண்டு, மூன்று ஆண்டுகள் பயன்படுத்தினால் தெரிந்துவிடுமாம்.
இந்த பில்லிங் இயந்திரம் மற்றும் மென்பொருளை பற்றி அறிய இசி பில்லிங் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட்ன்  முதன்மை செயல் அதிகாரி மனோகரைச் சந்தித்தோம்.
'சிறு வியாபாரத்துக்கான பில்லிங்ல் இரண்டு வகை இருக்கிறது. பில்லிங் இயந்திரத்தைப் பயன்படுத்துவது, பில்லிங் மென்பொருளை பயன்படுத்துவது. இதில் பில்லிங் இயந்திரம் 8,500 ரூபாயிலிருந்து 15,000 வரை ஆகும். இதற்கென்று பிரத்யேகமாக பில்லிங் பேப்பர் சந்தையில் கிடைக்கிறது. இயந்திர பில் பேப்பரின் அளவை கூறினால் கிடைக்கும். இதில் பேப்பர் செலவு தவிர, அதிகச் செலவுகள் இல்லை. நேரடி மின்சாரத்திலும், பேட்டரியில் சார்ஜ் செய்தும் பயன்படுத்தலாம். இந்த இயந்திரத்தில் கடைக்காரர் விற்பனைப் பொருட்களை சுருக்கமாகக் குறிப்பிட்டு பில் செய்ய முடியும். இதில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், சப்ளையர்களின் பெயர்கள் குறிப்பிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் வியாபார நிலையை அறிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட தேதியிலிருந்து, குறிப்பிட்ட தேதி வரை வியாபார நிலையைக் காண முடியும். நாள், வாரம், மாதம் என்று ரக வாரியாக வியாபார பரிவர்த்தனை களையும், விற்பனைகளையும் பார்வையிட முடியும்.
இரண்டாவதாக, பில்லிங் மென்பொருள். இந்த மென்பொருள் விண்டோஸில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. (அப்படிப்பட்ட மென்பொருளையே வாங்குவது நல்லது!). மென்பொருளின் மாஸ்டர் கீ அல்லது அதன் ஒரிஜினல் மென்பொருள் சிடியை மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது வழங்குவார்கள் (கேட்டுப் பெற்றுக் கொள்ளவும்). மென்பொருள் எப்போதாவது கரப்ட் ஆனாலும், நாமே மென்பொருளை மீண்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ப 3,000 ரூபாயில் தொடங்கி ரூபாய் 50,000 வரை வடிவமைத்துத் தருகிறோம்.
இந்த மென்பொருளில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான மொழிகளில் வடிவமைக்க முடியும். தொடக்க நிலையில் இருக்கும் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு வசதியாக 5,000 முதல் 10,000 வரையான ஸ்டாண்டர்டு வெர்ஷன் இருக்கிறது. இதில் சிறப்பு என்ன வென்றால், வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள், சப்ளையர்கள் பற்றிய தகவல்கள், கடன் வியாபாரம் எவ்வளவு, நாம் கடன் தர வேண்டியது எவ்வளவு, குறிப்பிட்ட பொருளை பற்றிய தகவல்கள் (வாங்கியவை, விற்பனை செய்தவை, மீதம் இருப்பவை), இப்படி ஏதாவது ஒரு வார்த்தை அல்லது எண் இருந்தால் போதும் அதை வரிசையாக எடுத்துவிடலாம்.
அதேபோல், ஒரு குறிப்பிட்ட பொருளை குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை செய்ய வேண்டும் என்பதை எல்லாம்கூட நினைவுபடுத் தும். பொருட்களின் வரவுகளை பதிவு செய்யும்போதே இப்படிப்பட்ட அலெர்ட்களையும் செய்து கொள்ளலாம். இவையெல்லாம்கூட இந்த ஸ்டாண்டர்டு வெர்ஷனிலேயே செய்துகொள்ளலாம். இதனால் வியாபாரிகள் தங்கள் மூலதனத்தைத் தேவையில்லாதப் பொருட்களில் முடக்காமல் இருக்கலாம். இப்படி சிறிய கடைக்காரர்கள் அனைத்தையும் இந்த ஒரு மென்பொருள் மூலம் செய்துவிட முடியும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தானியங்கி முறையில் மென்பொருளே நம் கணினியில் ஒரு பேக்அப் எடுத்து வைத்துவிடும். எனவே, வாடிக்கையாளர்களின் விவரங்கள் எப்போதும் கடைக்காரரிடம் இருக்கும்'' என்றார் மனோகர்.
வரி கட்ட வேண்டும் என்கிற ஒரே காரணத்துக் காகவே இதுமாதிரியான பில்லிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமலே இருக்கின்றனர் சிறு வியாபாரிகள். ஆனால், கூடிய விரைவில் பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டமாக வரப் போவதால், வரி கட்டாமல் இனி தப்பிக்க முடியாது. எனவே, லாபத்தை அதிகரிக்கும் இந்த பில்லிங் தொழில்நுட்பத்தை இனியாவது சிறு வியாபாரிகள் அனைவரும் பயன்படுத்தலாமே!

No comments:

Post a Comment