Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 7, 2015

கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கிறாங்க?



"அ
ண்ணா... ஒரு பைவ் ஸ்டார் கொடுங்க, இங்க ஒரு சாக்லேட், 5 ரூபாய்க்கு டெய்ரி மில்க் கொடுங்க, இங்க ஒரு சுவிங்கம் கொடுங்க” என கடைகளில் லேட்டஸ்ட்  சாக்லேட்  வகையறாக்களை வாங்கிக் கொண்டிருந்த கீர்த்தனா, கௌஷிக்,கிஷோர், ஸ்ரீப்ரியா, தமிழ்வாணன், விஷ்ணு பிரியா, பாலவர்ஷினி ஆகிய சுட்டிகளை அழைத்துக் கொண்டு,  "என் கூட வாங்க...உங்களுக்கு ஒரு சூப்பர் சாக்லேட் தரேன்.!" என்று அழைத்துச் சென்றோம்.அவங்க நின்ன கடையில் இருந்து கொஞ்ச தூரத்தில், 'திருவாரூர் புலிவலம் துர்கா ஸ்வீட்ஸ்' தொழிற்சாலைக்கு அழைத்து சென்றோம்.  "அண்ணா  சூப்பர் சாக்லேட் எங்க? சீக்கிரம் தாங்க...!" என்று  கேட்க, உரிமையாளர் சுரேஷ் தொழிற்சாலையில் இருந்து ஆளுக்கு ஒரு மிட்டாய் எடுத்து கொடுத்தார். ஓ... இதுவா...இது கடலை மிட்டாய்தானே... இதையா சூப்பர் சாக்லேட் என்று சொன்னீங்க?" என்று சுட்டிகள் கேட்க, "இதை எப்படி தயார் பண்றாங்க, என்பதைப்பற்றி தான் சொல்லப் போறோம்..."  என்று சொல்லியபடியே, சுட்டிகளை அழைத்துக்கொண்டு துர்கா ஸ்வீட்ஸ் கடலை மிட்டாய் நிறுவனத்துக்குள் ஒரு என்ட்ரி கொடுத்தோம்.
கடலை மிட்டாய் உற்பத்தியாளர் சுரேஷ் எல்லாரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். " அண்ணா, இந்த கடலை எல்லாம் எங்கிருந்து வாங்குவீங்க?" -   மலை போல குவிக்கப்பட்டிருந்த கடலையை பார்த்துகேட்டனர் ஸ்ரீப்ரியாவும், கீர்த்தனாவும்.
"இதெல்லாம் சேலத்துல இருந்து வாங்குன கடலைங்க... கடலூர், வேதாரண்யம், திண்டுக்கல், ஈரோடு போன்ற ஊர்களில் விளைந்தாலும் சேலம் கடலை வித்தியாசமா இருக்கும்" என்றார் ஓரமாக கடலைகளை சூடுபடுத்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர்.
அவரிடம்,  "ஓ... இதுதான் வறுத்த கடலையா?" என்றார் பாலவர்ஷினி. "ஆமாம்,  இதுதான் கடலை மிட்டாய்க்கு உரிய பதம்" என்றபடியே அந்த ஊழியர் வறுத்த கடலையை ஒரு இயந்திரத்தின் மேல இருந்து கொட்ட, "ஒரு நிமிஷம்... இதை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே...?!" என்று யோசித்து, "மாவு அரைக்கும் போது நொய் அரிசி வருமே, அதை போலவே இருக்கு" என்று பதிலும் சொன்னான் தமிழ் வாணன். "கிட்டத்தட்ட அந்த மிஷின் மாதிரிதான்!' என்றார் அங்கே கடலைகளை கொட்டிக் கொண்டிருந்த சுரேஷ்.
அந்த மிஷினில் இருந்து தனியாக ஒரு குழாய் வழியாக கடலையின் மேல் தோலை தனி அறைக்கு கொண்டு போறாங்க. அந்த மேல்தோலை எரிபொருளாக பயன்படுத்துவாங்களாம். அப்புறம் அந்த மிஷனில் இருந்து வெளிவந்த கடலைகளை பார்த்தால், எல்லா கடலைகளும் உடைந்து இருந்தன. கடலை சேர்ந்திருக்கும் போது மேல் பக்கம் குமிழாக சேர்ந்திருக்கும் பகுதி கசந்திருக்கும் பகுதியாம். அதனால் அதை தனியாக எடுத்து கோழி, மீன் பண்ணை என கிலோ கணக்கில் கொடுத்து விடுகிறார்கள்.
அடுத்த பகுதி பாகு காய்ச்சுதல். கையால் உடையும் வெல்லம் கடலை மிட்டாய்க்கு நல்லா இருக்கும். அதை நல்ல உருக்கி,  கசடு எல்லாவற்றையும் வடிகட்டி அதை  135 டிகிரி செல்சியஸ்ல, மற்ற பொருட்களோட சேர்க்கணும். மற்ற பொருட்கள்ன்னா என்ன? என்று விஷ்ணு பிரியா கேட்க, 6௦% வெல்லம், 2௦% சர்க்கரை, 2௦% திரவ குளுக்கோஸ் என பதில் வர, அதற்குள் அடுத்த கேள்வி, கிஷோரிடமிருந்து. குளுக்கோஸ் எதுக்கு? என்ற அவர் கேள்விக்கு “கடலை மிட்டாய் மொறுமொறுப்புடன் இருக்கவும் ,உடல் திறனுக்காகவும் சேர்க்கப்படுகிறது" என பதில் வந்தது ஊழியர் மாரிமுத்துவிடம் இருந்து.
நாங்களும் கடலை மிட்டாய் செய்யலாமா ? என கோரஸாக கேட்க, சூடு தாங்குறவங்க மட்டும் வாங்க என்றதும், 'அவ்ளோ சூடு எப்படி கை தாங்கும்?' என சுட்டிகள் கொஞ்சம் பயப்பட,  அப்புறம் பாகு மிக்சிங்கோடா கடலை மிட்டாய் சேர்த்து கையால  பிசைந்து கட்டிங் மிஷினுக்குள் விட,  அது அழகாக துண்டு துண்டாக வெட்டி வெளி வந்தது. இவை விலைக்கு தகுந்தாற் போல பாக்கெட்டுகளில் போடப்படுகின்றன.
சதுரம், செவ்வகம், வட்டம் என பல வடிவங்களிலும் உருவாக்கப்படுகின்றது.  ஆனா, பாகோடு கடலை மிட்டாய் செய்றவங்க ரொம்ப தைரியசாலிதான் என வியந்து கிஷோரும், விஷ்ணு ப்ரியாவும் சொல்ல, 'எல்லாமே பழக்கம்தான்...!' என புன்னகைத்தார் கடலை மிட்டாய் எடுத்துக் கொடுத்த பாட்டி.

"சரி.. ஏன் கடலை மிட்டாய் இன்னும் ஆன்லைன்க்கு வரலை. மத்த சாக்லேட் மாதிரி இன்னும் மக்களிடம் போய் சேரலை ?" என்ற ஒரு சுட்டிக்கு மிக பொறுப்பாக பதில் சொன்னார் சுரேஷ்.  “என்னைக்குமே நம்ம நாட்டு உணவுக்கு நம்மிடம் பெரிய மதிப்பிருக்காது. இது நம்ம நாட்டு பொருள், உடம்புக்கும் நல்லது. ரத்த ஓட்டத்துக்கும் நல்லது.இன்னும் ரெண்டு மாசத்துல ஆன்லைன்ல பர்ச்சேஸ் பண்ணுற அளவுக்கு நாங்க கொண்டு வரப் போறோம். அப்புறம் டோர் டெலிவரி வரை செய்யப் போறோம்" என்றவரை புன்னகை தவழ பார்க்கிறார்கள் மற்ற சுட்டிகள்.
" ஏ...அப்பா...! ஒரு கடலை மிட்டாய் உருவாக இவ்ளோ நடைமுறையா ?" என்று மூக்கின் மேல் விரல் வைத்து வாழ்த்து சொல்லி விடைபெறும்போது, வந்திருந்த எல்லா குழந்தைகளுக்கும் கை நிறைய கடலை மிட்டாய் தந்து அனுப்பி வைத்தார் சுரேஷ்.

No comments:

Post a Comment