வயிறார உண்ண உணவில்லை. விதவிதமாக உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. ஆனாலும் ராஜா அவர்! ஏழையாகவே இறப்பதற்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்தவர்! வெறும் தலையணை, மண்பாத்திரங்களை மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்! யார் அவர்? அவர்தான் நபிகள் நாயகம்.
நபிகள் நாயகம் தமது வாழ்வை மனித இனத்துக்கு ஒரு முன்மாதிரியாக விட்டுச் சென்றவர்கள். பசிப்பிணி, துயரங்கள் இவற்றை எல்லாம் சுயமாக அனுபவித்தவர்கள்.
துயரங்களை அனுபவித்தவர்களால்தான் மற்றவரின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
நபிகளாரின் அன்புத் துணைவியர் கதீஜா நாச்சியார் மக்காவின் செல்வச் சீமாட்டி. வணிகம் நிமித்தமாக மக்காவிலிருந்து அயலகம் செல்லும் ஒட்டகங்கள் ஒரு நூறு என்றால் இந்த அம்மையாரின் ஒட்டகங்கள் ஏறக்குறைய எழுபது! இன்றைய சொல் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கோடீஸ்வரர். அத்தகைய செல்வச் சீமாட்டியின் துணைவரான நபி பெருமானார் தொடர்ந்து மூன்று நாட்கள்கூட வயிறார உண்டதில்லை. ஏழை-எளியோரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது நோன்பு நோற்பார்கள். ஷாபான் மாதத்திலிருந்து ரமலான் மாதம் வரை நோன்பைக் கடைப்பிடிப்பார்கள். பசிப்பிணியின் கொடுமையை உணர்ந்தவராய் ஏழைகளின் துன்பந்துயர் நீக்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திப்பார்கள்.
அரபு நாட்டின் முடிசூடாத மன்னராக இருந்த நபிகளாரின் பிராத்தனை என்ன தெரியுமா?
“இறைவா, என்னை ஏழையாக இருக்கச் செய்வாயாக! ஏழையாகவே மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளுடனேயே உயிர்க் கொடுத்து எழுப்புவாயாக!”
இக்வான் அமீர்
No comments:
Post a Comment