உலகில் எந்தத் துறையில் ஏற்படும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தவறுவதில்லை. இதற்கு அண்மைக்கால உதாரணம் மின்னணுக் கழிவு(E waste).
இன்றைக்குத் தொழிற்சாலைகள், வீடுகள், நிறுவனங்களில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் குவிந்து கிடக்கின்றன. டி.வி, கம்ப்யூட்டர், பிரிண்டர், மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மொபைல், ஏ.சி., ஜெராக்ஸ் இயந்திரம், ஆடியோ-வீடியோ கருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவை பழுதானால்..? பழைய பொருள் கடையிலோ, குப்பையிலோ எறிந்து விடுகிறோம். தூக்கியெறியப்படும் பழைய மின்னணுக் கருவிகள்தான் மின்னணு குப்பைகள்.
எவ்வளவு?
இந்தியாவில் பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை, பூனா, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்னணு குப்பைகளின் தலைநகராகத் திகழ்கின்றன என்கிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. பெங்களூருவில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது.
இந்திய அளவில் மின்னணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.
இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது.
மின்னணு குப்பைகளை மறு சுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பங்கள் உள்ளன. அதேநேரம், 10 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியவை ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்னணுக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதிகள் இருக்கின்றன.
சட்டங்கள், நடைமுறைகள்
மெல்லக் கொல்லும் விஷம் போன்ற மின்னணுக் குப்பைகளைப் பற்றி 2000ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உலக நாடுகள் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்த பிறகே மின்னணுக் குப்பைகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச மாநாடுகளின் தாக்கத்தால், வளர்ந்த நாடுகளில் இருந்து மின்னணுக் குப்பைகளை இறக்குமதி செய்ய சீனா, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தைவானில் எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் மின்னணுக் குப்பையைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யச் சட்ட நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பைகளைப் பாதுகாப்பாகக் கையாளப் போதுமான சட்டங்கள் இல்லை. இந்தியாவில் ஆபத்தான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்-2003) சட்டம் கொண்டுவரப்பட்டது. மத்தியச் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் 2011ல் புதிய விதிமுறைகளை அறிவித்தது. மின்னணுக் குப்பைகளுக்கான பொறுப்பையும் உற்பத்தியாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தது. ஆனால், இது எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறிதான்.
ஆபத்துகள்
வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பையில் உள்ள ஈயம், பாதரசம், தங்கம் முதலிய உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்காக அமிலம், ரசாயனங்களைப் பயன்படுத்திக் கரைக்கின்றனர். அல்லது நெருப்பிலிட்டு உருக்குகின்றனர். இவற்றில் இருந்து வெளியேறும் நச்சு வாயுகளும் நச்சுக் கழிவுகளும் காற்று, நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன. கிராமங்கள், சிறிய நகரங்களில் குடிசைத் தொழில் போல நடக்கும் இதுபோன்ற பணிகள் விவசாயத்துக்கு ஆதாரமான நிலம், நீர், கால்நடைகளைப் பாதிக்கின்றன. மேலும், இந்தப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் சுவாசப்பாதை, தோல், வாய், செரிமான உறுப்புகளில் பிரச்சினைகளும், நோய்களும் ஏற்படக்கூடும்.
இதுதவிர, ஒரு கம்ப்யூட்டரில் உள்ள நச்சுப் பொருட்களின் பட்டியலைப் பார்த்தாலே பயம் வரும். இப்போது பிரபலமாகியுள்ள ஃபிளாட் ஸ்கிரீன் மானிட்டரில் பாதரசம் உள்ளது. இது நரம்புமண்டலத்தையும் மூளையையும் பாதிக்கும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கக்கூடும். மேலும் இது நரம்பு மண்டலம், நுரையீரல், சிறுநீரகம், இதயத்தைப் பாதிக்கும்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் காரீயம், காட்மியம், நச்சுத் தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. நச்சு வாயுக்களை வெளியிடும் பி.வி.சி., கேபிள் இன்சுலேஷன் கம்ப்யூட்டரில் உள்ளது. ஒரு கம்ப்யூட்டரில் 20 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது. இவை புற்றுநோய், நரம்புமண்டலம், சுவாசக் கோளாறுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கக்கூடும்.
இந்த நச்சுப் பொருட்கள் எல்லாம் தவறான முறையில் கழிக்கப்படும் போது புற்றுநோய், அலர்ஜி, தோல் நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கண் நோய் போன்ற கணக்கற்ற பாதிப்புகள் ஏற்படும். இனப் பெருக்க, நரம்பு, ரத்த மண்டலங்களிலும் நாளமில்லா சுரப்பிகளிலும் பெரிய பாதிப்புகளை நீண்ட காலத்துக்கு ஏற்படுத்தும் ஆற்றல் மின்னணுக் குப்பைகளுக்கு உண்டு.
No comments:
Post a Comment