வீட்டின் வலுவான அடித்தளமாக அமையும் தரைமட்டம் கெட்டிப்படும் தன்மையை பொறுத்தே அஸ்திவாரம் உறுதி தன்மை பெறும். எவ்வளவு ஆழத்தில் அஸ்திவாரம் அமைத்தாலும் அதை இறுகச் செய்து கட்டிடத்தின் தாங்கு திறனுக்கு தூணாக தரைமட்டம் மாறுகிறது. அதற்கு தரைமட்ட சுவரின் உள்பகுதியில் கொட்டப்படும் மண் கலவையும் பங்கெடுக்கிறது.
பொதுவாக அஸ்திவாரத்துக்கு தோண்டிய மண் தான் தரைமட்ட தளத்தில் முதலில் நிரப்பப்படுகிறது. அந்த மண் பல இடங்களில் போதுமானதாக இருக்காது. அதனால் வேறு இடங்களில் இருந்து மண்ணை கொண்டு வந்து தரைத்தளத்தை நிரப்புவது அதிகமாக நடக்கிறது. அவ்வாறு தரைமட்டத்தை சமப்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.
* தரைமட்டத்தில் கொட்டப்படும் மண்ணை அப்படியே பயன்படுத்தி விடக்கூடாது. முக்கியமாக ஒரே இடத்தில் குவித்து விடக்கூடாது. காலியாக இருக்கும் இடம் முழுவதும் பரப்பி மண்ணை நன்றாக இறுக செய்ய வேண்டும். மண் எவ்வளவு தூரம் கீழே அழுத்தி இறுக வைக்கப்படுகிறதோ அதைப்பொறுத்தே தரைத்தளம் வலுப்பெறும்.
* கொட்டப்படும் மண் கெட்டித்தன்மை பெற தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டும். அப்போது மண் இறுகும்போது எந்த இடத்திலும் மேடு பள்ளம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மண் தேவைப்படும் இடத்தில் உடனே மணலை நிரப்பி வெற்றிடம் உருவாகாதவாறு இறுக வைக்க வேண்டும்.
* தரைமட்டத்தை நிரப்ப முடிந்தவரை மண் கலவையை பயன்படுத்த வேண்டும். கட்டிட கழிவுகளை கொட்டி காலி இடத்தை நிரப்புவதை தவிர்க்க வேண்டும். அந்த கட்டிட கழிவுகள் ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தால் அவை வெற்றிடத்தை உருவாக்கி விடும். அதனால் சில நாட்களில் தரைமட்டத்தின் உட்புறம் சமநிலையில் இருந்து ஏற்ற இறக்கமாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி விடும். முக்கியமாக அந்த வெற்றிடம் தரைமட்ட சுவரில் விரிசலை ஏற்படுத்த வழி வகுத்து விடும். அது ஒட்டுமொத்த கட்டிடத்தையும் பாதிப்புக்குள்ளாக வைத்து விடும்.
* தரை மட்டத்தை நிரப்ப கிரஷர் தூள், சரளை மண் கலவையை பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை அடுக்கு அடுக்காக கொட்டி தான் கெட்டிப்படுத்த வேண்டும். அவை தரைமட்டத்தின் உட்புறத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே சீரான விகிதத்தில் தான் நிரப்ப வேண்டும்.
* தவிர்க்க முடியாத பட்சத்தில் காங்கிரீட் கழிவுகளை (ரப்பீஸ்) பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை அப்படியே கொட்டி விடக்கூடாது. அவை ஒரே சீரான அளவுகளில் இருக்க வேண்டும். ரப்பீஸ் அளவுகள் மாறி, மாறி இருந்தால் அவற்றை ஒரே அளவுக்கு உடைத்து பிரித்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தரைத்தளம் இறுகும் தன்மை குறைய வாய்ப்பு இருக்கிறது.
* அதிலும் மிக முக்கியமாக ரப்பீஸ்கள் நீர் உறிஞ்சும் தன்மையுடன் இருக்கக்கூடாது. ஏனெனில் மழைக்காலங்களில் தரைத்தள மண்ணில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சி வெற்றிடத்தை ஏற்படுத்தி விடும். இதனால் தரைமட்டத்தின் உட்பகுதியின் இறுகும் தன்மை விடுபட்டு கட்டிடத்தின் உறுதி தன்மையை கேள்விக்குறியாக்கி விடும்.
No comments:
Post a Comment