2008 முதல் 2012 வரை ஏறுமுகத்திலே இருந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, 2013-ல் 19 ஆயிரம(8 கிராம்) ரூபாயைத் தொட்டுவிட்டு, தற்போது ரூ.22 ஆயிரத்துக்கு சற்று அதிகமாக வர்த்தகம் ஆகிறது. தங்கம் விலை இன்னும் குறையும் என வல்லுநர்கள் சொன்னாலும், தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தவே இல்லை. இந்தப் புத்தாண்டில் மக்களிடம் தங்கம் வாங்குவது எப்படி இருக்கிறது என்பதை அறிய பலருடன் பேசினோம். முதலில், ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனுடன் பேசினோம்.
''2013-ம் வருடத்தில் தங்கம் இந்திய அரசியலில் பெரும்பங்கு வகித்தது. அதாவது, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமானதற்கு தங்கம் இறக்குமதியும் ஒரு காரணம். இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிவடைந்ததுக்கு தங்கம் முக்கிய காரணம் என்றார்கள். ரூபாயின் மதிப்பு 68 ரூபாய்க்கு கீழே சென்றது. இதனால், மத்திய அரசு தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது. தங்கம் இறக்குமதி வரியை 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தியது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகிதத்தை மதிப்புக் கூட்டப்பட்ட தங்க நகைகளாக ஏற்றுமதி செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், வங்கிகள் தங்க நாணயங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தது.
இப்படி பல கட்டுப்பாடுகளை விதித்ததன் விளைவாக தங்கத்தின் இறக்குமதியானது வெகுவாக குறைந்தது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையாததற்கு காரணம், வரிவிதிப்புதான். இந்த வரியினால் இந்தியாவில் தங்கத்தின் தட்டுப்பாடு அதிகமானது. தங்கம் வாங்குவதற்கு வங்கிகள் கடன் தருவதைத் தவிர்த்து வந்தன. இதனால் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்ய ஆரம்பித்தன. பழைய தங்கத்தை அதிக விலை தந்து நகைக் கடைகள் வாங்கின.
இதனால் நகைக் கடைகள் ஓரளவுக்கு லாபமும் அடைந்தன. அதாவது, புதிய தங்கம் வாங்கும்போது வரி மட்டுமே 10 சதவிகிதம் செலுத்தவேண்டியிருக்கும். பழைய தங்கம் வாங்கும்போது இந்தச் சிக்கல் இல்லை.
தவிர, தங்கத்தைக் கடத்திகொண்டு வருவதும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட தங்கம் கடத்தல் அதிகரித்து, கடத்தல் தங்கத்தின் மதிப்பு ஏறக்குறைய 125 கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது'' என்றார்.
2014-ல் தங்கத்தின் விற்பனை எப்படி இருக்கும் என மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்டு டைமண்டு விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜே.சலானியிடம் கேட்டோம்.
''இந்த வருடம் தங்கத்தின் விற்பனையானது அதிகமாகவே இருக்கும். வருகிற 2014 மார்ச் வரை ஒருவிதமான மந்தநிலை நிலவும். அதன்பிறகு அது சரியாகும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவை வைத்து தங்கத்தின் விற்பனை இருக்கும். ஏனெனில், சில கட்சிகள் தங்கத்தின் மீதான வரிகளைக் குறைப்போம் என சொல்லியுள்ளன. வரியைக் குறைத்தால் தங்கத்தின் விலை குறையும். மேலும், மத்திய அரசாங்கம் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.
''தற்போது தங்க காசுகள் எந்த அளவுக்கு விற்பனை ஆகிறது?'' என அவரிடம் கேட்டோம். ''தங்கத்தை ஆபரணமாகத்தான் வாங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. தீபாவளிக்குப் பிறகு நகைக் கடைகள் காயின் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன. ஆனால், இதற்காக பெரிய அளவில் எந்தவிதமான விளம்பரமும் செய்யவில்லை. கேட்பவர்களுக்கு மட்டும்தான் தங்க காயின்களை விற்பனை செய்கிறோம்'' என்றார்.
2014-ல் சுலபமாக தங்கம் வாங்க வைப்பதற்காக நகைக் கடைகள் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா என பிரின்ஸ் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் பிரின்ஸன் ஜோஸிடம் கேட்டோம்.
''இன்றைக்கு பெரியது, சிறியது என அத்தனை கடைகளும் நகை சேமிப்பு திட்டம் வைத்துள்ளன. இதன்மூலமாக மாதாமாதம் தங்கத்தைச் சேமிக்கலாம். இதனால், நகைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு முதலீடு கிடைக்கிறது. இதன்மூலமாக முதலீட்டை அதிகரிக்க முடியும்.
மக்களும் ஒவ்வொரு வருடமும் தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பல புதிய திட்டங்களை வைத்துள்ளோம். பழைய நகைகளை அதிக பணம் தந்து வாங்குவதனாலும் பிசினஸ் அதிகரிக்கும்.
இன்றைய நிலையில் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை எந்தக் காரணத்தைக்கொண்டும் நிறுத்தப்போவதில்லை. மேலும், 2013-ல் தங்கத்தின் விலையானது ஒருநிலையில் வந்து நின்றுவிட்டது. இனிமேல், அதிகரிக்காது என்ற மனநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.
அதேபோல, தங்கத்தை முதலீட்டுக்காக வாங்க நினைப்பவர்கள் விலை குறைந்தால் மட்டும்தான் வாங்குகிறார்கள். திருமணத்துக்கு வாங்குபவர்கள் மட்டும்தான் எவ்வளவு விலை விற்றாலும் தங்கத்தை வாங்குகிறார்கள். மற்றபடி அனைவரும் எப்போது விலை குறையும் என்றே காத்திருக்கிறார்கள். தங்க நகைச் சீட்டுகளில் சேர்ந்து தங்கத்தை வாங்குவதை மக்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள்'' என்றார் அவர்.
வெள்ளி!
தங்கத்துக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்புவது வெள்ளியைத்தான். 2012-ல் வெள்ளி ஒரு கிலோ 78 ஆயிரத்தைத் தொட்டது. ரூ.1 லட்சம் வரை போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை குறைய ஆரம்பித்து, தற்போது ஒரு கிலோ வெள்ளியானது ரூ.45 ஆயிரத்துக்குமேல் விற்பனையாகிறது. வெள்ளி விலை எப்போதெல்லாம் நன்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் வாங்கிவிடுவதால், விலையை மீண்டும் உயர்த்திவிடுகிறார்கள். இதையும் நல்லதொரு முதலீடாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
விகடன்
nalla visayam arinthuvitoam
ReplyDelete