கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் ‘கேரளாவின் நெற்களஞ்சியம்’ மற்றும் ‘தானியக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அடர்ந்த வெப்ப மண்டல காடுகளும், மலைக் குன்றுகளும் சூழ அமைந்திருக்கும் பேரழகை நாட்பூராவும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு சுரம், கேரளாவின் மற்ற நகரங்களிலிருந்து வருபவர்களுக்கும், தமிழ்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கும் நுழைவாயிலாக திகழ்ந்து வருகிறது.
அதோடு கேரளாவின் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் பாலக்காடில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருவதால் தனித்துவமான கலாச்சாரத்தினை இந்த நகரம் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் பாலக்காடில் நீங்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கலவையில் மாறுபட்ட உணவு வகைகளை ருசிக்கலாம்.
பாலக்காடு மாவாட்டத்தின் தனிச் சிறப்புக்கு அதன் பாரம்பரிய கர்நாடக சங்கீதமும், கலாச்சார திருவிழாக்களுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த மாவட்டத்தில் பிறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் பாலக்காடு மணி ஐயர் ஆகிய இரண்டு கர்நாடக இசை மேதைகளால் பாலக்காடு மாவட்டம் இந்தியா முழுக்க உள்ள இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது.
பாலக்காடில் கோட்டைகள், கோயில்கள், அணைகள், வனவிலங்கு சரணாலயங்கள், அருவிகள், பூங்காக்கள் என்று பயணிகளுக்கு எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் காத்துக்கிடக்கின்றன.
இவற்றில் பாலக்காடு கோட்டையும், ஜெயின் கோயிலும் வரலாற்றுப் பிரியர்களை அதிகமாக ஈர்க்கும் இடங்கள். இவைதவிர மலம்புழா அணை மற்றும் தோட்டத்துடன் கூடிய கேளிக்கை பூங்கா புகழ்பெற்ற பிக்னிக் தலமாக விளங்கி வருகிறது.
பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு கோட்டை திப்புவின் கோட்டை என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1766-ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி மகாராஜாவால் கட்டப்பட்டது.
பாலக்காடு கோட்டையை பெரும்பாலும் மைசூர் ஆட்சியாளர்களால் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இதற்கு அருகில் கோட்ட மைதானம் என்று அழைக்கப்படும் கோட்டை மைதானம் விசாலமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மைதானத்தில்தான் திப்பு சுல்தானின் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அடைத்து வைக்கும் கோட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மைதானம் இன்று விளையாட்டுகள் மற்றும் பொருட்காட்சிகள் நடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை தவிர பாலக்காடு கோட்டைக்கு அருகில் உள்ள ஹனுமான் கோயில் மற்றும் இந்திய தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் திறந்த வெளி கலையரங்கம் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம்.
நெல்லியம்பதி மலைவாசஸ்தலம், சைலன்ட் வேலி தேசிய பூங்கா, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை இயற்கை ரசிகர்களுக்கும், காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடங்களாக இருப்பதுடன், மறக்க முடியாத விடுமுறை அனுபவமாகவும் இருக்கும்.
மேலும், காஞ்சிரப்புழா, தோணி அருவி, ஒட்டப்பாலம், கொல்லேன்கோடு அரண்மனை, தென்குருசி போன்ற இடங்களும் நீங்கள் பாலக்காடு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
பாலக்காடு நகரை ரயில் மற்றும் சாலை மூலமாக எளிதாக அடைந்து விடலாம். அதோடு இந்த நகரின் வெப்பநிலை கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் மிகவும் இதமானதாகவே இருக்கும்.
இந்த மாவட்டத்தின் பாரம்பரியமும், இயற்கை காட்சிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் பாலக்காடு மாவட்டத்தை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment