ஒரு நாள் முழுக்க இயற்கையை நேசிக்க கற்றுத்தரும் சுற்றுலாத் தலம் தான் தென்மலை. கூடவே பயணத்தின் இறுதியில் ரிலாக்ஸாக இசைப்பாடலுக்கு தகுந்தபடி நடனமாடும் நீருற்றையும் கண்டு ரசிக்க தென்மலையை விட்டால் வேறு இடம் கிடைக்காது.
தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் அருகில் தான் உள்ளது இந்த சுற்றுலாத் தலம். அதாவது கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. குற்றாலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவு தான். இந்தியாவின் முதன்முதலாக உருவாக்கப்பட்ட எக்கோ ரூரிசம் இது தான். மலைப்பகுதியான இங்கு தேன் மிகுதியாக கிடைப்பதால் தேன்மலை என்ற பெயர் முற்காலத்தில் இருந்ததாகவும், அது மருவி தென்மலையானதாகவும் தெரிவிக்கின்றனர்.
இயற்கையை பாதிக்காத வகையில் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரோப்வே. தொங்கு நடைபாலம். மான்கள் மறுவாழ்வு மையம், சூழ்நிலை கல்வி மையம், பொழுதுபோக்கு படகு குழாம் ஆகிய வசதிகள் இங்கு உள்ளதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
கல்லடை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கும் நடைபாலத்தில் நடப்பது ஒரு சுகமான அனுபவம். மனிதர்கள் மட்டுமல்லாது இங்கு குரங்களும் நடமாடிக்கொண்டிருக்கின்றன. லெஷர் ஜோன் என்ற பகுதியில் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு குழந்தைகள்விளையாடி மகிழலாம். அடர்ந்த காட்டுப்பகுதியில் படிக்கட்டுகள் அமைத்து பல்வேறு உருவங்களை அமைத்துள்ளார்கள். வித்தியாசமான உருவங்களை பார்க்கையில் அவை நம்மை உற்றுப்பார்ப்பது போலிருக்கிறது.
மரங்களை இணைத்தபடி 117 படிக்கட்டுகள் மரப்பலகையில் அமைத்துள்ளார்கள். மரப்படிக்கட்டுகளில் ஏறி மரத்தின் உச்சிக்கு சென்று இறங்கி வரலாம். அது ஒரு கல்லடை ஆற்றில் படகு சவாரி மேற்கொள்ளலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் செந்தூரணி சரணாலய விலங்குகளை படகிலிருந்தபடி ரசிக்கலாம்.
ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி ஒரு புறமிருந்து இன்னொரு புறம் செல்வதும், சைக்கிள் சவாரியும், மலையேறுவதும், டிரெக்கிங்கும் சாகச விரும்பிகளுக்கு தீனிபோடும். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரவு 7 மணியிலிருந்து 7.30 மணி வரை நடக்கும், இசைக்கேற்ப நடனமாடும் நீருற்று தான். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் காத்து கிடங்து இந்த நீருற்று நடனத்தை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
வந்தேமாதரம் என்ற பாடலுடன் தொடங்கும் நீருற்று நடனம் மலையாளம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்பாடல்களை கட்டி போடுகிறது. ரஜினி, விஜய் படப்பாடல்கள் தினந்தோறும் தவறாமல் இடம் பெறுமாம்.
இசை, நடன நீருற்றுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை. பராமரிப்பு பணிகளுக்காக இந்த விடுமுறையாம். போட்டிங் 65 ரூபாய் இசை நடன நீருற்றுக்கு 30 ரூபாய். அட்வெஞ்சர் ஜோனை சுற்றி பார்க்க 20 ரூபாய். லெஷர் ஜோன் 30 ரூபாய் என எல்லாவற்றுக்கும் தனித்தனி கட்டணம் காசு போனால் என்ன.. இயற்கையை ரசிப்பது தனி ஆனந்தம் தான்..
- திருவட்டாறு சிந்துகுமார்.
- Kumudam
- Kumudam
No comments:
Post a Comment