Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 27, 2015

மீன்கள் ஜாக்கிரதை!

உரம் போட்டு, ஊசிகள் போட்டு, கழிவுகள் கொட்டி..

'மீன் குழம்பு’ என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு! ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா? இன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை? அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன? ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு பக்கத்தை இங்கே அலசலாம்.
மீன் உணவை, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உள்நாட்டு மீன்கள். இன்னொன்று, கடல் மீன்கள். உள்நாட்டு மீன்களைப் பொறுத்தவரை ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் தானாக வளர்பவை ஒரு வகை. குளம் வெட்டி பண்ணை அமைத்து, தொழில் முறையில் வளர்க்கப்படும் மீன்கள் இன்னொரு வகை. அதிகரித்துவரும் மீன் தேவையின் கணிசமான அளவை உள்நாட்டு மீன்கள் பூர்த்தி செய்துவரும் நிலையில், இவற்றின் நேர்-எதிர் அம்சங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் குளத்து மீன் என்றால், அது ஊர்ப் பொதுக் குளத்தில் வளர்வதுதான். ஆண்டுக்கு ஒருமுறை குளம் ஏலம் விடப்படும். மீன் பிடிக்கும் நாள் அன்று தண்டோரா போடப்பட்டு ஊரே மீன் வாங்கும்.
2000-ம் ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியது. ஊர்ப் பொதுக் குளத்தை ஏலம் எடுத்தவர்கள், அதில் கெமிக்கல் உரங்களையும், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகளையும் அள்ளிக்கொட்டி அதிவேகமாக மீன்களை வளர்த்து 'இருபோக’ வருமானம் பார்த்தார்கள். வரும்படி வருவது தெரிந்ததும் குளம் ஏலத்தில் போட்டி உருவானது. 5,000 ரூபாய்க்கு ஏலம் போன குளம், 20 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. கிராமத்துக் குளத்தின் ஏலம் இப்போது லட்சத்தைத் தொட்டுவிட்டது என்பதுடன், அது அரசியல் அதிகாரத்துடனும் இணைந்துவிட்டது.
ஒரு கிராமத்தில், அதிகபட்சம் நான்கைந்து குளங்கள்தான் இருக்கும். அதை நான்கு பேர்தான் ஏலம் எடுக்க முடியும். ஏலம் எடுத்து மீன் வளர்த்து, அந்த நான்கு பேர் மட்டுமே லாபம் பார்க்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? 'அப்படியான லாபத்தைக் குவிக்க என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவர்கள், தங்களின் சொந்த விவசாய நிலங்களை மீன் குளங்களாக மாற்றினார்கள்.
'போட்ட காசு கைக்கு வருமா?’ என்ற நிச்சயம் இல் லாத விவசாய நிலங்களைக் கட்டிகொண்டு அழுவதைவிட, உத்தரவாத லாபம் தரும் மீன் குளமே மேல் என்று எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாக... கிராமப்புறங்களில் எக்கச்சக்கக் குளங்கள் பெருகின. அரசும், உள்நாட்டு மீன் வளர்ப்பு என இதற்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. மானியத்தை வாங்கி முறைப்படி மீன் வளர்த்து, விற்பனை செய்து லாபம் பார்த்தால் பிரச்னை எதுவும் இல்லை. மாறாக, கெமிக்கல் உரங்களை அள்ளிக்கொட்டி விவசாயம் செய்வதுபோலவே மீன்களையும் வளர்க்கத் தொடங்கிவிட்டனர். இயற்கையான முறையில் குளங்களில் வளரும் நாட்டு மீன்களைவிட, அதிவேகமாக வளரும் இந்த வளர்ப்பு மீன்கள் இவர்களின் லாபத்தை அதிகப்படுத்தின. இந்த பயங்கரத்தின் உண்மையை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் நேரடியாக உணர்வார்கள்.
''ஊர்ப் பொதுக் குளங்களில் இயற்கையாகவே நாட்டு மீன் இனங்கள் இருக்கும். குளம் வற்றினாலும் அவற்றின் முட்டைகள் குளத்திலேயே படிந்திருக்கும். தண்ணீர் வந்ததும் மறுபடியும் குஞ்சுகள் உற்பத்தியாகும். இது, இதுவரை நடந்த இயற்கையான நடைமுறை.
இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், குளம் காய்ந்து இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து இந்த நாட்டு மீன்களின் முட்டைகளை அழித்துவிடுகின்றனர். அவற்றை விட்டுவைத்தால், வளர்ப்பு மீன்களுக்குப் போடும் தீவனத்தைத் தின்றுவிடும்; அதனால் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். மேலும், வளர்ப்பு மீன்களை ஒப்பிடும்போது, நாட்டு ரக மீன்கள் அளவில் சிறியவை. மெதுவாக வளரக்கூடியவை. இதனால் அவற்றை கருவிலேயே கொன்றுவிட்டு வளர்ப்பு மீன்களை உற்பத்தி செய்கிறார்கள்'' என்று அதிரவைக்கிறார் நக்கீரன். இவர் நன்னிலம் பகுதியில் வசிக்கும் சூழலியல் நிபுணர்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ''மீன்கள் வேகமாக வளர்வதற்கு செயற்கைத் தீவனங்களை குளங்களில் கொட்டுகிறார்கள். அதில் வழக்கமான மீன் தீவனங்களும் உண்டு. அத்துடன் பூச்சிக் கொல்லிகள், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்கள், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகள் போன்றவற்றையும் கொட்டுகின்றனர். இது பொய் இல்லை. கிராமங்களுக்குச் சென்றால், இந்தக் காட்சியை நேரில் காணலாம். இந்த நச்சுகள் கரைந்து, அமில நிலையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் சுவாசித்தும்தான் அந்த மீன்கள் வளர்கின்றன. இப்படி உரம் போட்டு வளர்க்கப்படும் மீன்கள், கொஞ்சம்கூட அழுக்கு இல்லாமல், இயந்திரத்தில் வார்த்து எடுக்கப்பட்ட செதில்களைப் போல நேர்த்தியாக இருக்கும். பளபளப்புடன் மின்னும். இன்று உள்நாட்டுக்குள் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலானவை இத்தகையவையே!
முன்பெல்லாம் தஞ்சாவூர் மாவட்டக் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீன்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். குளத்து மீனுக்கே உரிய மண்வாசனையை அதில் உணர முடியும். ஆனால், இந்த வளர்ப்புக் கெண்டைகளை சாப்பிட்டால் யூரியா வாசனைதான் வருகிறது. எந்தச் சுவையும் இல்லாமல் சக்கையாக இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து மீன் சாப்பிடுபவர்கள் இந்தச் சுவை வேறுபாட்டைத் துல்லியமாக உணர்வர். மீன் உணவின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் சத்துகளும் இந்த மீன்களில் கிடைக்காது. இவற்றால் உடல் ஆரோக்கியம் சீர்குலையும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே, வளர்ப்பு மீன்கள் குறித்து உடனடியாக நாம் விழிப்பு உணர்வு அடைய வேண்டும். உள்நாட்டு மீன் வளர்ப்பை முறைப்படுத்த வேண்டும்!'' என்கிறார் நக்கீரன்.
இத்தகைய மீன் குளங்கள், பெரும்பாலும் வயல்வெளிகளுக்கு இடையிலேயே அமைந்துள்ளன. சுற்றிலும் நெல் விவசாயம். நடுவே மீன் விவசாயம். இதனால் நெற்பயிர்களுக்கு அடிக்கப்படும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் குளத்து நீரில் கலப்பது கண்கூடு. இத்தகைய மீன் பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படுவது கெண்டை மீன்களே. அதிகம் எடை நிற்கும் என்பதாலும், விறுவிறுவென வளரும் என்பதாலும், மக்கள் அதிகம் இந்த மீனை விரும்புவதாலும் இந்த மீனைத் தேர்வு செய்கின்றனர்.
வேறு சில இடங்களில் விறால் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடல் மீனில் வஞ்சிரத்துக்கு உள்ள மதிப்பு, நாட்டு மீனில் விறாலுக்கு உண்டு. ஒரு கிலோ 400 ரூபாயைத் தாண்டி விலைபோகக்கூடிய மீன் இது. இவை வளர்க்கப்படும் குளங்களில் இவற்றுக்கு உணவாக 'ஜிலேப்பி’ மீனும் வளர்க்கப்படுவது வாடிக்கை. இப்போது விறால் மீனின் துரிதமான வளர்ச்சிக்காக, அழுகிய முட்டைகள், கோழி இறைச்சியின் கழிவுகள் ஆகியவையும் கொட்டுகின்றனர்.
இப்படி கண்டதையும் கொட்டி மீன்களை வளர்ப்பதால் அவை நச்சுத்தன்மையுடன் வளர்வது ஒரு பக்கம் இருக்க... நமது நாட்டு ரக மீன்கள் அடியோடு ஒழித்துக்கட்டப்படுகின்றன. சாணிக்கெண்டை, உழுவை, குறவை, அயிரை, கெளுத்தி, பனையேறிக் கெண்டை போன்ற நாட்டு மீன் வகைகள் இப்போது அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன. தவளைகள், நத்தைகள், வயல் நண்டுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு அரணாக இருந்த பல உயிரினங்களை, இந்த கெமிக்கல் கழிவுகள் வேகமாக அழித்துவருகின்றன. தவளையின் அழிவு, பல்லுயிர்ச் சூழலில் பெரும் விளைவுகளை உருவாக்கக்கூடியது என்று சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், வளர்ப்பு மீன்களுக்கு வைக்கப்படும் நச்சு உணவின் விளைவாக குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது. அதில் குளித்தால் உடம்பில் கடும் அரிப்பு ஏற்பட்டு, தோல் நோய்கள் வருகின்றன.
கோயம்புத்தூரில் உள்ள 'சலீம் அலி சென்டர் ஃபார் ஆர்னித்தியாலஜி’ சார்பில் கேராளாவில் 150 இடங்களில் மீன் குளங்களில் சோதனை செய்யப்பட்டது. அனைத்துச் சோதனை முடிவுகளும், குளங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தின.
மதுரை மருத்துவர் சௌந்தரபாண்டியன் சொல்லும் இன்னொரு தகவல் அதிரவைக்கிறது. ''பிராய்லர் கோழிகளை குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடையவைப்பது போல, மீன்களையும் வளரவைக்க 'குரோத் ஹார்மோன்’ உள்ள தீவனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மீன்கள் அதிவேகமாக வளர்கின்றன. மேலும், பிராய்லர் கோழிக் கழிவுகளைத் தீவனமாக கொடுத்து வளர்க்கும்போது, அந்தக் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹார்மோன்களின் எச்சமும் மீன்களில் கலக்கிறது. இத்தகைய 'குரோத் ஹார்மோன்’ உள்ள மீன்களை தொடர்ந்து சாப்பிடும்போது பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அளவுக்குஅதிகமாக மாற வாய்ப்பு உள்ளது. 15 வயது பெண்ணுக்கு இருக்க வேண்டிய உடல் வளர்ச்சி, 10 வயதுப் பெண்ணுக்கு வந்துவிடும். பெண் குழந்தைகள் குறைந்த வயதிலேயே பூப்பெய்துகின்றனர்'' என்கிறார் இவர்.
பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதைப் போல சில இடங்களில் சினையுற்ற மீன்களுக்கும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். வயிற்றில் இருக்கும் மீன் குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், கொழுகொழுவென வளரவும் தூண்டும், அந்த ஹார்மோன் ஊசி.
'நாட்டு மீன்களில்தானே இவ்வளவு பிரச்னை... கடல் மீன்களாவது பரவாயில்லையா?’ என்று கேட்டால், ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்று சொல்லலாம். எனினும் கடல் மீன்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்ட பிறகுதான் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக, நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில், கடலோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அணுமின் நிலையம் தொடங்கி, கெமிக்கல் தொழிற்சாலைகள் வரை பல உள்ளன. இவற்றின் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
''கடலோரப் பகுதிகளில் வளரும் கானாங்கெளுத்தி, சுழுவை, வேலா போன்ற மீன் இனங்களில் 'டி.டி.டி, எண்டோசல்பான்’ போன்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. 2007-2008ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகளில் ஆய்வுசெய்யப்பட்டது. அதில் அலையாத்திக் காடுகளின் இலைகள், பவளப் பூண்டுகள், கடல் பாசிகள் போன்றவற்றில் மெர்க்குரி, காட்மியம் ஆகியவற்றின் நஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது'' என்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.
நமது மீன்வளத்தின் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கிவிட்டது!

கரன்சி கடல்!
தமிழகம் முழுக்க 608 கடலோரக் கிராமங்களில், 8.11 லட்சம் மீனவர்கள் (2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், 3.75 லட்சம் ஹெக்டேரில் உள்நாட்டு மீன் இனங்களும், உவர்நீர் மீன் இனங்களும் வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு மீனவர்களின் மக்கள்தொகை 2.25 லட்சம். 2012-2013ம் ஆண்டுகளில் 1.85 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
 2010-2011ம் ஆண்டுக்கு மீன்வளத் துறைக்கு 193.32 கோடி ரூபாயும், 2013-2014ம் ஆண்டுக்கு 467.44 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
ஆதாரம்: தமிழக அரசின் மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-2014.

இயற்கை முறையிலும் மீன் வளர்க்கலாம்!
சாயன உரங்களையும், உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும் தீவனங்களையும் தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் மீன்களை வளர்க்க முடியுமா? ''நிச்சயம் முடியும்'' என்கிறார் மயிலாடுதுறை, ஆனந்த குடியைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை.
''நோய் தொற்றுக்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு பதிலாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்தினாலே நோய்கள் மீன்களை அண்டாது. மீன்களின் உணவான நுண்ணுயிர்கள் மற்றும் சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்குப் பசுஞ்சாணமே போதுமானது. மேலும், கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, வாழை இலைகள், வேலிகளில் மண்டிக்கிடக்கும் கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்களும், அசோலா பாசியும் கொடுத்தாலே... மீன்கள் ஜம்மென்று வளர்வதுடன், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்'' என்கிறார். இவரைப் போலவே இயற்கை முறையில் மீன் வளர்க்கும் ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

நாட்டு மீன்.. கடல் மீன்.. எது நல்லது?
பொதுவாக, 'நாட்டுவகை மீன்களைவிட கடல் மீன்களே சத்து நிறைந்தவை’ என்கிறார்கள் நிபுணர்கள். ''ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் 'ஒமேகா-3’ என்ற புரதச் சத்து அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்றுக் குறைவு. ஆற்று மீன்களிலும் வளர்ப்பு மீன்களிலும் இது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆழ்கடல் மீன்களைத் தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவது இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன. வெளிநாட்டினர், கடல் மீன்களை மட்டும் இறக்குமதி செய்வதும் இதனால்தான். ஒரு மனிதன் தனக்குத் தேவையான புரதச் சத்துகளைப் பெறுவதற்கு ஆண்டுக்கு 15 கிலோ மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குக் கிடைப்பதோ ஆண்டுக்கு 7.5 கிலோ மட்டும்தான். நீண்ட கடற்பகுதியைக் கொண்ட இந்தியாவில் தாராளமான ஆழ்கடல் மீன்வளம் உள்ளது. ஆனால், அவை வெளிநாட்டு ஆலைக் கப்பல்கள் மூலமாகப் பிடிக்கப்பட்டு கடலில் இருந்தவாறே ஏற்றுமதி செய்யப்படுகின்றன'' என்கிறார் கடல்வள அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின்.

No comments:

Post a Comment