Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 23, 2015

`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. 

இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. 

இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த சின்னத் தீவு.

மர்மத் தீவு 

இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், இவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது குறித்து யாருக்குமே தெரியாது. இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை. பெரும் மர்மமான முறையில் இந்தத் தீவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கடைசிக் கற்கால மனிதர்கள் 

இந்தத் தீவில் வசிப்பவர்கள், கடைசிக் கற்காலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர். இவர்களை சென்டினலிஸ் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பேசும் பாஷை, இவர்களது வாழ்க்கை முறை என எதுவுமே யாருக்கும் தெரியாது.

60,000 ஆண்டுகளாக 

இந்தத் தீவில் மனிதர்கள் கடந்த 60,000 வருடங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அடர்ந்த வனங்கள் நிறைந்த தீவாகும் இது. இங்கு வேட்டைதான் முக்கியத் தொழிலாக இருக்கும் என்று தெரிகிறது.

நாகரீகத்தின் காலடி படாத இடம் 

பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத ஒரே இடம் இதுதான் என்று கூறுகிறார்கள். வெளியுலகவாசிகளை இங்குள்ள மக்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. யாரேனும் வந்தால் இவர்களின் ஈட்டி, வில் அம்புக்கு இரையாக வேண்டியதுதான்.

சிறையிலிருந்து தப்பி இங்கு போய் இறந்த கைதி 
கடந்த 1896ம் ஆண்டு வெள்ளையர் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, அங்கிருந்து தப்பி இந்தத் தீவுக்குப் போயுள்ளார். ஆனால் அவரது கெட்ட நேரம் இந்தத் தீவு வாசிகளிடம் சிக்கி உயிரிழந்தார். அடுத்த நாள் இவரது உடல் அம்புகள் தாக்கியும், கழுத்து அறுபட்டும் பிணமாகக் கிடந்தது.

தப்பிப் பிழைத்த கப்பல் 
1981ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிரிம்ரோஸ் என்ற கப்பல் இந்தத் தீவை ஒட்டியுள்ள பவளப் பாறையில் கரை தட்டி நின்று விட்டது. கப்பலில் நிறைய மாலுமிகள் ஊழியர்கள் இருந்தனர். கப்பலைப் பார்த்த தீவுவாசிகள் வில் அம்புடன் படை திரட்டி கப்பலைத் தாக்க கிளம்பி வந்தனர். கடற்கரையில் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கேப்டன், உதவி கோரி ரேடியோ மூலம் தகவல் அனுப்பியும் கிடைக்கவில்லை. நல்லவேளையாக அப்போது வீசிய பெரும் அலையில் கப்பல் தானாகவே நகரத் தொடங்கியது. இதனால் அனைவரும் உயிர் பிழைத்தனர்.

யாரும் போகத் தடை 
இந்தத் தீவு மக்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாலும், வெளியுலக நாகரீகம் தங்களை அண்ட விடாமல் கவனமாக இருப்பதாலும் இவர்களை தொல்லை தராமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டு விட இந்திய அரசு முடிவு செய்தது. அந்தமான் நிர்வாகமும் அதே முடிவுக்கு வந்தது. இதனால் இந்தத் தீவுக்கு செல்வது சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மீறிப் போனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

தீவு மக்களைக் காப்பாற்ற வேண்டும் 
இதற்கிடையே, இந்தத் தீவில் வசிக்கும் மக்களையும், அவர்களது வாழ்வாதாரம், வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கும் அதே வேளையில் அவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

இவர்களுக்கு தொற்று நோய் ஏதாவது பரவி விட்டால் அவ்வளவுதான் மொத்தமாக அழிந்து போய் விடும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில், வெளியுலக மக்களை விட இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக, நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சுனாமிக்கே தப்பியவர்கள் 

கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலுக்குப் பின்னர் சென்டினல் தீவு மக்களின் கதியை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது. அப்போது இந்தத் தீவு மட்டும் பத்திரமாக, பாதிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீவும், அதில் உள்ள மக்களும் தப்பினர்.

கற்களை வீசித் தாக்கினர் 
இந்திய ஹெலிகாப்டர் தீவை வட்டமடித்து ஆய்வு மேற்கொண்டபோது கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இந்திய ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டினர்.

2 மீனவர்கள் பலி 

கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இப்பகுதிக்கு வந்த 2 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தீவு மக்களிடம் சிக்கி ஈட்டியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படை முயன்றது. ஆனால் வில் அம்புத் தாக்குதல் பலமாக இருந்ததால் இந்தியப் படையினரால் கரையைக் கூட நெருங்க முடியவில்லை.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு

இந்தத் தீவு மக்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக வெளியுலக மக்களை எதிர்க்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தீவு இதுவரை யாரிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று. இங்குள்ள மக்கள் வசம்தான் இந்தத் தீவு இதுவரை இருந்து வந்துள்ளது. எனவே வெளியுலக தாக்கங்கள் இந்த மக்களிடம் சுத்தமாக இல்லை.

கலாச்சாரத்தைக் காக்க 
இதன் காரணமாக இந்தத் தீவுக்கு யாரேனும் வந்தால் அவர்களை எதிரியாக மட்டுமே இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். எனவேதான் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள், கொல்கிறார்கள். மேலும் வெளியுலக மக்களால் தங்களது கலாச்சாரம், இனம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும், அதைக் காக்கும் வகையிலுமே இவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

எத்தனை பேர் உள்ளனர் 
இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை. 1930களில் 30 பேர் வரை இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 400 பேர் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாகரீகம் அண்டாத வரை நல்லதுதான் 
வெளியுலக நாகரீகம் இந்தத் தீவை தீண்டாமல் இருப்பதால்தான் இந்த மக்கள் இவ்வளவு காலமாக இங்கு தாக்குப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதுவே தொடரட்டும் என்று இந்திய அரசும் விட்டு விட்டது. இருப்பினும் இந்த பூர்வகுடி மக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும், கற்கால மனிதர்களின் கடைசி சந்ததியான இந்த மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறைக் குரலும் கேட்டபடியே உள்ளது.
நன்றி:rahmanfayed.blogspot

No comments:

Post a Comment