Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, July 19, 2015

தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை!

காலிக்குடங்கள்... காத்திருப்பு... தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை!

மெட்ரோ சென்னையில் தண்ணீர் பற்றாக் குறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆங்காங்கே மக்கள் காலிக் குடங்களுடன் சாலைகளில் பயணிப்பதும் காத்திருப்பதும், நெடுநேரமாகி வரும் தண்ணீர் லாரிகளை மொய்ப்பதும் அன்றாட அவலமாகியிருக்கிறது .
அதிலும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தரமணி, காசிமேடு, குரோம்பேட்டை   உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் வயிற்றுப் போக்கு பாதிப்பால் பொதுமக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமையும்  நிகழ்ந்து வருகிறது.

ஆனால் இந்த பிரச்னை குறித்தும் அதைத் தீர்ப்பது குறித்தும் மாநகராட்சி சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகளில் விநியோகம்   செய்யப்படும் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் கலங்கலாக இருப்பதும்,சாக்கடை வாடையுடன் வழங்கப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது என்பது மக்களின் பகீர் குற்றச்சாட்டாக இருக்கிறது.
தேனாம்பேட்டை மண்டலத்தில், குடிநீர் வாரியம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர்,சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் கலந்த நிலையில் வழங்கப்படுகிறது. இதனாலேயே இந்த மண்டலத்திற்கு உட்பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மைலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கால்
அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரவி வரும் வயிற்றுப்போக்கு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில்," குடிநீரின் தரம் நாள்தோறும் பரிசோதிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக வழங்கப்படும் குடிநீரில் தரம் இல்லை என்று வந்த புகார்களையடுத்து, குடிநீர் தினசரி பரிசோதிக்கப்படுகிறது.பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்.குடிநீர் விநியோகம் சீரானதும் பிரச்னை இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் நிலைமை இன்னும் சீராகவில்லை,கழிவுநீர் கலந்து வரும் தண்ணீர் விநியோகமே தொடர்கிறது என்பது ராயப் பேட்டை மக்களின் புகாராகவே இருக்கிறது.
இதே போல சென்னை தரமணி பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் இல்லை என்றும், வண்டல் மண் கலந்த தண்ணீர் விநியோகமே நீடிக்கிறது என்றும் புகார் எழுந்துள்ளது. தரமணி, ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு, கானகம், களிக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு பள்ளிப்பட்டு பகுதியில் மாநகராட்சியின் சார்பில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. காலையில் இந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே பள்ளிப்பட்டு, கானகம், களிக்குன்றம் பகுதிகளில் வாரம் ஒருமுறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து அன்றாடத் தேவைகளுக்காக பணம் கொடுத்து லாரிகளில்  தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து களிக்குன்றம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறுகையில், " நாள்தோறும் விநியோகிக்கப்படும் குடிநீர் ஒருமாத காலமாக சரிவர விநியோகிக்கப்படுவதில்லை.இதனால் வெளியில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஒரு லாரி தண்ணீர் ரூ.700 முதல் ரூ.800 வரையில் விற்கப் படுகிறது.  அதுவும் 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டும்தான் வருகிறது. இந்த நிலையே தொடர்ந்தால் எங்கள் நிலைமை மிகவும் திண்டாட்டம்தான்.அதனால் அரசு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவேண்டும்" என்றார்.            
இது ஒருபுறம் இருக்க, கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சென்னை மாநகரம் எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணிநேரம் தெருக்களில் காத்துக் கிடந்தனர். பல இடங்களில் சாலை மறியலும் போராட்டங்களும் அப்போது அன்றாட செய்திகளாக இருந்தன. அதே நிலை இன்னும் சிலவாரங்களில் மீண்டும் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்படும்  என்று கூறப்படுகிறது.
ஏனெனில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த் தேக்கம், சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி ஆகியவை கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. அதிலும் போரூர் ஏரி நிலை பரிதாபம்தான். அதில் தண்ணீர் வறண்ட நிலையில், பாதி பகுதியைத் தனியாருக்கு வழங்கிட அரசு முடிவு செய்து, மண் கொட்டி ஏரியை மூட பணிகள் மேற்கொண்டது. விவரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் நடத்திய தொடர் போரட்டத்தால் பணிகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இப்போதைக்கு அந்த ஏரி தப்பித்துள்ளது.
சென்னையைச் சுற்றியிருக்கும் பூந்தமல்லி, திருப்போரூர், பஞ்செட்டி மற்றும் ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகிய பகுதிகளில் இருந்து விவசாய கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை நகருக்குள் விநியோகம் நடந்து வருகிறது. 70 லட்சம் பேர் கொண்ட சென்னை மாநகருக்கு நாள்தோறும் 1,000 மில்லியன் நீர் மட்டுமே குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மூலம் 100 மில்லியன் லிட்டரும், வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டரும், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலிருந்து கிணறுகள் மூலம் 70 மில்லியன் லிட்டரும் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு சென்னை மக்களின் தேவை தீர்க்கப்படுகிறது.மேலும் அருகில் உள்ள சோழவரம்,  பூண்டி உள்ளிட்ட நீர்தேக்கமும் சென்னையின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரபாக்கம் நீர்த் தேக்கங்கள் கடந்த 16 ஆம் தேதி நிலவரப்படி, 1.02 டி.எம்.சி. அளவு தண்ணீரையே இருப்பாக கொண்டுள்ளன. ஆனால் இவற்றின் மொத்தக் கொள்ளளவு 11.05 டி.எம்.சி. தண்ணீராகும். இதில் 9 சதவீத அளவு நீர்தான் தற்போது கையிருப்பாக உள்ளது. இது   வரவிருக்கும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை கண்முன் நிறுத்துகிறது.
இந்த ஆண்டு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழையும் போதிய அளவிற்குப் பெய்யவில்லை. சராசரியாக ஆண்டொன்றுக்கு 140 செ.மீ. மழை சென்னையில் பெய்யவேண்டும். அப்போதுதான் மக்கள் நெருக்கடி மிகுந்த சென்னை மாநகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது. ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மழை போதிய அளவிற்கு பெய்யாமல் வானம் பொய்த்து விட்டது. இந்த ஆண்டின் 6 மாத கால மழையளவாக 8 செ.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது மழை அளவு.
  
நிலைமை இவ்வளவு சீரியசாக இருக்க, குடிநீர் வாரியத்தில் வருணபகவானுக்கு யாகங்களும்,  பூஜைகளும் செய்யப்படுகின்றன. யாகமும், பூஜையும் மழையை வருவிக்கும் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்தான் என்றபோதிலும் அரசு எந்திரம் பூஜை செய்யவா இருக்கிறது என்பது பொதுமக்களின் ஆதங்கமாக இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொலைநோக்கு இல்லாத குடிநீர்த் திட்டங்களால் ஆண்டுதோறும் இந்த மாதங்களில் பொதுமக்களைக் குடிநீருக்காக தவிக்க வைக்கிறது அரசு.
எனவே எதிர்நோக்கி உள்ள கடுமையான குடிநீர் பஞ்சத்தை தடுக்க அரசு முனைப்போடு செயல்படவேண்டிய நேரமிது.    
-  தேவராஜன்
                             

No comments:

Post a Comment