ஒரு ஏக்கர்... 90 நாட்கள்... ரூ.90 ஆயிரம்..!
ஒரு காலைவேளையில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த சேகரைச் சந்தித்தோம். ''நான் ஒண்ணரை வயசு குழந்தையா இருந்தப்பவே அப்பா இறந்துட்டார். அம்மாதான், வெண்டைக்காய், கத்திரிக்காய்னு விவசாயம் பண்ணி, என்னை வளர்த்தாங்க. தினமும், பள்ளிக்கூடம் போகும்போது காய்கறி மூட்டையைக் கொண்டு போய் மார்க்கெட்ல போட்டுட்டுப் போவேன். இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில, எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. அதனால, அம்மாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். அரை ஏக்கர்ல கத்திரி, வெண்டை போடுவோம். மூணு ஏக்கர்ல நெல், மணிலா போடுவோம். அதுல எல்லாம் லாபம் குறைவாதான் இருந்துச்சு. அதனால, நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிர்களைத் தேட ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த யோசனையில வெள்ளரி, பீட்ரூட், பீன்ஸ், கேரட்னு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கேரட் நம்ம சூழ்நிலைக்குச் சரியா வரல. மத்த பயிர்கள்ல நல்ல மகசூல் கிடைச்சாலும், விலை கிடைக்காம நஷ்டமாகி, பழைய விவசாயத்துக்கே மாறிட்டேன்' என்ற சேகர் தொடர்ந்தார்.
காசி. வேம்பையன்
படங்கள்: கா. முரளி
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்...
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்''
கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இவை. இது விவசாயத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கும் விதமாக... புதுப்புது விஷயங்களைத் தேடி அலைந்து தெரிந்துகொண்டு, 'ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்பு மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், சு. கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர்.
லாபத்தைக் கூட்டிய உழவர் சந்தை!
''தமிழ்நாட்டில ரெண்டாவது உழவர் சந்தை, திருவண்ணாமலை உழவர் சந்தைதான். இங்க எனக்கு காய்கறிகளை விற்பனை செய்றதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதனால, பாகல், புடலை, பீர்க்கன்னு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கமிஷன் கடைகள்ல கிடைக்கிற விலையைவிட ஆறு, ஏழு ரூபாய் அதிகமாவே கிடைச்சுது. நல்ல லாபம் கிடைக்கவும், தொடர்ச்சியா காய்கறிகளை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
சின்ன வயசுல இருந்தே தொடர்ந்து 'ஆனந்த விகடன்’ படிக்கிறேன். இதன் மூலமா 'பசுமை விகடன்’ பத்தி தெரிஞ்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன். பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டது இல்லாம, நிறைய பேரோட அறிமுகமும் கிடைச்சுது. இப்படித்தான், கேத்தனூர் பழனிச்சாமி ஐயா அறிமுகமானார். அவர்கிட்ட இயற்கை விவசாயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாலு வருஷமா பந்தல் காய்கறிகளை இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றேன். மூணு வருஷத்துக்கு முன்ன 2 ஏக்கர்ல வெள்ளரி சாகுபடி செஞ்சேன். அதை, பெங்களூரு, கோயம்பேடுனு அனுப்பினேன். அதுக்கப்பறம் கோயம்பேடு மார்க்கெட்ல தொடர்பு கிடைச்சுது. அங்கதான், பெங்களூர்ல இருந்து விற்பனைக்கு வந்த இனிப்பு மக்காச்சோளத்தைப் பார்த்தேன். அதைப் பத்தி விசாரிச்சு, பெங்களூர்ல இருந்து விதை வாங்கி 50 சென்ட்ல போட்டதுல,3 டன் மகசூல் கிடைச்சுது. உழவர் சந்தையிலயே விற்பனை செஞ்சுட்டேன். அதனால அடுத்தும் அதை சாகுபடி செஞ்சேன். இப்போ, விளைஞ்சு நிக்கிது. இதுக்கு கொஞ்சமா ரசாயன உரத்தைப் பயன்படுத்தியிருக்கேன். இப்போ இதையும் இயற்கையில சாகுபடி செய்ற வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்ற சேகர், இனிப்பு மக்காச்சோள சாகுபடி முறையைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 4 கிலோ விதை!
'இனிப்பு மக்காச்சோளத்தின் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகை உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ரோட்டோவேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி... ஏக்கருக்கு 5 டிப்பர் என்ற கணக்கில், தொழுவுரம் கொட்டிக் களைத்துவிட வேண்டும். ஓர் அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து, அதன் மையத்தில் ஓர் அடிக்கு, ஒரு விதை வீதம் ஓர் அங்குல ஆழத்தில் நடவுசெய்து, தண்ணீர் கட்டவேண்டும். ஏக்கருக்கு, 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
10 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம்!
விதைத்த மூன்றாம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு, மண்ணின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாளில் களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும். தொடர்ந்து, 10 நாட்களுக்கு ஒருமுறை,200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன தண்ணீரில் கலந்துவிட வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. கதிர் வருவதற்கு முன்பாக, பூச்சிகள் தாக்கினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
75-ம் நாளில் முதல் அறுவடை!
55-ம் நாளில் ஆண் பூவெடுக்கும். 60ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75-ம் நாளில் இருந்து, கதிர் முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90-ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவுக்கு, கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும், அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு... மூன்று, நான்கு கதிர்கள் நிற்கும்.’
ஒரு லட்சத்து 20 ஆயிரம்!
நிறைவாக, ''நான் தினமும் 200 கிலோவுல இருந்து, 300 கிலோ அளவுக்கு அறுவடை செஞ்சு, ஒரு கிலோ 20 ரூபாய்னு உழவர் சந்தையில விற்பனை செய்றேன். ஒரு ஏக்கர்ல கிடைக்கிற 6 டன் கதிர் மூலமா, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
30 ஆயிரம் ரூபாய் செலவு போக, 90 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதை நேரடியா விற்பனை செய்யாம, கமிஷன் கடைக்கு அனுப்பினா, 50 ஆயிரம் ரூபாய்தான் லாபம் கிடைச்சிருக்கும். ஆக, நேரடி விற்பனை என்னை நிமிர வெச்சிருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் சேகர்!
மக்காச்சோளத்தை உடனே விற்கவும்!
''தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து மக்காச்சோளம் சந்தைக்கு வரத்துவங்கும். தற்போது, பீகாரில் இருந்து, மக்காச்சோள வரத்து உள்ளது. இது, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஒரு குவின்டால், மக்காச்சோளம் (உதிர்த்தது) 1,200 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் பற்றிய ஆய்வு முடிவுகள்படி... 12 சதவிகிதத்துக்குக் குறைவான ஈரப்பதம் மற்றும் இரண்டு சதவிகிதத்துக்குக் குறைவான பூஞ்சணத் தாக்குதலோடு இருக்கும் மக்காச்சோளத்துக்கு (உதிர்த்தது), நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு குவின்டாலுக்கு 1,100 ரூபாய் முதல் 1,150 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜனவரி மாதம் முதல் விலை ஏற்றம் இருக்கலாம். மழைக்காலம் என்பதால், அறுவடை செய்த மக்காச்சோளத்தை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும்'' என அறிவித்துள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.
No comments:
Post a Comment