Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 1, 2014

சுற்றுச்சுவரில் கீரை.. உரி பைகளில் காய்கறி…மாடிவீட்டு உழவர்…!


விவசாயம் செய்ய நினைத்தால், ஏக்கர் கணக்கிலான நிலம் தேவையில்லை. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டும் போதும். வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் கூட விவசாயம் செய்யலாம் என்கிறார் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்.

சுற்றுச்சுவர் தோட்டம், உரித்தோட்டம் என விதவிதமான முறைகளில் காய்கறி சாகுபடி செய்திருக்கும் வின்சென்ட் பால்ராஜ், இந்தியன் வங்கியில் 30 வருடம் வேலை பார்த்துவிட்டு, வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டேன். தினமும் மார்க்கெட்டுக்குப் சென்று தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு வருவேன். எங்கள் வீடடில் கீரைகளை விரும்பிச் சாப்பிடுவோம். மார்க்கெட்டில் வாங்கி கொண்டு வரும் கீரைகளை தண்ணீரில் நன்றாக கழுவிய பிறகும், கெட்ட நாற்றம் வந்து கொண்டே இருந்தது. விசாரித்தபோது, கீரை சாகுபடி செய்யும் பகுதியில் ஓடும் ஆற்றுத் தண்ணீரில் சாக்கடையும் கலந்து போகிறது என்று தெரிந்தது. அப்போதுதான், நாமே கீரையை உற்பத்தி செய்யலாம் என்று தோன்றியது. அப்போது ஆரம்பித்ததுதான், இந்த காம்பவுண்ட் விவசாயம் என்கிறார்.
சுற்றுச் சுவரில் விளைந்து நின்ற கீரைகள், உரிகளைப் போல் தொங்கவிட்ட பைகளில் காய்த்து தொங்கிய காய்கறிகள் போன்றவற்றைக் காட்டியபடி சாகுபடி முறையை விளக்கினார்.
9 இஞ்ச் அகலத்திற்கு உள்ள சுற்றுச்சுவரில்தான் செடிகள் வளர்க்க முடியும். சுவற்றின் மேல்பகுதியில், பாலிதீன் ஷீட்டைக் கொண்டு நீள்வடிவ உறையைத தயாரிக்க வேண்டும். இந்த உறையின் மேல்பாகமானது, திறந்து மூடுவது போல் இருக்க வேண்டும்.  பிறகு, பாலிதீன் உறைக்குள் அரை அடி உயரத்திற்கு தேங்காய் நார்க்கழிவுகளைக் கொட்டிப் பரப்பி, அதன் மீது… இலை, தழை, குப்பைகளை தூளாக்கித் தூவ வேண்டும். பிறகு, உறையை மூடித் தைத்தவிட வேண்டும். இந்த உறையானது, சுவற்றின் மீது இறுகப் பற்றி நிற்கும் வகையில், மரச்சட்டங்களைப் பயன்படுத்தி, கொட்டில் போல் உருவாக்க வேண்டும்.
பின்னர், தேவைக்கு ஏற்ப உறையின் மேல்பாகத்தில் துளையிட்டு, அதன் வழியாக காய்கறி விதைகளை விதைத்து, தண்ணீர் அளித்து வந்தால் போதும், குறிப்பிட்ட நாட்களில் அவை வளர்ந்து மகசூல் தரும். இதே பாணியில் கீரையையும் விதைக்கலாம். கீரைக்காக தயாரிக்கும் உறையின் மேல்பாகத்தை மூடத் தேவையில்லை. தொட்டிபோலேயே தயாரித்து, அதில் கீரை விதைகளைத் தூவ வேண்டும். 20 நாட்களில் கீரை வளர்ந்து விடும். இது, தமிழ்நாட்டில் யாரும் செய்யாத யுக்தி. இந்த முறையில் பல வகை கீரைகளை உற்பத்தி செய்யலாம். நான், அரை கீரை, சிறுகீரை ஆகிய இரண்டையும் சாகுபடி செய்கிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் சுற்றுசுவர்களில் இப்படி விவசாயம் செய்ய முடியும்.
கொய்மலர்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அதற்காக நிழல்வலை அமைத்து வளர்த்து வருகிறேன். இந்த நிழல் வலைக்குள்ளேயேதான் உரித்தோட்டத்தை அமைத்துள்ளேன். இரண்டு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட 15 பிளாஸ்டிக் பைகளில் தேங்காய் நார் கழிவுகளை ஒரு அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள இடத்தில் மண்புழு உரம், வெட்டிவேர், மட்கிய இலைக் கழிவுகள் ஆகியவற்றைப் போட்டு நிரப்ப வேண்டும். பிறகு, அதனுள் லேசாக தண்ணீர் விட்டு, தேவையான கீரைகள் மற்றும் காய்கறி விதைகளை தகுந்த இடைவெளியில் ஊன்ற வேண்டும். பின்னர், பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதுதான் உரித்தோட்டம். செடிகள் வளரும் பருவத்தில், இலைகளே மூடாக்கு போட்டு விடுவதால், களைகள் அதிகமாக வளர வாய்ப்பில்லை.
இந்த பிளாஸ்டிக் பை தொட்டிகளை, கொய்மலர்களுக்கான நிழல்வலை பந்தலில், கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கவிட வேண்டும். இப்படிச் செய்வதால் குறைந்த இடத்தில் நிறைய தொட்டிகளை வைக்க முடியும். கீழேயுள்ள இடத்தில் அலங்காரச் செடிகளையும் வளர்க்கலாம்.
மாடி வீட்டு உழவர்!
நான் உரித்தோட்டத்தில் அவரை, தக்காளி, கத்திரி, கீரை மாதிரியான வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்கிறேன். பூச்சித் தாக்குதல் இருந்தால்… வேம்பு, புகையிலை கலந்த மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தயாரித்து, கையடக்க ஸ்பிரேயர் மூலமாக ‘ஸ்பிரே’ செய்திடுவேன். ‘ஹியூமிக் ஆசிட்’டை பயன்படுத்துவதால் மண்ணின் கரிமச்சத்து அதகிமாகிறது.
முழுக்க இயற்கை முறையில் உற்பத்தியாவதால் தரமான, சுவையான காய்கறிகள் கிடைக்கிறது. நான் இந்தத் தோட்டம் மூலமாக வாரம் 2 கிலோ தக்காளி, தினமும் ஒரு கிலோ கீரை உற்பத்தி செய்கிறேன். அதேமாதிரி, கழிவுத் தண்ணீரைத்தான் செடிகளுக்குப் பயன்படுத்துகிறேன். வீட்டுத் தோட்டம் அமைக்க முடிய வில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த முறையைக் கடைபிடித்து, மாடிவீட்டு உழவராக வாழமுடியும் என்றார்.
தொடர்புக்கு
வின்சென்ட் பால்ராஜ்,
செல்போன் : 98940 66303
ஆதாரம்: பசுமை விகடன் 

1 comment: