Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 11, 2013

தனியார் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மறுப்பு?


வேளாண் தொழில் பணிகளை எளிமையாக்கும் தொழில்நுட்பப் பொருள்களைக் கண்டறியும் உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்கள், ஊக்குவிக்கப்படாததால், சரியான தொழில் கண்டுபிடிப்புகள் விவசாயிகளை சென்றடைவதில்லை என புகார் கூறப்படுகிறது.
உழவுத்தொழில், மெல்ல மெல்ல தரணியில், தனது உயிர்பிடிப்பை இழந்து வருகிறது. விவசாயிகளும், போதுமான வருமானம் இல்லாமல் துணைத் தொழிலை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உணவை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக, தொழில்நுட்ப பொருள்கள் இருந்த நிலை மாறி, தற்போது தொழில்நுட்ப பொருள்களைப் பயன்படுத்துவதற்காக, வேளாண் தொழில் உள்ளது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தன்னார்வத்தில் பொருளாதாரத் தடைகளைக் கடந்து, உள்நாட்டில் தனிநபர்கள் தயாரிக்கும் வேளாண் தொழில்நுட்பப் பொருள்களுக்கு முறையான அங்கீகாரமும், ஊக்கமும் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி வருகிறது. இதில், ஓர் உதாரணம்தான், கோவையைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.பாண்டியராஜின், வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு.
இளம் தேங்காயை அரிவாளால் வெட்டாமல், ஒரு துளையிட்டு, உள்ளிருக்கும் இளநீரை குடிக்க ஏதுவாக, ஓர் இயந்திரத்தைத் தயாரித்துள்ளார். இந்த இயந்திரத்தை, எங்கு வேண்டுமானாலும் தூக்கிச் சென்று பயன்படுத்த முடியும். ரூ.4,500 செலவில், இளநீர் வியாபாரிகள் பயன்படுத்த ஏதுவான வசதியில் தயாரித்துள்ளார். ஆனால், அவர் தயாரித்த அந்த இயந்திரத்தை, சந்தைப்படுத்த முடியாமல், தடுமாறி வருகிறார். நீடித்த கரும்பு சாகுபாடி முறைக்கு தேவைப்படும் விதைக்கரும்பை, எளிதில் வெட்டி பணியை துரிதமாக்கும் இயந்திரத்தையும் கண்டுபிடித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த வேளாண் தொழில்நுட்ப பொருள்களை வடிவமைத்துவிட்டதாகவும், அவற்றை சந்தைப்படுத்த முடியாமல், முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறியது:
தேங்காயை வெட்டாமல், இளநீரைக் குடிக்க ஏதுவாக, இதுவரை கண்டுபிடிப்பு இல்லை. நீடித்த கரும்பு சாகுபடிக்கான விதைக்கரும்பு வெட்டும் இயந்திரமும், நவீன முறையில் குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பொருள்களையும் முழுமையாக என்னால் சந்தைப்படுத்த முடியவில்லை. எனது கண்டுபிடிப்புகளுக்கு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் தரவில்லை, என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறியது: உள்நாட்டில் தயாரிக்கப்படும், தனிநபர்களின் சிறந்த வேளாண் கண்டுபிடிப்புகளுக்கு, முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்பது உண்மைதான். விவசாய உற்பத்தியை கூடுதலாக்க உதவும், தனிநபர்களின் கண்டுபிடிப்புகளை இதுவரை வேளாண் பல்கலைக்கழகம் ஊக்குவித்தது கிடையாது.
விவசாயிகளின் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் அளவிற்கு, அவர்கள் கொடுக்கும் தொழில்நுட்பப் பொருள்கள் இல்லை. விவசாயிகளின் அனுபவத்துடன், அவர்களின் கல்விமுறையை ஒருங்கிணைத்து தீர்வு காண்பது இல்லை. மக்காச் சோளப் பயிரை வெட்டுவதற்காக விவசாயிகளுக்கு, வேளாண் பல்கலைக்கழகம் கொடுத்த இயந்திரம், அவ்வளவு நவீன முறையில் வெட்டவில்லை.
அவர்கள் கண்டுபிடிக்கும் வேளாண் உபகரணங்கள், பொருள்களை மட்டுமே விவசாயிகளிடம் கொடுக்க நினைக்கின்றனர். தனிநபர்களின் சரியான கண்டுபிடிப்புகளும் விவசாயிகளிடம் கொண்டு செல்ல, வேளாண் பல்கலை உதவியாக இருக்க வேண்டும் என்றார்.
அங்கீகாரம்: துணை வேந்தர்
தனி நபர்களின் வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு மூலம் ஆய்வு செய்து, பேட்டர்ன் அனுமதி கிடைக்க உதவுகிறோம்.சரியான கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க எப்போதும், வேளாண் பல்கலைக்கழகம் தவறுவதில்லை. தனி நபர்களின் வேளாண் கண்டுபிடிப்பபை ஊக்குவிக்கவில்லை என்பது தவறு என்றார்.

No comments:

Post a Comment