கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...
நமக்கும், நமது குடும்பத்துக்கும் தேவையான, திருப்திகரமான வீட்டு ப்ளான் கிடைத்துவிட்டது. அதற்கான அனுமதிகளும் வாங்கிவிட்டோம் என வைத்துக்கொள்வோம். இதே காலகட்டத்தில் வங்கிக் கடனும் கிடைக்கலாம் என்பது ஏறக்குறைய உறுதியாகும் என தெரிகிற நிலைமையில் நமது கனவு இல்லத்தை நோக்கி தைரியமாக நமது பயணத்தைத் தொடங்குவோம்.
இப்போது நாம் நிதானித்து செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அவை என்னென்ன என்பதைக் கவனித்துவிடுவோம்.
முதலில், நம் கனவு இல்லத்தை நாமே நேரடியாக நின்று கட்டப்போகிறோமா அல்லது பில்டரிடம் தந்து, அவர் மூலமாகக் கட்டப்போகிறோமா என்பதை முடிவெடிக்க வேண்டும். பில்டரிடம் தந்தால் எவ்வளவு செலவாகும், சாதக-பாதகங்கள் என்னென்ன, நாமே ஆட்களை வைத்துக்கட்டினால் எவ்வளவு செலவாகும், அதிலிருக்கும் சாதக-பாதகங்கள் என்னென்ன என்பதை நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
நாமே நேரடியாக களத்தில் இறங்கும்போது, பில்டருக்குத் தரும் ரேட்டைவிட ஏறக்குறைய
10 - 15 சதவிகிதம் வரை செலவைக் குறைத்து வேலையை முடிக்கலாம். ஆனால், அந்த வேலையை செய்வதற்கு நமக்குப் போதுமான நேரம் இருக்கிறதா?, பில்டர் கட்டுகிறமாதிரி நம்மால் தரமாக வீட்டை கட்ட முடியுமா? என்பதையெல்லாம் நன்கு யோசித்து, நல்லதொரு முடிவெடுக்க வேண்டும்.
ஐயோ, அவ்வளவு பெரிய வேலையை எப்படி எடுத்துச் செய்வது என்கிற மலைப்பு வேண்டாம். கட்டட வேலைகள் குறித்த அடிப்படை அறிவு, கட்டுமான தொழில்நுட்பத்தில் புரிதல், நம்பிக்கையான வேலையாட்கள் இருந்தால் இதை எளிதாக முடித்துவிடலாம்.
நண்பரின் அப்பா வீடு கட்டத் தொடங்கிய போது இப்படி ஒரு கேள்வி எழுந்தது. பக்கத்தில் இருந்து கவனிப்பதற்கான சாத்தியமில்லை என்பதால், பில்டரிடம் தரலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், திட்டமிட்டபடி வேலை முடியவில்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகே பில்டர் வீட்டை ஒப்படைத்தார்.
பில்டரிடம் தந்து வீடு கட்ட சொல்லும்போது, நாம், அடிக்கடி சென்று பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால் கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்துவது, கட்டட வேலைகளின் தரம் இவற்றில் பில்டர் எடுப்பதுதான் முடிவு.
பில்டரோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் வீடு கட்டும் வேலை ஆரம்பிக்கிறோம் என்றாலும், பின்னாட்களில் பில்டரோடு மனக்கசப்புகள் வரவும் வாய்ப்புண்டு. இதுதான் இந்தத் தொழிலில் நிலவும் உண்மை.
அதற்காக எல்லா பில்டர்களுமே இப்படித்தான் என்று சொல்ல முடியாது. சொன்னதை நல்லபடியாக செய்து தருகிற பில்டர்களும் இருக்கவே செய்கின்றனர். ஒரே விஷயம், அவர்களைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு, பில்டரைப் பற்றி நாலு இடங்களில் விசாரிக்க வேண்டும். இதற்கு முன்பு அவர் செய்த வேலைகள் என்ன? இவரிடம் ஏற்கெனவே வேலை கொடுத்தவர்களின் அனுபவம் என்ன? என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டும். அக்கம்பக்கம் இருப்பவர்கள் அல்லது நண்பர்கள் அறிமுகம் செய்யும் பில்டர்களைக்கூட நாம் கேள்வி ஏதும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. காரணம், நம்மை அறிமுகப்படுத்துகிறவர்களுக்கு அவர் நன்றாக வீடு கட்டித் தந்திருக்கலாம். ஆனால், நமக்கும் அப்படியே வேலை பார்ப்பார் என்று சொல்ல முடியாது. நாம் கொஞ்சம் அசட்டையாக இருக்கிறோம் அல்லது விட்டுக்கொடுத்து செல்கிறோம் என்கிறபட்சத்தில் அவர்கள் நிறையவே 'விளையாட’ வாய்ப்புண்டு.
ஒரு பில்டர், நல்லவராக, நம்பிக்கையானவராக இருக்கலாம். ஆனால், நமக்கு வீடு கட்டித் தருவது மட்டுமே அவர் வேலையாக இருக்காது. ஒரேசமயத்தில் பத்து இடங்களில் வேலை பார்ப்பவராக இருப்பார். அவர் மேற்பார்வை வேலைகளை மட்டுமே செய்பவராக இருப்பார். அந்தசமயத்தில் அவரது முழுக்கவனமும் நமக்கு கிடைக்காமலே போக வாய்ப்புண்டு. அந்த வேலையை நாமே நின்று செய்துவிட்டால் பணம் மிச்சம்தானே!
மேலும், பில்டரிடம் கொடுத்தால் ஒரு சதுர அடிக்கு குறைந்தபட்சம் 1,300 - 1,500 வரை கட்டுமானச் செலவாகிறது என்றால், நாம் நேரடியாக நின்று கட்டும்போது 1,150 - 1,200-க்குள் கட்டுமான செலவுகளை முடிக்கலாம் என்கின்றனர் அனுபவசாலிகள்.
இதெல்லாம் ஏற்கெனவே கட்டடம் கட்டியவர்களுக்கு அல்லது அதுபற்றி ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவர்களுக்கு சரி. எனக்கு கட்டடம் கட்டுவது பற்றி அனா ஆவன்னாகூட தெரியாது. நான் எப்படி முன்னின்று கட்ட முடியும் என்கிற பயம் உங்களுக்கு வரலாம். நீச்சல் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் தண்ணீரில் இறங்கிதான் ஆகவேண்டும். அதுபோல இறங்கிவிட வேண்டியதுதான். நீச்சல் பயிற்சியின்போது உடன் ஓர் ஆள் இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறோமே, அதுபோல கட்டட வேலை தெரிந்த ஒரு மேஸ்திரியை துணைக்கு நாம் வைத்துக்கொள்ளலாம். அப்படி ஒரு நம்பிக்கையான நபரைப் பிடித்துக் கொள்ளுங்கள். நம் உறவினர்கள் / நண்பர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த மேஸ்திரியாககூட அவர் இருக்கலாம். வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தால் எத்தனை நாட்களில் முடிக்கலாம், கட்டுமான பணியாளர்கள் தொடர்பு, அவசரத் தேவைகளுக்கான தொடர்புகள் எல்லாம் தெரிந்தவராக அந்த மேஸ்திரி இருந்தால் போதும், துணிந்து இறங்கிவிடலாம்.
பொதுவாக, மேஸ்திரிகளிடம் வேலை வாங்க நாம் கூடவே இருக்கவேண்டும். இந்த வேலையை இத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தால்தான் செய்து முடிப்பார்கள். அவர்களாக வேகமாக செயல்பட மாட்டார்கள். எனவே, ஜாக்கிரதை.
சில சமயங்களில் மேஸ்திரிகளே, ''பில்டர் எல்லாம் எதுக்கு சார், உங்க ரேட்டை சொல்லுங்க, நான் முடிச்சு தர்றேன்'' என்பார்கள். மிகக் குறைவான ரேட்டைக்கூட அவர்கள் சொல்லவும் செய்யலாம். ரேட் குறைவாக இருக்கிறதே, தவிர வேலையும் நன்றாகத் தெரியுமே என்கிற காரணங்களுக்காக அவரிடம் வேலை தரலாமே என அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். காரணம், பிற்பாடு ரேட்டை மாற்றிச்சொல்ல நிறையவே வாய்ப்புண்டு. செங்கல் விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறிவிட்டது என பல காரணங்களையும் சொல்வார்கள். இதனால் வெறுப்பாகி, நீங்களே அந்த வீட்டை கட்டுகிற மாதிரி நிலைமையும் வரலாம். எனவே, யோசித்து செயல்படுங்கள்.
சரி, திட்ட மதிப்பு தெரிஞ்சாச்சு. நல்ல மேஸ்திரியையும் புடிச்சாச்சு. இனி வீடு கட்டும் வேலையைத் தொடங்க முடிவு செய்துவிட்டீர்கள். இப்போது நமக்கு கட்டுமான விவரங்கள் குறித்த அடிப்படை அறிவு, நுணுக்கங்கள் தேவை. அதே சமயத்தில், கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடுகள், அதற்கான வாய்ப்புகள், மாற்றுப்பொருட்கள் குறித்து தெரிந்துகொள்வதும் அவசியம்.
No comments:
Post a Comment