தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைத்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கலாம் என வீட்டில் மின்சாரம் தயாரித்து மின் வாரியத்துக்கு விற்பனை செய்யும் விவசாயி சுப்புராயலு தெரிவித்தார்.
கடந்த 5-ம் தேதி, `வீட்டில் மின்சாரம் தயாரித்து மின் வாரியத்துக்கு விற்பனை; விழுப்புரம் அருகே அதிசயிக்க வைக்கும் விவசாயி’ என்கிற கட்டுரையை `தி இந்து’ வெளி யிட்டது. அதன்பின் விவசாயி சுப்புராயலுவின் தொடர்பு எண்ணைக் கேட்டுப் பலர் நம் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டனர். விவசாயி சுப்புராயலுவை அவரது இல் லத்தில் சந்தித்த நம்மிடம் அவர் பேசியதாவது:
``வீடுகளுக்கு மட்டுமல்ல விவசாயத்துக்கும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து 5 குதிரைத் திறன் கொண்ட மோட்டாரை இயக்கலாம். தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியச் சக்தி மானியத் திட்டத்தின் கீழ் கடன் தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதில் மாநில அரசு 30 சதவீதமும், மத்திய அரசு 20 சதவீதம் மானியமாக வழங்குகின்றன.
விவசாயிகள் அந்தந்த வேளாண்மை பொறியியல் துறையை அணுகி மேலும் விவரங்களைப் பெறலாம். வீடுகளுக்குப் பொருத்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு முகமையைத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம். மத்திய அரசு மரபுசாரா எரிசக்தி நிறுவனம் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகளுக்குப் பயிர்க் கடன், சிறு பால் பண்ணைக் கடன்களைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குவதைப்போலச் சூரிய ஒளியில் மின் சக்தி திட்டத்துக்கான கடனையும் வழங்கலாம். தமிழகத்தில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தால் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது.
கடந்த 9 மாதங்களில் என் வீட்டில் தயாரித்த 1,000 யூனிட் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்கியுள்ளேன். கடந்த முறை என்னுடைய பேட்டியில் ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.2-க்கு மின் வாரியத்துக்கு விற்பதாகக் கவனக் குறைவாகச் சொல்லிவிட்டேன்.
அந்த 2 ரூபாய் என்பது மின்சாரத்துக்கான ஊக்கத் தொகைதானே தவிர, விலை யில்லை. ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்த விலைக்குத்தான் வாங்கப் போகிறோம் என மின் வாரியம் இன்னமும் எனக்குத் தெரிவிக்கவில்லை. சூரிய ஒளியில் தயாராகும் மின்சாரத்தை மீட்டர் மூலம் கணக்கிட்டு வீட்டுக்கு வெளியே உள்ள மின் கம்பத்தில் உள்ள கம்பி மூலமே அனுப்புகிறேன்’’ என்றார்.
சூரிய ஒளி மின்சாரம் தொடர்பாக மேலும் விளக்கம் பெற…
சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து அரசுக்கு வழங்குவது தொடர்பாக யாரை அணுகுவது என்று தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின், விழுப்புரம் மாவட்டப் பொறியாளர் யுவராஜ் விளக்குகிறார்:
விவசாயத்துக்கு உரிய சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய - வேளாண்மை பொறியியல் துறையில் தற்போது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்க மாவட்டத் தலைநகரங்களில் உள்ள - தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையைத் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை அலுவலகத் தொடர்பு எண்: 044-28236592 என்ற எண்ணிலும்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளவர்கள் 7708064731 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.teda.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment