ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.
இயற்கை உணவுகள்:
ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.
பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.
நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.
அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.
“சென்ஈஸ்ட்ரோஜன்களை’ தவிர்க்க வேண்டும்:
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
No comments:
Post a Comment