Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 31, 2014

உயிரை பறிக்கும் காற்றுப்பை... உஷாரான கார் நிறுவனங்கள்!


2009 ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி, Ashley Parham தன்னுடைய 2001 ஹோண்டா அக்கார்டு காரை அவருடைய பள்ளி பார்க்கிங் பகுதியில் நகர்த்தும்போது, இன்னொரு காரின்மீது லேசாக மோத, அந்த இடத்திலேயே கழுத்து அறுபட்டு உயிரிழக்கிறார் ஆஷ்லி.

2012ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை காலம். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஒரு மாலை நேரம், தன்னுடைய 3 குழந்தைகளுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு 2001 மாடல் ஹோண்டா அக்கார்டு காரை ஓட்ட ஆரம்பிக்கிறார்  Guddi Rathore. ஒருவளைவில், முன்னே வந்த டெலிவரி வேன் மீது லேசாக இடித்துவிட, அந்த இடத்திலேயே தன் 3 குழந்தைகளின் முன்னிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துவிடுகிறார்  Guddi Rathore.


இதுபோன்று ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் ஹோண்டா கார்களில் மேலும் 30 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள அனைத்து கார் நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 139 பேருக்கு இதேபோன்று பலத்த காயங்கள், பல்வேறு நிறுவனங்களின் கார்களில் பயணிக்கும்போதோ/ஓட்டும்போதோ ஏற்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நிஸான், ஹோண்டா என இரண்டு கார் நிறுவனங்கள் 11,338 கார்களை திரும்ப அழைத்திருக்கிறார்கள். ஆட்டோமொபைல் துறையில் இதை 'Recall' நடவடிக்கை என்று அழைப்பார்கள். இந்த நடவடிக்கைகளுக்கும் மேலே கூறப்பட்ட அந்த விபத்துகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த விபத்துகளில், காரின் காற்றுப் பை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெடித்து, ஸ்டீயரிங் வீலுக்குள் உள்ள  உலோகப்பாகங்கள் முன்னே அமர்ந்திருப்பவர்களின்மீது வீசப்பட்டு, அவர்களின் கழுத்து நரம்புகள் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

நிஸானும், ஹோண்டாவும் கார்களைத் திரும்ப அழைத்ததற்கு காரணமும் அதேதான். அது Airbag என்று அழைக்கப்படும் 'காற்றுப் பை'. வரும் நாட்களில் இந்தியாவில் இன்னும் சில கார் நிறுவனங்கள் தங்களுடைய கார்களை இதே காற்றுப் பைக்காக திரும்ப அழைக்க இருக்க வாய்ப்பிருக்கின்றன. ஏன்? வேலியே பயிரை மேய்ந்த கதை இது!
இன்றைய கார்களின் மிக அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக இருப்பவை இரண்டு தொழில்நுட்பங்கள். ஒன்று சீட் பெல்ட், மற்றொன்று Airbag என்று அழைக்கப்படும் காற்றுப் பை. வெளிநாடுகளில் காற்றுப் பைகள் அனைத்து கார்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. நம்நாட்டில், 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை கொண்டிருக்கும் கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால், அவற்றின் விலை உயர்ந்த மாடலில் மட்டும்தான் காற்றுப்பை இருக்கும். சொகுசு கார் என்றால் மட்டும், ஸ்டாண்டர்டாகவே காற்றுப் பை பொருத்தப்பட்டே வரும்.

கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த காற்றுப் பையையும் மற்ற பாகங்கள்போல் சப்ளையர்கள் செய்து கொடுப்பார்கள். அப்படி உலகம் முழுக்க உள்ள கார்களில் சுமார் 20 சதவிகிதம் கார்களின் காற்றுப் பைகள் Takata எனும் ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்பு. இவர்கள் தயாரித்த காற்றுப் பைகளில் 2001ஆம் ஆண்டு முதல் 2008 வரை தயாரிக்கப்பட்டவைகளுள் சில பைகள் தயாரிப்புக் குறைபாடு கொண்டவை. இவை மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, மக்களைக் கொன்று விடுமோ என்ற பயத்தில்தான் இந்த 'திரும்ப அழைக்கும்' நடவடிக்கை.

காற்றுப் பையில் என்ன பிரச்னை?

விபத்தின்போது விரிவடைந்து, ஓட்டுனரையோ, அல்லது பயணியையோ காக்கவேண்டும் என்பதுதான் காற்றுப் பைக்கான வேலை. ஆனால், Takata தயாரித்த கோளாறுள்ள காற்றுப் பைகள் வெடித்தால், அதன் கீழே இருக்கும் இன்ஃப்ளேட்டரின் உலோகப் பாகங்களையும் சேர்த்து முகத்திலும், உடலிலும் வீசிவிடும். இதனால், காற்றுப் பை முன்னே அமர்ந்திருப்பவருக்கு தீவிர காயங்கள் ஏற்படுத்திவிடும். உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிடமுடியும்.

முதலில் Takata நிறுவனம், தன்னுடைய தொழிற்சாலைகளில் காற்றுப் பைகளில் பயன்படுத்தப்படும் propellant கெமிக்கல்களை முறையாகக் கையாளவில்லை என்பதால், காற்றுப் பைகளுக்குள் இருக்கும் இந்த கெமிக்கல்கள் அதிக அழுத்தத்தில் இருக்கும் என்றும், அவை வெடிக்கும்போது மிக உயர் அழுத்தத்தில் வெடிக்கும் என்றும் கூறியது. பிறகு திடீரென்று பல்டியடித்து காற்றில் ஈரப்பதம் குறைந்தால், இதுபோன்று வெடிக்கும் என்று கூறி பீதியைக் கிளப்பியது. 2002ல் மெக்ஸிகோவில் இருக்கும் Takata தொழிற்சாலையில், Defect rate எனப்படும் 'குறைபாடு விகிதம்' மிக அதிகமாக இருந்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அதாவது 10 லட்சம் காற்றுப் பைகளில் சுமாராக 70 காற்றுப் பைகளில் பிரச்னை இருந்ததாம்.
இப்போதுவரை, காற்றுப் பைகள் இப்படி மோசமான நிலையில் வெடித்ததற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

2001ஆம் ஆண்டில் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு கார் நிறுவனங்கள் இதே பிரச்னைக்காக கார்களை திரும்ப அழைத்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், 2012ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்குபின் அமெரிக்க அரசின் NHTSA (National Highway Traffic Safety Administration) விழித்துக்கொள்ள, அனைத்து கார் தயாரிப்பாளர்களையும் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தது. அதிபர் ஒபாமாவின் நேரடிப்பார்வையின் கீழ் இந்த விஷயம் உள்ளது. இப்போது பிரச்னையுள்ள Takata காற்றுப் பைகளை வாங்கியுள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா? டொயோட்டா, ஹோண்டா, மாஸ்டா, பிஎம்டபிள்யூ, நிஸான், மிட்சுபிஷி, சுபாரு, கிரைஸ்லர், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள். இவற்றின் 78 லட்சம் கார்கள் அமெரிக்காவில் இப்போது திரும்ப அழைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக அளவில் கோடிக்கணக்கான கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுவிட்டன. உலகிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளர்ந்து வருகிறது இந்த பிரச்னை.

இப்போது திரும்ப அழைக்கப்பட்ட கோடிக்கணக்கான கார்களில் மாற்றிப் பொருத்துவதற்கான காற்றுப் பைகள் Takata நிறுவனத்திடம் இருக்கிறதா? எப்படி இந்த பிரச்னையைக் கையாளப்போகிறது Takata?

இந்தியாவில் இப்போதுதான் நிஸான், ஹோண்டா என இரண்டு நிறுவனங்கள், பிரச்னையை சரி செய்வதற்காக கார்களை திரும்ப அழைத்திருக்கின்றன. இன்னும் இந்தியாவில் இருக்கும் எத்தனை கார் நிறுவனங்களுக்கு Takata காற்றுப்பைகளை சப்ளை செய்தது என்று தெரியவில்லை.

மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வாசகர், 'கார்களை திரும்ப அழைக்கலாம். உயிரை திரும்ப அழைக்க முடியுமா?' என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை, கார் நிறுவனங்களுக்கு இருக்கிறது!

No comments:

Post a Comment