உணவுக்குக் காய்கறி... மருந்துக்கு மூலிகைகள்...
மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!
பல்பொருள் அங்காடிகளில்... பளீர் விளக்குகளின் வெளிச்சத்தில்... பளபளக்கும் காய்கறிகளை ஒரு வாரத்துக்குத் தேவையான அளவுக்கு மொத்தமாக வாங்கி, அவற்றைஎல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து, சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளுக்குப் பழக்கம். ஏன், கிராமங்களில்கூட இந்தப் பழக்கம் இப்போது மெள்ள தொற்றிவருகிறது. இத்தகையோருக்கு மத்தியில், பரபரப்பான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வெட்டூர்ணிமடத்தில் உள்ள தங்கள் வீட்டில், மாடித்தோட்டம் அமைத்து, தினமும் புத்தம்புதிய காய்கறிகளைப் பறித்து உண்டு, ஆரோக்கியத்தைக் கடைபிடித்து வருகிறார்கள், ஆட்ரிஜோவின் குடும்பத்தினர்!
''16 வருஷத்துக்கு முன்ன அமைச்சது, இந்த மாடித்தோட்டம். இப்போ, நான் கோயம்புத்தூர்ல, பொறியியல் கல்லூரி துணைப் பேராசிரியரா இருக்கறதால... இதுல அதிகம் ஈடுபாடு காட்ட முடியல. லீவு கிடைச்சா போதும்... தோட்டத்தைப் பார்க்கறதுக்காகவே உடனே கிளம்பி வந்துடுவேன். அப்பாவும் அம்மாவும்தான் முழுக்க இந்த மாடித்தோட்டத்தைப் பாத்துக்கறாங்க'' என்று உற்சாகமாகச் சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைத்தது பற்றிய அனுபவத்தை, தொழில்நுட்பத் தகவல்களோடு கலந்து சொல்ல ஆரம்பித்தார்.
கழிவுப்பொருட்களில் காய்கறிச்செடிகள் !
''எங்க வீட்டு மாடி, 600 சதுர அடி. இதுல சில மூலிகை உட்பட இருபதுக்கும் மேலான செடி வகைகள் இருக்கு. வீட்டுத் தேவைக்காக வெளியில் இருந்து விலை கொடுத்து காய்கறி வாங்கறதை நிறுத்தி, 15 வருசம் ஆச்சு. மாடித்தோட்டம் அமைக்கறப்போ தண்ணி இறங்கி, கட்டடம் சேதமாகாம இருக்கறதுக்காக... தொட்டிகளுக்கு அடியில, ரெண்டு அடுக்கா செங்கல் வைக்கணும். மண்தொட்டிதான்னு இல்லாம, மண் கொட்டி வைக்க முடியுற எதுல வேணாலும், செடிகளை வளக்கலாம். நாங்க எண்ணெய் கேன்களைக் கூட ரெண்டா வெட்டி செடி வெச்சுடுவோம். அப்பா ஃபிரிட்ஜ் மெக்கானிக். அதனால, அவர் கழட்டிப் போடுற உதிரி பாகங்கள்லகூட செடி வளர்க்கிறோம்.
தொட்டி, பாத்திரம், வாளினு செடி வைக்கறதுக்காக எதைத் தேர்ந்தெடுத்தாலும்... அதுல நாலு கதம்பையை (தேங்காய் மட்டை) வெச்சு, 5 கிலோ மண், ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கையளவு செங்கல்பொடி போட்டு, செடிகளை நட்டுடுவோம். சமையலறைக் கழிவுகள், கழிவு நீர் எல்லாம் எங்க வீட்டுப் புழக்கடையிலதான் சேருது. அங்க இருந்து மண் எடுத்துதான் செடி வளர்க்கிறோம். இப்படி சத்தான மண் கிடைச்சுடறதால... செடிகள் நல்லா வளருது.
செடிகளுக்கு உரமாகும் கழிவுகள் !
வீட்டுல நிறைய கலர் மீன்கள் வளர்க்கிறோம். மீன்தொட்டியில 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் மாத்தணும். அந்தத் தண்ணியையும் வீணாக்காம செடிகளுக்கு ஊத்திடுவோம். அதுல மீன்கழிவுகள் கலந்து இருக்கறதால... அது நல்ல திரவ உரமா ஆயிடுது. எங்க சொந்தக்காரர் ஒருத்தர் முயல் வளக்குறார். அவர் வீட்டுல இருந்து முயல் கழிவுகளை எடுத்துட்டு வந்து... இருபது லிட்டர் தண்ணீருக்கு, ஒரு கிலோ முயல் கழிவுனு ஒரு கேன்ல கலந்து வெயில்ல வெச்சுடுவோம். 15 நாட்கள்ல அதுல நல்லா பாசி பிடிச்சுடும். அதை அப்படியே செடிகள்ல ஊத்திடுவோம். அதனால, பயிர்களுக்கு நைட்ரஜன் சத்து அதிகமா கிடைச்சுடுது. இந்த மாதிரி இயற்கையா கிடைக்கிற பொருட்களை மட்டும்தான் ஊட்டத்துக்காகப் பயன்படுத்துறோம். மத்தபடி, தினமும் காலையில... சாயங்காலம் தண்ணீர் ஊத்துறதோட சரி.
எங்க தோட்டத்தில பீன்ஸ், கோழிஅவரை, மிளகாய், சுண்டைக்காய், வெண்டை, பாகற்காய், சிவப்புக்கீரை, வழுதலங்காய், பிரண்டை, கோவைக்காய்னு நிறைய காய்கறிகள் இருக்குது. மாடியில விளைஞ்சுருக்குற காய்களை வெச்சுதான் நாங்க சமையலை நிர்ணயிப்போம். அதேமாதிரி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, துளசி, செம்பருத்தி, மருதாணி, கீழ்க்காய்நெல்லி (கீழா நெல்லி)னு மூலிகைகளும் நிறைய நிக்குது.
பயிர்களைக் காக்கும் சிலந்தி-ஓணான்!
முழுக்க இயற்கை முறைனாலும், அப்பப்போ பூச்சிகளும் எட்டிப் பாக்கும். அதுக்காக ரசாயன மருந்தெல்லாம் அடிக்க வேண்டியதில்லை. செடிகள்ல வலை கட்டுற சிலந்தியை மட்டும் கலைக்காமல் விட்டுட்டாலே போதும்... பூச்சிகளை அது பாத்துக்கும். அதேமாதிரி செடிகளைத் தேடி வர்ற ஓணான்களையும் நாங்க விரட்டறதில்லை. அதுகளும் பூச்சி, புழுக்களைப் பிடிச்சு சாப்பிட்டுடறதால்... பூச்சி பிரச்னை இருக்கறதில்லை. இந்த மாதிரி சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கடைபிடிச்சாலே... நல்ல முறையில காய்கறிகளை உற்பத்தி பண்ணி சாப்பிட்டு, ஆரோக்கியமா வாழமுடியும்'' என்று சொன்ன ஆட்ரிஜோவின், மாடித்தோட்டம் அமைக்கும் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைக்கான தீர்வு ஒன்றையும் சொன்னார்.
வாடாமல் காக்கும் கதம்பை!
''நாலு நாள் வெளியூர் போனா... செடிகள் வாடிப் போயிடுமேனுதான் நிறைய பேர் மாடித் தோட்டம் போடத் தயங்குறாங்க. ஆனா, அதுக்காகக் கவலைப்படத் தேவையில்லை. அந்தத் கவலையை... கதம்பை (தேங்காய் மட்டை) பார்த்துக்கும். ஆமாம்... ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீரை அது எப்பவும் கிரகிச்சு வைச்சுக்கிடும். அதனால கவலையேயில்லை'' என்றவர், நிறைவாக...
இதயத்துடிப்பை சீராக்கும் செம்பருத்தி!
''செம்பருத்தி இலைகளை தினமும் சாப்பிட்டா... இதயத்துடிப்பு சீராகிடும். செம்பருத்தியையும், மருதாணியையும் சேர்த்து அரைச்சு தலையில் தடவினா, இளநரை கட்டுப்படும். கீழ்க்காய் நெல்லி... மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. சோற்றுக் கற்றாழைக்குள்ள இருக்குற 'ஜெல்’லை தினமும் ரெண்டு துண்டு சாப்பிட்டா தோல் சம்பந்தமான நோய்களும், உணவுக்குழாய் பிரச்னைகளும் வரவே வராது. மாடித்தோட்டத்தால, காய்களுக்குக் காய்களும் ஆச்சு. மருந்துக்கு மருந்தும் ஆச்சு. இதைவிட வேற சந்தோஷம் என்ன இருக்க முடியும்?'' என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்!
உண்மைதானே!
No comments:
Post a Comment