Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 1, 2014

கனவுகளும் மூடத்தனமும்


- பாவலர் மணிவேலன்
ஒரு குரல் கூவுமாகில், உற்றதோர் சாவு நேரும்; இரு குரல் கூவுமாகில், இருந்ததோர் பொருளும் போகும் எனப் பகலெல்லாம் பொந்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆந்தை, இரவில் உணவு தேட முயலும்போது, எழுப்பும் ஒலியை வைத்தே சோதிடம் கூறுவது நம் நாட்டில் இன்றும் நடைபெறுவது வழக்கமாகவே உள்ளது.
பல்லி கத்தினாலும் அது எந்த திசையிலிருந்து  கத்துகிறதோ, அதை வைத்து, நடக்கபோவதை முன் கூட்டியே உரைப்பதாக நினைத்து, வாய்க்கு வந்ததைப் பாட்டு வடிவில், நெருஞ்சிமுள் நடைபாதையில் தூவுவது போல உரைக்கின்ற அறிவிலிகளும் உள்ளனர். இவை மட்டும் அல்ல, தும்பினாலும், நற்சகுனம், தீச்சகுனம் உரைப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.

அரசியல் வாணர்கள், பற்பலர், சோதிடம் பார்த்தே தேர்தலில் நிற்கின்ற அதிசயமும் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.
கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கையாகவே (Prenomination) மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கற்றறிந்த அறிஞர்களும் கனவை இவ்வாறுதான் நம்பிக் கொண்டுள்ளனர்.
ஆங்கில நாடக மேதையாக சேக்சுபியரும், தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் போன்றோரும், இதே நம்பிக்கையில், தங்கள் கதையில் வரும், கதைமாந்தர் (Character), நுட்பமாய் உணர்ந்து கொள்ளக் கனவுகளைப் படைத்துள்ளனர். கனவு எப்படி தோன்றுகிறது  என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், மனம் (Mind) என்பதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
வியான்னா நகரில் மருத்துவராகப் பணியாற்றிய பின்னர், இடலரால் அமெரிக்காவுக்கு விரட்டியடிக்கப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்த சிக்மண்டு ஃபிராய்டு (Sigmond Freud) மனம் என்பது என்ன, அது எத்தனைப் பிரிவுகளாகப் பிரிந்து நின்று, என்னென்னப் பணியாற்றுகின்றன என்பதை இருபது ஆண்டுகள் ஆய்ந்து,  சிக்மன்டு ஃபிராய்டு அவரின் கனவுக் கொள்கைகளும் (Sigmond Freud and his Dream Theories) கனவின் பொருளை உணர்ந்து கொள்ளுங்கள் (Interpretation of Dreams) என்னும் நூல்களைப் படைத்துள்ளனர்.
மனம் என்பதைக் கற்பனை வடிவமாக (Imaginary Diagram) வரைந்து காட்டி, விளக்கியுள்ளார்.
இங்கே Ego என்பது வெறும் மனம் (Mind) என்னும் பொருளில்தான் சொல்லப்படுகிறது.  என ஆங்கிலத்தில் சொல்லப்படும் பொருளில் அன்று.
மனத்தை
1)    விழிப்பு மனம் (மனம், மனச் சான்று)
2)    சார் மனம்
3)    நனவிலி மனம் எனப் பிரிக்கலாம்.
நாம், பகலில் விழிப்பு நிலையில் பணியாற்றும்போது இருக்கும் மனம் விழிப்பு மனம் என்றும், உறக்கமும் விழிப்பும் கலந்த அறிதுயில் நிலையில் இருக்கும் மனத்தை சார் நனவு மனம் என்றும், உணர்வு மங்கிப் புலன்கள் அடங்கி,  உறக்க நிலையில் உள்ள மனம், நனவிலி மனம் என்றும் உணர்ந்து கொள்ளலாம்.
விழிப்பு நிலையில் இருமனங்கள் செயல்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. மனம் (Ego) : : இது தன்னலமுடையது; தனக்குப் பிடித்த எதையும், கைப்பற்றிக் கொள்ளவே விழையும், அகவை முதிர்ந்த ஒரு கிழவன் வீட்டின் முன் கூடத்தில் அமர்ந்துள்ளான். சாலை வழியாக ஓர் அழகான, பதினெட்டு அகவை நிரம்பிய, பள்ளிக்கூட மாணவி தன் தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு போகிறாள். இக்கிழவன் இளமையிலேயே மனைவியை இழந்தவன். அந்த பெண் இவன் உள்ளத்தில் இடம் பிடித்து விடுகிறாள். அவளை அடைய வேண்டுமெனக் கட்டுப்படுத்த முடியாத ஆசைக்கு ஆளாகிறான்.
இவன் நிலையை அறிந்த மனச்சான்று, மனத்தைப் பார்த்து, உன் வயதென்ன? அப்பெண்ணின் வயதென்ன? உனக்கு பெயர்த்தி (பேத்தி) அகவையிலுள்ள ஒரு பெண்ணை நீ விரும்புவது சரியா? குமுகாயம் (சமூகம்) என்ன சொல்லும்? சீ!சீ! எனக் கண்டிக்கிறது! மனச்சான்றுக்குப் பயந்து, அந்த ஆசையை இவன் விட்டொழிக்காமல் நனவிலி மனத்தின் இருண்ட பகுதிக்குள் ஒளித்து வைத்து விடுகிறான்.
மனம் தன்னலத்துடன் ஆசைப்படும் எதையும் அடைவதிலேயே குறியாக இருக்கும்; மனச்சான்று தன் குமுகாயம் ( சமூகம்) என்ன சொல்லுகிறதோ, அதை மட்டுமே ஏற்று, மனத்தை நல்வழிப்படுத்தவே முனைகிறது. குமுகாயம் கூறும் அறவழி என்பதை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. மறவழியை விட்டொழிக்கச் சொல்லி, மனத்தை வற்புறுத்துகிறது. எனவே, மனச்சான்று, குமுகாயக் காவலன் (Guardian of the Society) வேலையைச் செய்கிறது. மனச்சான்று கூறும் அறவுரையை ஏற்றுக் கொள்பவர்கள், குமுகாயத்தின் நல்லவர்கள் எனப் போற்றப்படுவார்கள். மனச்சான்றின் அறவுரையை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் ஆசையை வலிந்து நிறைவேற்றிக் கொள்பவர்கள் மிண்டவர்கள் (Rowdies)  திருடர்கள், கொலைஞர்கள், கற்பழிப்பாளர்கள் என்னும் முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப் படுகிறார்கள். குமுகாயத்தால் காறி உமிழப்படுகிறார்கள். இவ்விரு வகையினரின் இடையே ஓர் இனம் உள்ளது. அவ்வினம், தன் இச்சையைக் கனவில் நிறைவேற்றிக் கொள்ளும்.
2. கனவு எவ்வாறு தோன்கிறது?
மனைவியை இழந்த கிழவன், தன் வீட்டின் முன் கூடத்தில் அமர்ந்து, சாலை வழியே செல்லும் பதினெட்டு அகவை நிரம்பிய, அழகிய மாணவியைப் பார்த்து காம இச்சையால் உந்தப்படுகிறான். நாள் தோறும் சாலைவழியாகச் செல்லும் அவளைக் கண் கொட்டாமல்  பார்த்துக் காமம் மீதூறத் துடிக்கிறான்.
இக்கிழவன் தன் தகுதிக்கு மீறிய காமவுணர்வால் துடிப்பதை கண்டு, மனச் சான்று கண்டித்தவுடன் அவ்வாசையை விட்டொழிக்காமல், அதை நனவில் மனத்துள் பதுக்கி வைக்கிறான். விழிப்பு நிலை மாறி அறிதுயில்; நிலை வரும் பொழுது, நனவில் மனத்தில் பதுங்கியுள்ள அந்த ஆசையை சார் நனவு மனத்திற்குக் கொண்டு வருகிறான். சார் நனவு மனத்திரையில், இவன் ஆசை நிறைவேற்றத் தொடங்குகிறது. அப்பொழுது, மனச்சான்று உறக்க நிலையை அடைத்துவிடுவதால் கண்டிப்பதில்லை!
விரிந்தசார் நனவு மனத்திரையில் அப்பெண் இவனை பார்த்துச் சிரிக்கிறாள். பக்கம் வருகிறாள். இருவரும் கைகளைப் பிணைத்துக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டு, கடற்கரை மணலில் நடந்து சிரித்துப் பேசிக் கொண்டு, கடற்கரை மணலில் நடந்து சென்று, அங்கே கைவிடப்பட்ட படகு மறைவில் அமர்ந்து கொள்ள, இவன் மடியில் இளம்பெண் தலை சாய்க்க... இவன் இச்சை மெல்ல, மெல்ல நிறைவேறி விடுகிறது! இங்கே, வெளிப்படையாகச் சொல்ல முடியாத இன்பத்தைக் கிழவன் நுகர்கிறான்! இந்நுகர்ச்சியை, மனம் மட்டுமில்லாது உடலும் பெறுகிறது! எனவே உண்மை போலவே தெரிகிறது. நாடகத்தில் வேடமிட்டு நடிக்கும் நடிகன் வேறு; பார்வையாளர் வேறு, ஆனால் இந்நிகழ்வில் நடிப்பவரும் பார்வையாளரும் ஒருவரே! இந்நிகழ்வைத்தான் கனவு என்கிறோம். கனவுகள் அனைத்தும் பாலுணர்வு அடிப்படையிலேயே தோன்றுகின்றன என்றும் பாடல், இசை, நாட்டியம், ஓவியம், கவிதை போன்றவை இன்பக்கலைகள் (இவ்வித கலைகள்) அனைத்தும் தோன்றுவதற்குப் பாலுணர்வே  அடிப்படையாகும் என அழுத்தமாகப் பேசுவதைக் கண்ட ஃபிராய்டின் மாணவர்களாகிய  யுங் (jung) அட்லர் (Adlar) இருவரும் பிரிந்து சென்று, மாந்தன் மனநிலையை அழுத்தும் பிற உணர்வுகளின் அடிப்படையிலும் கனவுகள் தோன்றும் என்றும், பழங்காலம் மாந்தனின் நிறைவேறாத ஆசைகளின் அடிப்படையிலேயே, கனவுகள் போன்று புராணங்கள் தோன்றினவென்றும் கூறினர்.
குமுகாயத்தில் உண்மையில் நடைபெற முடியாத நிகழ்வுகள், புராண கதையில் நிறைவேற்றிக் கொண்டு ஆதிகால மாந்தன், கனவில் போலவே, மனநிறைவடைந்தான் எனக் கூறினர்.
கனவுக்குப் பலன் உண்டா?
நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றன.
குடும்பத்தில் ஒரு பெண் கூறுகிறாள்:
அத்தை! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!
இதற்கு அத்தை சொல்லுகிறாள்:
அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் சடங்காகி அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!
பெயரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்:
தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது, நான்  பணத்தில் புரள்வதைப் போல் கனவு கண்டேன்; விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன், இதற்கு என்ன பலன்?
தாத்தா சொல்லுகிறார்:
உனக்கு நோய் வரும் என தெரிகிறது.
கனவுகள் தோன்றுவதையும் அவற்றுக்கு  என்ன பொருள்  என்பதையும் நான்  எழுதியுள்ள ஆய்வு நூலான அவல நாடக நோக்கில் சிலம்பு என்பதில் விரிவாக விளக்கியுள்ளேன்.
3.கனவுகளின் பொருள் புரிந்து கொள்ளுவது எப்படி?
கனவை புரிந்து கொள்ளுங்கள் (Interpretation of Dreams) என்னும் ஃபிராய்டு அவர்கள் எழுதியுள்ள நூலை படித்தால் கனவைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.
தீப்பிடித்து வீடு எரிவது போல் கனவு வந்தால், வீட்டிலுள்ள, அல்லது மிக நெருக்கமான வீட்டுப் பெண் சடங்காகி அமர்வாள் என்னும் கனவை எடுத்துக் கொள்வோம். இம்மாதிரிக் கனவு தோன்றக் காரணம் என்ன? வீட்டில் வயதுக்கு வரும் நிலையில் ஒரு பெண் உள்ளாள், இவள் விரைவில் சடங்காகி விடுவாள் என்னும் நினைவோடு தாய் உறங்கி விடுகிறாள். சடங்காகும் போது ஏற்படும் இரத்தக் கறை; செந்நிறமுடையது. இந்நிற அடிப்படையில் , கனவு தோன்றி இருக்கிறது. தீ செந்நிறமுடையது. சிவப்பு நிறம் மனத்தில் பதிந்த நிலையில் உறங்கிய தாய், வீடு, தீப்பற்றிச் செந்நிறச் சுடருடன் எரிந்ததாக கனவு வருகிறது.
கனவு தோன்றுவதற்குக் காரணம்  அடிப்படை (Motive)  உண்டே அல்லாமல், முன்னெச்சரிக்கை  அன்று! எல்லாக் கனவுகளுக்கும் அடிப்படை உண்டு.
ஓர் இளைஞர் அழகிய கைப்பெட்டி சூட்கேசு  வாங்குவதுபோல் கனவு வந்தால், அவன் அழகிய பெண் ஒருத்தியை மணந்து கொள்ள விரும்புகிறான் எனப் பொருள் கொள்ளலாம்.
ஒரு பெண், உறுதியான கத்தி, கோடுபோடும் அடி (ரூல் தடி) ஆகிய ஏதாவதொரு பொருளை வாங்குவதாகக் கனவு கண்டால், உடல் வலிவான இளைஞனை மணந்து கொள்ள ஆசைப்படுகிறாள் எனப் பொருள்படும்.
கனவு, கடவுளால் அனுப்பப்படும் எச்சரிக்கை  அன்று.
ஏதாவதொரு அடிப்படையில் (Motive) அடக்கப்பட்ட ஆசைகள், நிறைவேறாத விழைவுகள் ஆகியவற்றால், சார் நனவு மனம் கற்பனையாக அடுக்கிக் கட்டும் பொய் மாளிகை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாதிரி கனவுகள் வருவதால், மன இறுக்கத் திலிருந்து, மாந்தன் விடுபடுகிறான்(Cathersis)
மனச்சுமை குறைந்து ஆறுதலடைகிறான்!

No comments:

Post a Comment