இந்த அடர்வனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் பழங்குடி மக்கள்.
இதில் ஒரு பிரிவினரான புலையர் இன மக்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் மலைத்தடத்தில் உள்ள சின்னாறு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயம், தேன் சேகரிப்பு, மூலிகை கசாயம் தயாரிப்பு என்று பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். இந்த மக்களின் இருப்பிடங்களுக்கு செல்ல விரும்பினால், வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதும், ஆபத்தான பல காட்டாறுகளை கொண்டதுமான மலைகளை ஏறி இறங்கினால்தான் முடியும்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகம் என்றால் என்ன என்பது இவர்களுக்கு தெரியாது. காட்டில் விவசாயம் செய்தும், கல் வீடு கட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென்று ஒரு பேச்சு மொழியும், வாழ்க்கை முறையும் உண்டு. ஆனால் காலச் சக்கரத்தில் அவர்களும் ஒரு ஆரக்கால் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கல் வீடுகள் எல்லாம் தகர வீடுகளாக ஜொலிக்கின்றன.
மின்சார வசதி துளியும் இல்லாத இவர்கள் வீட்டில் இன்று பல்பு எரிகிறது. தொலைக்காட்சிப்பெட்டியில் மானாட மயிலாடவும், சீரியல்களும் மக்களை கட்டிப் போட்டு நிற்கிறது. சீரியல்களைப் பார்த்து சிணுங்கி அழுகிறார்கள். சினிமா பார்த்து ரசித்து மகிழ்கிறார்கள். செய்திகள் கேட்டு உலக நடப்பு அறிகிறார்கள். அடர் வனமும் சுடர் வனமாய் மின்னொளியில் ஜொலிக்கிறது. இது சாத்தியமானது எப்படியென்றால் எல்லாம் சோலார் கொடுத்த உபயம்தான் என்கிறார்கள்.
மலைவாழ் மக்களின் அனைத்து கிராமங்களுக்கும் சோலார் பேட்டரியுடன் கூடிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நினைத்த பொழுது எல்லாம் மழை பொழியும் வனத்தில் விறகு நனையும், அடுப்பு புகையும் அந்த கவலை அவர்களுக்கு இல்லை இப்பொழுது. அடாது மழை கொட்டினாலும் விடாது அடுப்பெரிக்க சாண எரிவாயு மற்றும் பயோ கேஸ் கலன்கள் கொண்ட அடுப்புகள் சுடசுட சோறு கொடுக்கிறது.
பல்வேறு சமூக அமைப்புகள் வனத்துறையுடன் இணைந்து, அவர்களை தேடி சென்று மருத்துவம், கல்வி, விவசாயம், விற்பனை வாய்ப்பு என்று ஆலோசனைகள் கூறி, அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து வருவதால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இருந்தாலும் நம்மில் ‘மூத்தகுடிகளான’ அவர்கள் விவசாயம், கலாச்சாரம் உள்ளிட்ட விஷயங்களில் புதுமை நுழையாமல் பழமை காத்து வருகின்றனர். அதுதான் அவர்களின் அடையாளமும் கூட.
-ஜி.பழனிச்சாமி
No comments:
Post a Comment